

இந்தியாவில் அரிசி மற்றும் கோதுமைக்கு அடுத்தபடியாக சோளம் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. முழுமையான அல்லது உடைத்த சோளம் வேகவைக்கப்பட்டு அரிசி போன்று பயன்படுத்தப்படுகிறது. உலகின் ஐந்தாவது முக்கிய தானியமாக சோளம் கருதப்படுகிறது. இது மற்ற சிறுதானியங்களை விட அளவில் பெரியது. Sorghum என்பது சோளத்தைக் குறிக்கும் ஆங்கில சொல்லாகும். நாம் நாட்டுச்சோளம் என்று அழைக்கிறோம்.
சோளத்தில் பல வகைகள் உண்டு.இன்றைக்கு நாம் அதிகமாக பயன்படுத்துவது மஞ்சள் முத்துக்கள் கொண்ட மக்காச்சோளம். அதுவும் poaceae தாவரக் குடும்பத்தைச் சேர்ந்ததுதான். ஆனால், zea வேறு தாவர இனத்தைச் சார்ந்தது. செஞ்சோளம் என்பது சிவப்பு முத்துக்களைக் கொண்டது.
சோள வகைகள்: பயிர் செய்யப்படும் காலத்தைப் பொருத்து தமிழகத்தில் சோள வகைகள் மாறுபடுகின்றன. கோடைக்காலத்தில் பயிராவது சித்திரைச் சோளம். பனிக்காலத்தில் பயிராவது பனிச்சோளம் அல்லது தைச்சோளம். ஒரு ரக சோளத்தின் கதிர்கள் பரந்து விரிந்து விளைந்திருக்கும். அது தலைவிரிச்சான் சோளம். தமிழகத்தின் சில ஊர்களில் பொங்கல் திருநாளில் வெண்சாமரச் சோளம் பயன்படுத்துகிறார்கள். இந்த வகைக் சோளம் திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் பயிரிடப்படுகின்றன.
தென் மேற்குப் பருவமழை ஆரம்பிக்கும் சமயத்தில் முன்பட்டச் சோளம்விதைக்கப்படுகிறது. மழை முடியும் காலத்தில் விதைக்கப்படுவது பின்பட்டச் சோளம். தமிழகத்தில் சோளம்பெரும்பாலும் புன்செய் தானியமாகத்தான் பயிரிடப்படுகிறது. ஆண்டொன்றுக்கு சுமார் 2.20 லட்சம் டன் சோளம் உற்பத்தி செய்யப்படுகிறது என்று விவரிக்கிறது’ உணவு சரித்திரம்’ நூல். உலக அளவில் சுமார் 300 மில்லியன் மக்கள் சோளத்தை அடிப்படை உணவாக உண்கிறார்கள். அதில் ஆப்பிரிக்கர்கள் அதிகம்.
தீவனம்: சோளக்கதிர் அறுவடைக்குப் பின்மிஞ்சும் சோளத்தட்டை மிக முக்கியமான கால்நடைத் தீவனம். இந்தச் சோளத்தட்டையை அறுத்தெடுத்து இரண்டு அல்லது மூன்று மாதங்கள் காயப்போட்ட பிறகே கால்நடைகளுக்குத் தீவனமாகக் கொடுப்பார்கள். பசு மாடுகளுக்கு காயாத பச்சைச் சோளத் தட்டையைத் தீவனமாகக் கொடுத்தால் பால் நான்றாக சுரக்கும்.
நன்மைகள்: சோளத்தில் புரதச்சத்து, சுண்ணாம்புச்சத்து , இரும்புச்சத்து, கால்சியம்,தயாமின் ஆகியவை உள்ளன. நார்ச்சத்து அதிகமுடைய உணவு. ரத்தத்தில் உள்ள சர்க்கரையைக் குறைக்கும் தன்மையும் சோளத்துக்கு உண்டு. கண் குறைப்பாடுகளைச் சீர்செய்யும் பீட்டா கரோட்டின், சோளத்தில் அதிகமாக உள்ளது.
சோளக்கதிர்களை வேக வைத்தோ, வறுத்தோ சாப்பிடுவது வழக்கம். சோளத்தைப் பொரியாக்கி சர்க்கரை கலந்தும் சாப்பிடுவார்கள். சோள மாவு கொண்டு களியோ கூழோ செய்து சாப்பிடலாம். சோள மாவுடன் உளுந்து சோ்த்து தோசையும் இட்லியும் தயார் செய்யலாம். ரொட்டி, கேக், பாப்கார்ன், அடை, வடை, புட்டு என பல்வேறு உணவுப் பொருட்கள் தாயரிக்கச் சோளம் உதவுகிறது.
சோளப் பாயசம்
நாட்டுச்சோளம் – 2 கப்
ஏலக்காய்த்தூள்
பார்லி 2 டீஸ்பூன்
பனை வெல்லம் 1 கப்
நாட்டுச் சோளம் , பார்லி இரண்டையும் தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர் நீர் சேர்த்து மாவு பதத்திற்கு அரைத்து வடிகட்ட வேண்டும். வடிகட்டிய பாலில் பனைவெல்லம் மற்றும் ஏலக்காய்ப் பொடி சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். தேவையெனில் முந்திரிப் பருப்பு மற்றும் உலர் திராட்சையை நெய்யில் வறுத்து பாயத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
- கட்டுரையாளர்: முதுகலைத் தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, வெலக்கல் நத்தம், திருப்பத்தூா் மாவட்டம்; தொடர்புக்கு: devavino86@gmail.com