தயங்காமல் கேளுங்கள் - 39: நெய்ல் பாலிஷ்களை உபயோகிக்கலாமா?

தயங்காமல் கேளுங்கள் - 39: நெய்ல் பாலிஷ்களை உபயோகிக்கலாமா?
Updated on
1 min read

நகச்சுத்திக்கு விரலில் எலுமிச்சை சொருகுகிறார்களே அது உண்மையிலேயே பயன் தருமா என்கிற கேள்வி பலருக்கு உள்ளது. கேள்வியின் நாயகி அகல்யாவும் அந்த கேள்வியை எழுப்பினார்.

நகச்சுத்தி என்பது paronychia நகத்தின் தோலுக்கடியில் ஏற்படும் ஒரு கிருமித்தொற்றாகும். நகத்தில் அடி பட்டாலோ,நகம் கடித்தாலோ, அலர்ஜி ஏற்படும் ரசாயனங்களை தொடர்ந்து பயன்படுத்தினாலோ நகக்கண்ணில் பாக்டீரியா தொற்று மற்றும் சீழ் ஏற்படக்கூடும். ஏற்கெனவே பூஞ்சைத் தொற்று அல்லது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது எளிதாக ஏற்படும்.

இதனால் நகத்தில் சீழ் கூடுவதால் பெரும் வலியையும் வீக்கத்தையும் உண்டாக்கும். ஒரு சிறு அறுவை சிகிச்சை மூலம் சீழை அகற்றி அதற்கான ஆண்டிபயாடிக்குகள் தருவது தான் இதற்கு முறையான சிகிச்சையே தவிர, சீழ் இருக்கும்போது எலுமிச்சையும் வேப்பிலையும் வலியை இன்னும் அதிகப்படுத்தும் என்பதுதான் உண்மை.

அகல்யா: ஓகே டாக்டர்... நெய்ல் பாலிஷ்களை உபயோகிக்கலாமா? அதேபோல நெய்ல் எக்ஸ்டென்ஷன் எனப்படும் செயற்கைநகங்கள் பாதிப்புகளை ஏற்படுத்துமா?

பதில்: நல்ல கேள்வி அகல்யா. அழகுபடுத்துவது என்பது பெண்ணுக்கே இருக்கக்கூடிய விருப்பங்களில் ஒன்றுதான். ஆனால், நெய்ல் பாலிஷ்களிலுள்ள ட்டொலீன், த்தாலேட், ஃபார்மால்டிஹைட் போன்ற நச்சுகள் அபாயகரமானவை. இதனால், ஹார்மோன் பிரச்சினைகள், மாதவிடாய் பிரச்சினைகள், குழந்தைப்பேறின்மை, ஏன் புற்றுநோய் கூட ஏற்படலாம். ஆனாலும் நகங்கள் இந்த ரசாயனங்களை உறிஞ்சுவதில்லை என்பதாலும், நாம் உபயோகிக்கும் அளவும் மிகக் குறைவு என்பதாலும் நகப்பூச்சுகளினால் அவ்வளவு ஆபத்து நேர்வதில்லை.

ஆனாலும் இயன்றவரை குறைவான ரசாயனங்கள் உள்ள தரமான நகப்பூச்சுகளைப் பயன்படுத்துவதும், ஹெர்பல் வகைப் பூச்சுகளைப் பயன்படுத்துவதும், தேவை முடிந்தவுடன் நகப்பூச்சுகளைப் பாதுகாப்பாக அகற்றுவதும், இடைப்பட்ட நாட்களில் எதுவும் அணியாமல் இருப்பதும் நிச்சயம் பயனளிக்கும்.

அதேசமயம் நெய்ல் எக்ஸ்டென்ஷன் எனப்படும் செயற்கை நகங்கள்நகம் நீளமாக வளராமல் இருப்பவர்களுக்கு அழகாகக் காட்ட உதவுகின்றன என்றாலும் இந்த அக்ரிலிக் அல்லது ஜெல் நகங்களைப் பொருத்துவதற்குத் தேர்ந்த நிபுணர்கள் தேவை. ஏனெனில் நகப்பூச்சுகளில் காணப்படும் ரசாயனங்களைக் காட்டிலும் இவற்றில் இன்னும் அதிகம். எதுவாயினும் பள்ளி செல்லும் வயதில் இவற்றையெல்லாம் முழுமையாகத் தவிர்ப்பது இன்னும் நல்லது என்றுதான் ஒரு அம்மாவாக அறிவுரை கூறுவேன்.

(ஆலோசனை தொடரும்)

- கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்; தொடர்புக்கு: savidhasasi@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in