

ஆயுள் காப்பீடு என்பது மரணத்துக்கு பிறகு நம்மையும் நம் குடும்பத்தையும் பாதுகாக்கும் கவசம் ஆகும். குடும்பத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் இந்த கவசத்தை எப்போதும் தயாராக வைத்துக் கொள்வது அவசியம். இந்த காப்பீட்டு கவசத்தின் அளவு அவரின் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, நிதி தேவை, சேமிப்பு ஆகியவற்றை பொறுத்து மாறுபடும்.
கடந்த அத்தியாயத்தில் கால காப்பீடு, நன்கொடை காப்பீடு, யூலிப் காப்பீடு குறித்து அலசினோம். இந்த அத்தியாயத்தில் ஆயுள் காப்பீட்டில் இருக்கும் வேறு சில வகைகளை காண்போம்.
முழு ஆயுள் காப்பீடு: முழு ஆயுள் காப்பீடு (Whole Life Policy) என்பது முழு வாழ்நாளுக்குமான காப்பீடு. முன்பெல்லாம் 70 வயதுவரை மட்டுமே முழு ஆயுள் காப்பீடு திட்டத்தை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கின. இப்போது 100 வயதுவரை இன்ஷூரன்ஸ் வழங்குகின்றன. இதில் பிரீமியம் கட்டும் காலம்வரை காப்பீடு வழங்கப்படுகிறது. அதிக ஆண்டுகள் பிரிமீயம் செலுத்தினால், சேமிப்பும் அதிகமாகிறது. அதில் இருந்து குறைந்த வட்டியில் கடன் பெறலாம். இந்த திட்டத்தில் பாலிசிதாரருக்கு 100 வயதுக்குள் மரணம் நிகழ்ந்தால், மொத்த தொகையும் அவரது வாரிசுதாரருக்கு வழங்கப்படும். இல்லாவிட்டால் அவருக்கே மொத்த தொகை வழங்கப்படும்.
குழந்தைகளுக்கான காப்பீடு: ஒருவர் எத்தனை ஆண்டு காலம் வாழ்வார் என்பதை யாராலும் கணிக்க முடிவதில்லை. வாழ்க்கை நிச்சயமற்றதாக ஆகிவிட்டதால் பெற்றோர் தங்களின் குழந்தைகளின் நிதி பாதுகாப்பை உறுதி செய்வது அவசியமாகிறது. குழந்தைகளின் எதிர்கால தேவைக்காக பல்வேறு இன்சூரன்ஸ் திட்டங்கள் இருக்கின்றன. அவர்களின் உயர்கல்வி, திருமணம், சேமிப்புஆகியவற்றுக்கு ஏற்ப இந்த திட்டங்கள்வடிவமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கான காப்பீடு (Child Plan policy) என்பது காப்பீடு, முதலீடு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
பிறந்த குழந்தை முதல் 24 வயது வரை இதில் காப்பீடு பெறலாம். இடைப்பட்ட காலத்தில் பெற்றோருக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், அந்த தொகை பாலிசி காலத்தின் இறுதியில் குழந்தைக்கு வழங்கப்படும். இதுதவிர வருடாந்திர வருமானம், போனஸ் ஆகியவையும் கிடைக்கிறது. எல்.ஐ.சி நிறுவனம் சிரந்த குழந்தை காப்பீட்டு திட்டங்களை கொண்டிருக்கிறது. இந்த திட்டத்தில் இறப்பு மற்றும் முதிர்வுப் பலன்கள் உட்பட அனைத்து வருமானங்களுக்கும் வரி விலக்கு வழங்கப்படுகிறது.
மனி பேக் காப்பீடு: மனி பேக் காப்பீடு (Money Back Policy)திட்டத்தில் சேருபவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை ஒவ்வொரு குறிப்பிட்ட காலக்கட்டத்திலும் திரும்பத் தரப்படும். உதாரணமாக, 20 வருடம் பாலிசி எடுத்தவர்களுக்கு 5 வருடத்துக்கொரு முறை பாலிசி தொகையில் 15 சதவீத தொகை வழங்கப்படும். இந்த தொகை 'வாழ்வதற்கான ஆதாயமாக' வழங்கப்படுகிறது. பாலிசி முடிவில் மீதித் தொகையுடன் போனஸூம் வழங்கப்படும். இந்த திட்டத்திலும் முதலீடு மற்றும் காப்பீட்டு வசதி இருக்கிறது. அதேவேளையில் மற்ற காப்பீட்டு திட்டங்களின் பிரிமீயம் தொகையை விட, இதற்கு சற்று கூடுதல் தொகை வசூலிக்கப்படுகிறது.
ஓய்வு கால காப்பீடு: ‘எப்போது ஓய்வு பெறப்போகிறோம்' என்பதை முடிவெடுத்து பணியாற்றுவதே புத்திசாலித்தனம். ஓய்வு காலத்துக்கான நிதி ஆதாரத்தை திட்டமிட ஓய்வு காலகாப்பீடு (Retirement Policy) உதவுகிறது. இதில் பாலிசிதாரரிடம் 10 முதல் 40ஆண்டுகள் வரை பிரீமியம் வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு வசூலித்த தொகையை அவர்களின் ஓய்வு காலத்தில் (40 முதல் 75 வயது வரை) மொத்தமாகவும், மாதாந்திர ஓய்வூதியமாகவும் வழங்கப்படும். இதிலும் காப்பீடு, முதலீடு மற்றும் போனஸ் நன்மைகள் இருக்கின்றன.
ஆயுள் காப்பீட்டு திட்டங்களில் பாலிசிதாரர் செலுத்தும் பிரிமீயம் தொகைக்கு ஏற்ப வரி விலக்கும், கடன் பெறும் வசதியும் இருக்கின்றன.
(தொடரும்)
- கட்டுரையாளர் தொடர்புக்கு: vinoth.r@hindutamil.co.in