

புகழ்பெற்ற இந்திய அணு விஞ்ஞானியும் இந்திய அணுசக்தி ஆணையத் தலைவராகச் செயல்பட்டவருமான ஹோமி சேத்னா (Homi Sethna) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 24). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் 10:
# மும்பையில் (பம்பாய்) பார்ஸி குடும்பத்தில் பிறந்தவர் (1923). இவரது முழுப்பெயர், ஹோமி நஸர்வான்ஜி சேத்னா. பம்பாய் பல்கலைக்கழகத்தில் ரசாயன தொழில்நுட்பத் துறையில் பி.எஸ்சி. பட்டமும் அமெரிக்காவில், மிச்சிகன் மாகாணத்தில் உள்ள அன் ஆர்பர் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி. பட்டமும் பெற்றார். இங்கிலாந்தின் இம்பீரியல் கெமிகல்ஸ் நிறுவனத்தில் சில ஆண்டுகள் பணிபுரிந்தார்.
# உலகம் முழுவதும் உள்ள இந்திய விஞ்ஞானிகளை இந்தியா திரும்பும்படி இந்திய அணுசக்தித் திட்டத்தின் தந்தை டாக்டர் ஹோமி ஜஹாங்கீர் பாபா விடுத்த அழைப்பை ஏற்று 1949-ல் இந்தியா திரும்பினார். கேரளாவில் உள்ள அலோயே என்ற இடத்தில், தோரியம் பிரித்தெடுத்தலுக்கான ரேர் எர்த்ஸ் லிமிடட் தொழிற்சாலை அமைப்பதற்கான முழு தொழில்நுட்ப பொறுப்புகளையும் இவரிடம் ஹோமி பாபா ஒப்படைத்தார்.
# 1950களில் ஹோமி பாபா, தன்னோடு பணிபுரிவதற்காக தேர்ந்தெடுத்தக் குழுவில் இடம்பெற்றார். டாக்டர் ராமண்ணா தலைமையிலான அணுசக்தித் திட்டக் குழுவில் முக்கிய இடம்பெற்றிருந்தார்.
# தற்போது பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம் எனக் குறிப்பிடப்படும் டிராம்பேயில் உள்ள அணுசக்தி மையத்தில் 1959-ல்முதன்மை அறிவியல் அதிகாரியாகப் பணியாற்றினார். 1967-ல் பிஹாரில் யுரேனியம் ஆலை அமைவதற்கு வழிகாட்டியாகச் செயல்பட்டார்.
# 1972 முதல் 1983 வரை இந்திய அணுசக்தி ஆணையத்தின் தலைவராகச் செயல்பட்டு புகழ் பெற்றார். பொக்ரானில் நடத்தப்பட்ட ‘ஸ்மைலிங் புத்தா’ என்ற முதல் அணு வெடிப்பு சோதனைக்கு முன்பாக, பிரதம மந்திரி அலுவலகத்தின் முக்கிய அதிகாரிகள் சிலர், சர்வதேச அரசியல் காரணங்களுக்காக இந்த சோதனையைத் தாமதப்படுத்த விரும்பினார்கள். இவர், அன்றைய பிரதமர் இந்திராகாந்தியைச் சந்தித்து உடனடியாக அனுமதி பெற்றார்.
# அந்த சந்திப்பின்போது, “நாளை நான் இந்த சாதனத்தை (அணுகுண்டு) வெடிக்க வைக்கப் போகிறேன், அதற்கு முன்னர், அதை நிறுத்தும்படி நீங்கள் சொல்லக்கூடாது. ஏனென்றால் அது என்னால் முடியாது” என்று இந்திராகாந்தியிடம் இவர் சொன்னதும், “அதைச் செய்து முடியுங்கள்… பயப்படுகிறீர்களா என்ன?” என்று அவர் கேட்டதாகக் கூறப்பட்டது.
# 1974-ல் வெற்றிகரமாக நடத்தப்பட்ட இந்தத் திட்டத்தில் இவரது முக்கிய பங்களிப்பைப் பாராட்டி, 1975-ல் பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டது. ‘தொழில்நுட்பத் திறனும், அறிவாற்றலும், தொலைநோக்கும், துணிச்சலும் கொண்டவர்’ என சக விஞ்ஞானிகளால் போற்றப்பட்டார்.
# அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் 1989 முதல் 2000-ம் ஆண்டுவரை டாடா பவர் நிறுவனத்தின் தலைவராகச் செயல்பட்டார்.
# ராயல் ஸ்வீடிஷ் அகாடமி இன்ஜினீயரிங் சயின்சஸ், இந்தியன் அகாடமி ஆஃப் சயின்சஸ், இந்தியாவில் உள்ள தி இன்ஸ்டிடிட்யூஷன் ஆஃப் இன்ஜினீயர்ஸ், இந்திய தேசிய அறிவியல் அகாடமி, இந்திய ரசாயன பொறியியல் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் உறுப்பினராகச் செயல்பட்டார்.
# 80 வயதைக் கடந்த பிறகும் சுறுசுறுப்புடன் சுழன்று வந்தவர். அணுசக்தி வலிமை படைத்த நாடாக இந்தியா புது வடிவம் பெற்றதில், ஈடிணையற்ற பங்களிப்பை வழங்கிய முன்னோடி அணுசக்தி அறிவியலாளர் ஹோமி சேத்னா, 2010-ம் ஆண்டு தனது 87-வது வயதில் மறைந்தார்.