

திருச்சேந்தியும் முகமூடி அணிந்த புரட்சிப்படைக் கூட்டத்தின் தலைவனும் தங்களது வாளால் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக்கொண்டு இருந்தனர். அப்போது வாள்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டபோது ஏற்பட்ட சத்தத்தால் கூடு திரும்பிய பறவைகள் அச்சம் கொண்டு வேறு திசையை நோக்கி விரைந்தன. திருச்சேந்தியின் வீரர்கள் தூரத்தில் இருந்து அந்தச் சண்டையைப் பார்த்துக்கொண்டிருந்தாலும் எந்நேரமும் அவரைக் காப்பாற்றும் ஆயத்தங்களுடனே இருந்தனர். அதேபோல முகமூடி அணிந்தவனின் ஆட்களும் எதிர் திசையில் நின்று கொண்டிருந்தனர். மாலைப் பொழுதும் மயங்கி இருள் சூழத் தொடங்கியது.
சண்டை கொஞ்சம் கொஞ்சமாக உக்கிரமானது. இப்போது முகமூடி அணிந்த மனிதனின் கை சற்று தாழ்ந்தது. இடது கைப் பழக்கம் கொண்டிருந்த திருச்சேந்தியும் வாளைச் சுழற்றிஅடித்து, முன்னால் முன்னேறிச் சென்றுகொண்டிருந்தார். இப்போது அவர்கள் ஓரிடத்தில் நில்லாமல் முன்னும் பின்னும் நகர்ந்து சண்டையிட்டார்கள். முகமூடி அணிந்தவன் திருச்சேந்தியின் உக்கிரமான தாக்குதலை தாக்கு பிடிக்க முடியாமல் பின்வாங்கிச் சென்றான். இப்போது அதைக்கண்ட திருச்சேந்தியின் வீரர்கள் ஆரவாரமாக கோஷம் எழுப்பினர்.
உடனே முகமூடி அணிந்தவன் தனது வீரத்தை நிலைநாட்ட வீறுகொண்டு வாளைச் சுழற்றினான். அதை எதிர்பார்க்காத திருச்சேந்தி சற்றுப் பின்வாங்கிச் சென்றார். அதைப் பார்த்த முகமூடி அணிந்தவனின் ஆட்கள் எக்காளமிட்டார்கள். சுதாரித்துக்கொண்ட திருச்சேந்தி, தன் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி முகமூடிக்காரனை வெளுத்து வாங்க ஆரம்பித்தார். வாளால் அவர் காற்றில் கூறுபோட்டு முன்னேற, அதை எதிர்கொள்ள முடியாத முகமூடி மனிதன் ஒரு குதிரை சிலைக்கு சற்றுப் பின்னால் பின்வாங்கிச் சென்றான். அந்த குதிரை சிலைக்குப் பின்னால் ஒரு புதர் இருந்தது. இப்போது அந்த புதரையும் தாண்டி மரங்கள் நிறைந்த அடர் காட்டுக்கு உள்ளே சென்றும் சண்டையிட்டார்கள்.
இப்போது மற்ற வீரர்களின் பார்வையிலிருந்து மறைந்தே போனார்கள்.ஆனால், அவர்கள் சண்டையிட்டுக்கொண்டிருந்தது என்னவோ நிற்கவில்லை. அவர்களது வாள்கள் ஒன்றோடு ஒன்று மோதி எழுப்பிய ‘க்ளங், ப்ளங்’ என்ற ஒலி சண்டை நிற்காததைப் பறைசாற்றியது. ஒருகட்டத்தில் வாள்கள் மோதிக் கொள்ளும் ஓசை திடீரென நின்றது. இருள் நன்றாகச் சூழ்ந்து இருந்தது.
