மாறட்டும் கல்விமுறை - 10: எதற்காக செய்ய வேண்டும்?

மாறட்டும் கல்விமுறை - 10: எதற்காக செய்ய வேண்டும்?
Updated on
2 min read

வேகமாக வீட்டுப்பாடம் செய்தால் கார்ட்டூன் பார்க்க அனுமதிக்கிறேன். நீ இதை எழுதி முடித்தால் வெளியே சென்று விளையாடலாம். தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்கினால் சைக்கிள் வாங்கித்தருகிறேன். அதுபோல் இந்தப் பட்டியலை வளர்த்துக்கொண்டே போகலாம்.

நீ அதைச் செய்தால் நான் இதைச் செய்கிறேன் என்று குழந்தைகளை ஒரு செயலில் ஈடுபட வைப்பது பலன் தராது அல்லது அப்படிக் கிடைக்கும் பலன் தாற்காலிகமானது என்பதை வல்லுநர்கள் ஆய்வுப்பூர்வமாக நிரூபித்துள்ளனர்.

ஒரு செயல்திட்டத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பவர்களுக்கு அதிக ஊதியம் கொடுத்தல், ஒருநாளும் விடுப்பெடுக்காமல் வருபவர்களுக்கு பரிசும் பாராட்டும் கொடுத்தல், வேலையில் காட்டும் அக்கறை வைத்து பொன்னாடை போர்த்துதல்... போன்று பெரிய பெரிய நிறுவனங்கள் பின்பற்றும் பல உத்திகளும் இனிப்பு தடவிய மாத்திரைகள் என்பதை நீண்டகாலத் தொடர்ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.

கதை எழுதினால் நட்சத்திரம்! - பள்ளிக்கூடக் குழந்தைகளிடமும் இந்த ஆராய்ச்சியை நடத்தியிருக்கிறார்கள். ஒரு குழுவிடம் பாடல் எழுதினால் அல்லது கதை எழுதினால் உனக்கு நட்சத்திரம் கிடைக்கும் என்று கூறினார்கள். அடுத்த குழுவினரிடம் எந்தப் பரிசும் தருவதாகச் சொல்லாமல் கதையும் பாடலையும் எழுதச் சொல்லியிருக்கிறார்கள். பரிசுக்காக எழுதியவர்களின் படைப்புகளைவிட அச்செயல் செய்வதால் கிடைக்கும் மகிழ்ச்சிக்காக எழுதியவர்களின் படைப்புகள் மிகச் சிறப்பானவையாக இருந்தனவாம்.

ஏதோ ஒன்று கிடைக்கும் என்பதற்காக ஒரு செயலில் ஈடுபடுவதை புறவூக்கம் (Extrinsic Motivation) என்கிறார்கள். ஒரு செயலைச் செய்வதால் கிடைக்கும் மகிழ்ச்சிக்காக, மனநிறைவுக்காகச் செய்வதை அகவூக்கம் (Intrinsic Motivation) என்கிறார்கள்.

புறவூக்கம் செலுத்தி குழந்தைகளைத் தற்காலத்திற்குச் செயல்பாட்டில் ஈடுபடத் தூண்டலாம். ஆனால், அக்குழந்தையின் முழுத்திறமையையும் வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அக்குழந்தையிடம் எழாது மட்டுமல்ல குழந்தைகள் வளர வளர இவைபோன்ற புறவூக்கக் காரணிகள் சலிப்பையே ஏற்படுத்துகின்றன. அல்லது பெரிய பரிசுகளுக்காக அவர்கள் ஏங்குகிறார்கள். அல்லது இது போன்ற புறவூக்கக் காரணிகள் இல்லாவிட்டால் செயல்பாடுகளில் ஈடுபடுவதையே தவிர்க்கிறார்கள்.

அதே நேரத்தில் அகவூக்கத்தால் செயல்பாடுகளில் ஈடுபடும் குழந்தைகளுக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இருப்பதில்லை. மகிழ்ச்சி கிடைக்கிறது. அச்செயல் மனநிறைவைத் தருகிறது. மேலும் மேலும் அத்தகைய செயல்களில் ஆர்வத்தோடு ஈடுபடுகிறார்கள்.

இதனாலேயே அகவூக்கம் தரும் செயல்பாட்டுக்கும் புறவூக்கம் தரும் செயல்பாட்டுக்கும் என்ன வேறுபாடு என்பதைத் தெரிந்துகொள்வது மிகவும் முக்கியமாகிறது.

