

தாளாத வறுமையினாலோ அல்லது நாடக வாய்ப்பினாலோ குடும்பத்தையும் ஊரையும் பிரிந்து சென்ற வில்லியம் கி.பி. 1592இல் லண்டன் நகரில் வசித்ததாக குறிப்பு உள்ளது. கிராமத்து வாழ்க்கையில் இருந்து உலகின் அதிநவீன நகர வாழ்க்கை அவன் வாழ்வில் பெரும் திருப்பு முனையாக இருந்தது.
கணவான்களோடு பழகினான். விஞ்ஞானிகள், கண்டுபிடிப்பாளர்கள், பயணிகள் என்று பலதரப்பட்டோருடன் நாட்கணக்கில் உரையாடினான். 28 வயதுவரை தான் சேர்த்து வைத்த இத்தனை அனுபவங்களும் ஆங்கிலேய எழுத்து உலகின் ஈடு இணையில்லாத ஒரு மனிதனாய் தன்னை உருமாற்றப் போகிறதென்று இதுவரை வில்லியமிற்குத் தெரியாது.
காலத்துக்கு ஏற்ப மாற்றம்: லண்டன் நகரின் நாடக அரங்கங்களை ஒவ்வொன்றாக சுற்றித் திரிந்தான். நாடகம் சார்ந்த எந்த வேலையும் தயங்காமல் செய்தான். பார்வையாளர்களின் குதிரைகளைப் பார்த்துக் கொண்டான்; மேடை ஏற்பாடுகளில் ஒத்தாசை செய்தான்.
படிப்படியாக உயர்ந்து, சிறிய கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்தான். பழங்கதைகளில் ஒன்றிரண்டு வசனங்களை காலத்திற்கு ஏற்ப மாற்றி எழுதினான். அதையொட்டி நகைச்சுவை சேர்த்தான். இப்படித்தான் வில்லியம் ஷேக்ஸ்பியர் என்ற நாடகக் கலைஞன் உதயமானன்.
அவன் எழுதிய முதல் நாடகத்திலிருந்து வெகுமதிகளும் புகழுரைகளும் தேடித்தேடி வந்தன. கி.பி.1590களில் லண்டன் நகரின் பேசுபொருளான மனிதனாய் வில்லியம் ஷேக்ஸ்பியர் உயர்ந்திருந்தான். பிற நாடக ஆசிரியர்கள் பழங்கால கிரேக்க, ரோமக் கதைகள் எழுதிக் கொண்டிருந்தபோது மக்களின் மனத்தைப் புரிந்துகொண்டு சிக்கலான கதாப்பாத்திரங்களை வில்லியம் உருவாக்கினான். நாடகம் முடிந்து செல்லும்ஒவ்வொருவரும் அந்தக் கதாப்பாத்திரங்களில் தங்களை அடையாளம் கண்டனர்.
‘லவ் லெட்டர்’ தந்தவர்: ஷேக்ஸ்பியர் வாழ்வில் மீண்டுமொரு பிளேக் நோய் பீடித்தது. இரண்டு வருடங்களுக்கு நாடக அரங்கங்கள் இழுத்து மூடப்பட்டன. கி.பி. 1592 - 1594க்கு இடையிலான இரண்டு ஆண்டுகளில்தான் நாடக ஆசிரியராய் உலகறிந்த ஷேக்ஸ்பியர், தன்னையொரு கவிஞனாக அடையாளப்பத்தினார். 154 சொனட் வகை பாடல்களை இயற்றினார். பிளேக் நோயால் இழந்த வாழ்க்கை, மீண்டுமொரு பிளேக் நோயால் திரும்ப வந்தது.
ஹேம்லட், ஒத்தெல்லொ, கிங் லியர், மேக்பத் போன்ற அவர் வாழ்வின் அசாத்திய படைப்புகள் எல்லாம் இதற்கும் பின்பு தோன்றியவை. சுமார் 31 வருடங்களுக்குப் பிறகு லண்டனைப் பிரிந்து மீண்டும் வீட்டடைந்து பல செம்மையான படைப்புகளை உலகிற்கு வழங்கினார்.
ஆங்கிலத்தில் பல வார்த்தைகள் இவரின் கைவண்ணத்தில் உருவானவை. ’லவ் லெட்டர்’ என்ற சொல் கூட ஷேக்ஸ்பியரால் உருப்பெற்றது. தன் வாழ்நாளில் 37 நாடகங்களும் 150க்கும் மேற்பட்ட கவிதைகளும் இயற்றி, 52வது வயதில் இலக்கியத்தோடு இரண்டறக் கலந்தார்.
- கட்டுரையாளர்: இயற்பெயர் சதீஸ்குமார். மொழிபெயர்ப்பாளர், ஆய்வு மாணவர், பாரதியார் பல்கலைக்கழகம்; தொடர்புக்கு: iskrathewriter@gmail.com