

விடுதலை வீரர் வெ. ராமலிங்கம் பிள்ளை 1888-ல் நாமக்கல் மோகனூரில் பிறந்தார். நம்மாழ்வார் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். 1908-ல் திருச்சி எஸ்.பி.ஜி. கல்லூரியில் படித்தார். இளமையிலேயே தெருக்கூத்து மற்றும் நாடகப் பாடல்களால் ஈர்க்கப்பட்டார். நாமக்கல் தொடக்க பள்ளி ஆசிரியராக பணியாற்றினார். ஆங்கிலேயரை எதிர்த்து விடுதலை பற்றி மாணவர்களிடம் பேசியதால் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
1930-ல் ராஜாஜி தலைமையில் வேதாரண்யம் நடைப்பயணத்தில் தொண்டர்கள் பாடுவதற்காக "கத்தியின்றி ரத்தமின்றி, யுத்தமொன்று வருகுது” என்று எழுதிய பாடல் புகழ்பெற்றது. 'தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவற்கோர் குணமுண்டு' ’தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா' போன்ற அவருடைய வரிகள் பிரசித்தம். ’தமிழ் ஹரிஜன்’ இதழை 1946 முதல் 1948 வரை நடத்தினார்.
இவர் படைப்புகளை தமிழக அரசு 1998-ல் நாட்டுடைமையாக்கியது. சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலக பத்துமாடிக் கட்டிடத்திற்கு இவரது பெயர் சூட்டியுள்ளது. சேலம் அருங்காட்சியகத்தில் அவரின் உடைமைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள் ளன. 1972 ஆகஸ்ட் 24-ம் தேதி காலமானார்.