முத்துக்கள் 10 - ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உழைத்த ம.ரா.ஜம்புநாதன்

முத்துக்கள் 10 - ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உழைத்த ம.ரா.ஜம்புநாதன்
Updated on
2 min read

நான்மறைகளையும் தமிழில் மொழிபெயர்த்த மகாபண்டிதரும், கல்வியாளரும், சமூக சீர்திருத்தவாதியுமான ம.ரா.ஜம்புநாதன் (M.R. Jambunathan) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 23). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் 10:

# திருச்சியை அடுத்த மணக்காலில் பிறந்தவர் (1896). இவரது முழுப்பெயர் மணக்கால் ராமசாமி ஜம்புநாதன். தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் மொழிகளில் புலமை பெற்றிருந்தார். சென்னையில் சிவில் இன்ஜினீயரிங் பயின்று 1921-ல்பட்டம் பெற்றார்.

# ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக சென்னையில் செயல்பட்டுவந்த Depressed Classes League என்ற அமைப்பின் அமைப்பாளராக 1918-ல் இருந்து 1920 வரை பணியாற்றினார். பம்பாய் மாநகராட்சியில் சிவில் இன்ஜினீயர் வேலை கிடைத்ததால் அங்கு சென்றார். அங்கு அடித்தட்டு மக்களுடன் நெருங்கிப் பழகினார்.

# சாலையோரச் சிறுவர்கள், கல்வி பெறுவதற்காக 1924-ல் ஒரு தொடக்கப் பள்ளியை ஆரம்பித்தார். தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவியில் ஏற்படுத்தப்பட்ட அந்தப் பள்ளிதான் பம்பாயில் தமிழர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட முதலாவது தமிழ்ப்பள்ளி.

# ஒடுக்கப்பட்டோர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் புரியும்படியாக வேதங்கள் அவரவர் தாய்மொழியில் முழுமையாகவும் முறையாகவும் கற்றுக்கொடுக்கப்பட்டால் எந்தவித ஏற்றத்தாழ்வும் இல்லாமல் அனைத்து மக்களும் தோழமையுடன் இணக்கமாக வாழமுடியும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார்.

# இந்த அடிப்படையில் நான்மறைகளையும் தமிழில் மொழி பெயர்த்தார். தருமபுரம் ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம், காசி மடாதிபதி ஆகியோரின் உதவியுடன் சாம வேதத்தின் தமிழ்ப் பதிப்பை 1935-ல்வெளியிட்டார். 1938, 1940-ம் ஆண்டுகளில் யஜுர், அதர்வண வேதங்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளை வெளியிட்டார்.

# 30 ஆண்டு காலம் அயராது பாடுபட்டு மொழிபெயர்த்த ரிக் வேதம் முதல் தொகுதியை, இவரது மறைவுக்குப் பிறகு பம்பாயில் 1978-ல் அணு விஞ்ஞானி ராஜா ராமண்ணா வெளியிட்டார். இரண்டாவது தொகுதி 1980-ல் வெளியிடப்பட்டது.

# தனது முதல் படைப்பான ‘சுவாமி தயானந்த சரஸ்வதியின் வாழ்க்கை வரலாற்றை’ ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதி 1918-ல்வெளியிட்டார். ‘வேதசந்திரிகை’, ‘சீனவேதம்’, ‘மாஜினியும் மனிதர் கடமைகளும்’, ‘யோக உடல்’, ‘ஸ்வாமி ஸ்ரத்தானந்தர்’, ‘திரிமூர்த்தி உண்மை’, ‘உபநிடத சிறுகதைகள் அடங்கிய கதா ரத்னம்’ உள்ளிட்ட நூல்களைப் படைத்து, வெளியிட்டார்.

# சர்வதேச ‘பென்’ சென்டர் (International PEN - Poem Essayists and Novelists Centre) அமைப்பின் இந்தியப் பிரிவின் கவுரவச் செயலாளராக 1933-ல் இருந்து பல ஆண்டுகள் பணியாற்றினார். இந்தஅமைப்பு சார்பாக சிதம்பரம், அண்ணாமலை நகரில் சர்வதேச மாநாட்டை 1954-ல்நடத்தினார்.

# இந்த மாநாட்டை அன்றைய குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையில் அன்றைய பிரதமர் நேரு தொடங்கி வைத்தார். பண்டைய நாணயங்கள் சேகரிப்பில் ஈடுபாடு கொண்டிருந்ததால், 7-ம் நூற்றாண்டில் இருந்து 10-ம் நூற்றாண்டு வரையிலான பல்லவ, சோழ, பாண்டிய மற்றும் விஜயநகர மன்னர்கள் கால நாணயங்களையும் பிரெஞ்சு, பிரிட்டிஷ் அரசுகள் வெளியிட்ட நாணயங்களையும் சேகரித்தார்.

# அவுரங்கசீப், மைசூர் உடையார்கள், மைசூர் சுல்தான்கள், ஹைதராபாத் நிஜாம்கள் ஆகியோர் கால நாணயங்களையும் சேகரித்து வைத்திருந்தார். இவை தற்போது மும்பை ரிசர்வ் வங்கிஅருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அடக்கமான குணமும் எளிமையான பண்பும் கொண்டிருந்த ம.ரா.ஜம்புநாதன் 1974-ம் ஆண்டு தனது 78வது வயதில் மறைந்தார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in