இங்குதான் குழந்தைகளைப் பற்றிய புரிதல் பெரிதும் உதவுகிறது. அவர்தம் விருப்பு வெறுப்புகளைப் பற்றித் தெரிந்திருப்பது அவசியமாகிறது. குழந்தைகளைத் தொடர்ந்து கவனிப்பது மிகவும் தேவையாகிறது.

விளையாட்டாக செய்ய தூண்டுங்கள்: அகவூக்கம் தரும் செயல்பாடுகளின் தனித்தன்மைகளைப் பார்ப்போம்.

1. அச்செயல்பாடு குழந்தைகளுக்குச் சற்றே சவாலானதாக இருக்க வேண்டும்.

ஒரு முறை செய்ததையே மீண்டும் செய்வதோ, செய்வது எப்படியெனத் தெரிந்ததையே மீண்டும் செய்தோ சவாலாக இருக்காது. அச்செயல்பாட்டின் முடிவு இதுதான் என்று தெரிந்திருந்தால் அது சவாலாக அமையாது. குழந்தைகளின் தற்போதைய தரம் என்னவோ அதிலிருந்து சற்றே உயர்ந்த நிலையிலுள்ள செயல்பாடுகளில் ஈடுபட குழந்தைகள் ஆர்வம் கொள்வார்கள். அதே நேரத்தில் மிகவும் சவாலான செயல்பாடாக இருந்தால் குழந்தைகள் முயற்சி செய்யவே முன்வர மாட்டார்கள்.

2. அச்செயல்பாட்டில் விளையாட்டின் தன்மைகள் அடங்கியிருக்க வேண்டும்.

விளையாட்டு என்பது எதிர்பாராத முடிவைத் தருவது. நாம் எதிர்பார்ப்பதும் நடப்பதும் பலவேளை வேறு வேறாக இருக்கலாம். சிலவேளை ஊகித்தது போலவே நடக்கலாம். எதிர்பாராத தன்மையே விளையாட்டின் அடிப்படை. இந்தத் தன்மை ஒரு செயல்பாட்டில் இருப்பின் அதே செயல்பாட்டைக் குழந்தைகள் திரும்பத் திரும்பச் செய்வதைப் பார்க்கலாம்.

3. என்ன கற்றுக்கொள்கிறேன் என்பது தெளிவாக இருக்க வேண்டும்.

செயல்பாட்டின் நோக்கம் என்று இதை சொல்லலாம். இங்கு பெரியவர்களின் நோக்கம் வேறாக இருக்கும். அதேநேரத்தில் குழந்தைகளிடம் சொல்லும் நோக்கம் வேறாக இருக்கும். இது மிகவும் முக்கியம். ஆனால் குழந்தைகளிடம் நாம் சொல்லும் நோக்கம் அவர்களுக்குத் தெளிவாகப் புரிந்திருக்க வேண்டும்.

4. செயல்பாட்டில் சிறு சிறு மாற்றங்கள் செய்து அதையே புதுச்செயல்பாடாக மாற்றுவதற்கேற்றாற்போல் இருக்க வேண்டும்.

இதுவே எதிர்பாராத பிரச்சினைகளுக்கான தீர்வைக் கண்டுபிடிக்க உதவும் திறமையாக மாறும்.

இதுபோன்ற கருத்துகளை மனத்தில்கொண்டு செயல்பாடுகளை வடிவமைக்கும்போதுதான் அது உண்மையான, குழந்தைகள் விரும்பும் செயல்பாடாக, புறக்காரணிகள் எதுவும் தேவையில்லாமல் அச்செயல்பாட்டில் மீண்டும் மீண்டும் ஈடுபடுவதற்கான தேவையை உருவாக்கும். எனவே கற்பித்தல் என்பது எளிமையான, நேரடியான செயல்பாடல்ல. இத்தகைய செயல்பாடுகளை வடிவமைப்பதில் திறமையை வளர்ப்பதாக ஆசிரியப்பயிற்சி அமைய வேண்டும். அதுவன்றி யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் குழந்தைகளுக்குக் கற்பிக்கலாம் என்ற எண்ணத்தை நாம் மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் காலப்போக்கில் அது நன்மையைவிடத் தீமையைத் தருவதாகவே அமையும்

(தொடர்ந்து கற்போம்...)

- கட்டுரையாளர்: மூத்த கல்வியாளர், கல்வி இயக்குநர், ‘Qrius Learning Initiatives’, கோவை; தொடர்புக்கு: rajendran@qrius.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in