

மதி கரும்பலகையின் அருகில் நின்று ஏதோ செய்து கொண்டிருந்தாள். மற்றவர்கள் அவளைப் பார்த்து வாய்விட்டுச் சிரித்துக் கொண்டிருந்தனர். எழில் வகுப்பறைக்குள் நுழைந்தார். மதி உடனே ஓடிச்சென்று தனது இருக்கையில் அமர்ந்தாள்.
அனைவரும் சிரிப்பை அடக்கி அமைதிகாக்க முயன்றனர். அதனையும் மீறிச் சிலர் சிரித்தனர். அனைத்தையும் கவனித்த எழில். ஏன் எல்லாரும் சிரிக்கிறீர்கள்? அதனை என்னிடம் கூறினால் நானும் சிரிப்பேனே என்றார் குழப்பான குரலில். ஒன்றுமில்லை. எங்கள் ஒவ்வொருவரைப் போலவும் மதி பேசிநடித்துக் காட்டினாள். அந்த மகிழ்ச்சியில்தான் எல்லோரும் சிரித்தோம் என்றான் அழகன். உங்களைப் போலவும் பேசி நடித்தாள் என்றாள் தங்கம்.
ஆசிரியரைபோல் நடித்தல்: நல்லா மாட்டிகிட்டியா? என்றான் சுடர், மதியைப் பார்த்து. எங்கே என்னைப்போல நடித்துக்காட்டு என்று எழில் மதியிடம் கூறினார் புன்னகையுடன். ஐயோ என்றே முகத்தை மூடிக்கொண்டாள் அவள். எனக்கே என்னைப் பார்க்க வேண்டும்போல் இருக்கிறது. தயங்காமல் நடி என்று அவளை ஊக்குவித்தார்.
அவள் எழுந்து அவரைப்போலவே நடந்துவந்து, எனக்கே என்னைப் பார்க்க வேண்டும்போல் இருக்குதுப்பா. வா, வா வந்து தயங்காம நடி என்று அவரது குரலிலும் தொனியிலும் பேசி கைகளையும் தலையையும் அசைத்து நடித்துக் காட்டினாள். எழில் உட்பட எல்லோரும் சிரித்தவாறே கைதட்டினார்.
சில நொடிகளில் வகுப்பை அமைதிப்படுத்திவிட்டு, மதி பிறரைப்போலச் செய்துகாட்டிய பொழுது நாம் எப்படி உணர்ந்தோம்? என்று வினவினார். மகிழ்ச்சியாய் என்றனர் பலரும். மகிழ்ச்சி என்று கரும்பலகையில் எழுதினார். எது நம்மை மகிழ்வித்தது? என்று வினவினார் எழில். “ஆங்ங்…” என்றாள் மதி.
மீண்டும் வகுப்பில் சிரிப்புப் பொங்கி அடங்கியது. மதியின் நகைச்சுவை என்றான் அருளினியன். ‘நகைச்சுவை’ என்று எழுதிய எழில், மதி நம்மைப் போலச்செய்த பொழுது, நமது மனத்திற்குள் என்ன ஏற்பட்டது? என்று வினவினார். சில நிமிட அமைதிக்குப் பின்னர், வியப்பு என்றாள் பாத்திமா. அதனைக் கரும்பலகையில் எழுதினார் எழில்.
உடன்பாட்டு உணர்வுகள்: அடுத்து, இவ்வளவு திறமையுள்ள மதி நம் நண்பர் என்பதால் எப்படி உணர்கிறோம்? என்று வினவினார். பெருமிதமாய் என்றாள் இளவேனில். ‘பெருமிதம்’ என்று எழுதிய எழில் இவைதான் அடிப்படை உணர்வுகள். இவற்றை நாம் உணரும்பொழுது நமக்கு உற்சாகம் ஏற்படுகிறது. எனவே இவற்றை ‘உடன்பாட்டு உணர்வுகள்’ என்கிறோம் என்று விளக்கினார் எழில்.
நமக்குச் சோர்வு தரும் உணர்வுகளும் இருக்கின்றனவே என்றான் சாமுவேல். அவை இந்த உடன்பாட்டு உணர்வுகளின் மறுதலை. எனவே அவற்றை ‘எதிர்மறை உணர்வுகள்’ என்கிறோம் என்றார் எழில். அந்தஎதிர்மறை உணர்வுகள் என்னென்ன? என்று ஆர்வத்தோடு வினவினாள் கயல்விழி.
மகிழ்ச்சியற்று வாடிய முகத்தோடு இருப்பவரிடம் எப்படி ஆறுதல் கூறத் தொடங்குவீர்கள்? என்று எழில் வினவ, கவலைப்படாதீர்கள் என்று தொடங்குவேன் என்றான் முகில். கரும்பலகையில் எழுதியிருந்த மகிழ்ச்சிக்கு நேரே X குறியிட்டு ‘கவலை’ என்று எழுதிய எழில், இது மகிழ்ச்சியின் மறுதலை என்றார். நகைச்சுவையைக் கேட்டால் சிரிக்கிறேன்; யாராவது கோபத்தில் திட்டினால் அழுகிறேன். எனவே, நகைச்சுவையின் மறுதலை கோபம் என்றாள் நன்மொழி. வியப்பின் மறுதலை அச்சம் என்றான் காதர். பெருமிதத்தின் எதிர்மறை …என்றவாறே சிந்தித்தாள் அருட்செல்வி. இழிவு என்றார் எழில்.
(தொடரும்)
- கட்டுரையாளர்: வாழ்க்கைத் திறன் கல்வித் திட்ட வடிவமைப்பாளர் மற்றும் பயிற்றுநர், தொடர்புக்கு: ariaravelan@gmail.com