அப்போது புதர் மறைவில் இருந்து வாளை உயர்த்திப் பிடித்தபடி ஒரு கை மட்டும் மேலே தெரிந்தது. இருதரப்பு வீரர்களும் இருக்கும் இடத்தை நோக்கி வாளை உயர்த்திப் பிடித்த உருவம் முன்னேறி வந்தது. இன்னொரு கையில்அந்த முகமூடி அணிந்த மனிதனைஇழுத்துப் பிடித்தபடி முன்னேறி வந்துகொண்டிருந்தது திருச்சேந்திதான் என்பதை அறிந்த அவரது வீரர்கள் ஆரவாரத்தால் துள்ளிக் குதித்தார்கள். அதைக் கண்ட முகமூடி மனிதனின் ஆட்கள் திருச்சேந்தியின் ஆட்களைத் தாக்கத் தொடங்கினார்கள்.
அதைக் கண்ட திருச்சேந்தி தனதுவலது கையில் வைத்திருந்த வாளைஉயர்த்திப் பிடித்து வெற்றி பெற்றதாகசைகையால் காட்டினார். அதைப்பார்த்த முகமூடியின் ஆட்கள்மறுபடியும் தாக்கினார்கள். திருச்சேந்தியின் வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தார்கள். ஆனால், ஒருசில நிமிடங்களில் முகமூடியின்வீரர்கள் பின்வாங்கி அந்தக் காட்டின் இருளில் ஓடி மறைந்தார்கள்.
அப்படி ஓடியவர்களை ஒரு சில வீரர்கள் விரட்டிச் சென்றார்கள். ஆனால், திருச்சேந்தியோ, ‘பயந்து ஓடும் கோழைகள்... அவர்களை விட்டுத் தள்ளுங்கள். இதோ நம்மிடம் சிக்கிய இந்தக் கயவனை விடாதீர்கள். இவனுக்கு எனது மாளிகையின் பாதாளச் சிறை காத்திருக்கிறது!’ என்று சொல்லி முகமூடி மனிதனின் கை, கால்களைக் கட்டச் செய்தார். தன்னுடன் அவனை குதிரையில் ஏற்றிக்கொண்டு தனது மாளிகை நோக்கி விரைந்தார். அந்த முகமூடி மனிதனோ துள்ளினான். திமிறினான். ஏதேதோ பேச முயன்றான். ஆனால், குரல்தான் வெளியில் வரவே இல்லை.
மக்கள் புரட்சிப்படையின் தலைவன் பிடிபட்டான் என்கிற செய்திஊரெங்கும் காட்டுத் தீயாகப் பரவியது.பிடிபட்ட மக்கள் புரட்சிப்படைத் தலைவனைக் காண திருச்சேந்தியின் மாளிகை முன் ஊர் மக்கள் திரண்டுநின்றார்கள். தனது படை, பரிவாரங்களுடன் மாளிகையை அடைந்த திருச்சேந்தி, மாளிகையின் முன்வாசல் வழியாகச் செல்லாமல் பின்வாசலை நோக்கி குதிரையைச் செலுத்தினார். ஊர் மக்களோ முகமூடி அணிந்த மனிதனின் முகத்தைப் பார்க்க ஆவலாய் இருந்தனர். ஆனால், அதை திருச்சேந்தியிடம் கேட்கத்தான் ஒருவருக்கும் துணிவு வரவில்லை.
திருச்சேந்தியின் வருகைக்காக மாளிகையின் பின் வாசலில் காத்திருந்த வீரர்கள், அவசர கால வழியை அவருக்காகத் திறந்துவிட்டனர். குதிரையுடன் உள்ளே நுழைந்தவர் கைது செய்து கொண்டுவந்த முகமூடி மனிதனை குதிரையை விட்டுக்கீழே இறக்கினார். குதிரையை சில வீரர்கள் வந்து பிடித்துக்கொண்டார்கள்.
திருச்சேந்தியோ பாதாளச் சிறையை நோக்கி முகமூடிமனிதனை இழுத்துச் சென்றார். முகமூடி மனிதனோ முன்னே செல்லாமல் முரண்டு பிடித்தான். நான்கைந்து வீரர்கள் சேர்ந்து அவனை முன்னால் தள்ளிச் சென்றனர். சிறிது நேரத்தில் பாதாளச் சிறைவாசலின் முன்னால் கொண்டுவந்து நிறுத்தப்பட்டான்.
(தொடரும்)