

அம்மா...அம்மா...என்று அழைத்தவாறே வீட்டிற்குள் நுழைந்தாள் குழலி. எதிர்க்குரல் வராததும் உள்ளே சென்று தேட, பின்கட்டு மரத்தடியில் அமர்ந்து அம்மா தீவிரமாகப் படித்துக் கொண்டிருப்பதைக் கண்டாள். என்னம்மா...நான் கூப்பிட்டது கூடத் தெரியாம அவ்வளவு மும்முரமாப் படிச்சிட்டிருக்கீங்க. குடுங்க, பார்ப்போம் என்று கையில் வாங்கினாள். சு. வெங்கடேசன் எழுதிய ‘வேள்பாரி’ வரலாற்றுப் புதினம்.
அம்மா: பாரியோட வீரத்தையும், வள்ளல் தன்மையும், பிற உயிர்கள் மேல அவன் கொண்ட கருணையையும் ரொம்ப அழகாப் பதிவு செய்திருக்காரு ஆசிரியர்.
குழலி: அம்மா, சாகித்ய அகாதமி விருது வாங்கின காவல் கோட்டம் புதினத்தை எழுதினவர்தானே சு.வெங்கடேசன்... சுடரையும் கூப்பிடுறேன். சேர்ந்து பேசுவோம். சுடர் வந்தான். மூவருமாக மீண்டும் பேச்சைத் தொடர்ந்தார்கள்.
அம்மா: வா சுடர்... பாரியைப் பத்திப் பேசிட்டிருந்தோம். குழலி நீயும் வந்தா நல்லாருக்கும்னு உன்னையும் கூப்பிட்டிருக்கா.
சுடர்: பாரி மகளிர் பாடின பாட்டைப் பத்திக் கூட நாங்க பேசிட்டிருந்தோம் அத்தை. இன்னைக்கு எங்களோட நீங்களும் உட்கார்ந்து பேசறதுதான் சிறப்பு...
அம்மா: பாரியோட புகழைப் பொறுக்க முடியாத வேந்தர்கள் எப்படி சூழ்ச்சியால அவனை வீழ்த்தினாங்க, பறம்பு மலை எப்படி வளமானதா இருந்துச்சு, பாரி எப்படியெல்லாம் சூழலைப் பாதுகாக்கிற உணர்வோட இருந்தான், மனிதர்கள் மட்டுமில்லாம எல்லா உயிர்கள் மேலயும் எப்படிப் பரிவோட இருந்தான்...
இப்படிப் பல செய்திகளைப் பேசிருக்கு இந்தப் புதினம். எல்லாக் காலத்துக்கும் பொருந்துற மாதிரியான செய்திகளும் இதுல இருக்கு. ரொம்பவே சுவாரஸ்யமா இருக்கு சுடர். நீங்க ரெண்டு பேரும் இந்தப் புதினத்தைப் படிச்சுப் பாருங்க.
சுடர்: நிச்சயமாப் படிக்கிறோம் அத்தை. முல்லைக்குத் தேரைக் கொடுத்தான் பாரின்னு சொல்றப்ப, சிலர் ஒரு கொடிக்காக ஏன் தேரக் கொடுக்கணும்னு நகைச்சுவையாப் பேசுறாங்க.
குழலி: கொடை மடம்னு ஒரு சொல் இருக்கு. கேள்விப்பட்டிருக்கீங்களா...
சுடர்: கொடை கொடுக்கிறது தெரியும். கொடை மடம்னா.. புரியலையே..
அம்மா: நான் சொல்லவா... எதற்கு எதைக்கொடுக்கறதுன்னு சிந்திக்காமக் கொடுக்கறது. இன்னாருக்கு இதைக் கொடுக்கலாம். இன்னாருக்கு இதைக் கொடுத்தாப் பதிலுக்கு நமக்கு என்ன கிடைக்கும்னு யோசிக்காமக் கொடுக்கறது. எந்தப் பயனையும் எதிர்பார்க்காம எல்லா உயிர்களுக்கும் உதவறதுன்னு சுருக்கமாச் சொல்லலாம். ஒப்புரவுன்னு ஒரு சொல் இருக்கு. நம்ம வள்ளுவர் சொல்வாரு, எப்படி மழை எதையும் எதிர்பார்க்காமல் பெய்யுதோ அதைப் போலன்னு..
குழலி: ரொம்ப அழகாச் சொன்னீங்கம்மா... மழை போலன்னு சொன்னதும் பாரி பத்தி, கபிலர் எழுதின ஒரு பாட்டு நினைவுக்கு வருது.
பாரி பாரி என்றுபல ஏத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டுஈண்டு உலகுபுரப் பதுவே
- கபிலர் (புறநானூறு134.)
இந்த உலகத்துல கொடை கொடுக்கறதுல, இந்த உலகத்தைப் பாதுகாக்கறதுல, பாரியைப் போல வேறு யாரும் இல்லைன்னு புகழ்றீங்களே. எதையும் எதிர்பாராம இந்த உலகத்தை வாழ்விக்கிற தன்மை கொண்ட மழை இருக்குன்னு சொல்லி, மேகத்தோட பயன் கருதாத் தன்மையை பாரியோட கொடைப் பண்புக்கு ஒப்புமை சொல்ற இந்தப் பாட்டு, பாடாண்திணையில அமைஞ்சது.
சுடர்: பாடாண்திணையா... புறப் பொருள்ல வரக் கூடிய திணை தான.
குழலி: ஆமா சுடர், அகத்திணைகள் ஐந்தைப் போலப் புறத்திணைகள் ஏழுன்னு பார்த்தோமே. வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை,வாகை, காஞ்சி, பாடாண் இப்படி ஏழு...
சுடர்: இந்தப் பாட்ட எப்படிப் பாடாண்திணைல வகைப்படுத்தினாங்கன்னு சொல்றியா...
குழலி: ஒரு ஆணோட இன்னும் சொல்லணும்னா ஒரு மன்னனோட சிறப்பான பண்புகள, அவனோட வீரத்த, புகழ, குடிப்பெருமைய, வள்ளல் தன்மைய, கல்விய, செல்வத்தப் பத்திப் புகழ்ந்து பாடுறதுதான் பாடாண்திணைக்கான இலக்கணம்.
நேரமாகவும், நாளைக்குப் பார்ப்போம் என்று குழலியிடமும் அத்தையிடமும் விடைபெற்றான் சுடர்.
- கட்டுரையாளர்: தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர்; தொடர்புக்கு: janagapriya84@gmail.com