

நான் பிளஸ் 2 படித்து வருகிறேன். எனக்கு விண்வெளி ஆராய்ச்சியாளராக வேண்டுமென்பது ஆசை. இந்திய விண்வெளித் துறையில் விஞ்ஞானி ஆக வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்?
- பா.நந்திதா. கனகம்மாள் சத்திரம் திருவள்ளூர்.
பல இளைஞர்களின் கனவு விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும் வகையில் விஞ்ஞானியாக வேண்டுமென்பதே. அதுவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ விண்ணில் செலுத்திய சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்க இன்னும் சில மணிநேரங்கள் மட்டுமே இருக்கும் தருணத்தில் நீங்கள் இந்த கேள்வியை கேட்டிருப்பதற்குப் பின்னால் இருக்கக் கூடிய உந்துதல் புரிகிறது. உங்களுடைய கனவு நனவாக இப்போதே மனநிறை வாழ்த்துகளை சொல்லிவிட்டு வழிகாட்டுதலை வழங்குகிறேன் நந்திதா.
விண்வெளி ஆராய்ச்சியாளராக கேரளமாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி (Indian Institute of Space Science and Technology) வழங்கப்படும் படிப்புகளை படிக்கலாம். இது ஓர் நிகர்நிலை பல்கலைக்கழகமாகும். இது மத்திய அரசின் கல்வி நிறுவனமாகும்.
இங்கு பிளஸ் 2வில் கணிதம், இயற்பியல், வேதியியல் படித்தவர்கள் ஜெஇஇநுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி அடைவதன் மூலம் பி.டெக் ஏவியானிக்ஸ், பி.டெக் ஃபிசிக்கல் சயின்ஸ் மற்றும் ஒருங்கிணைந்த எம்.டெக். இஞ்ஜினீயரிங் ஃபிசிக்ஸ் (Engineering Physics) படிக்கலாம். இங்கு உயர்மதிப்பெண் பெறும் மாணவர்களை இஸ்ரோவில் இருக்கக் கூடிய காலியிடங்கள் மற்றும் தேவையின் அடிப்படையில் பணியிடங்களுக்குத் தேர்வு செய்து கொள்கிறது.
குறைந்தபட்சம் பட்டப்படிப்பில் 60%எடுப்பவர்களுக்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது. அதுமட்டுமின்றி வெளிச்சந்தை வழி போட்டித் தேர்வுகள் மூலம் பொறியியல் பட்டதாரிகள் (குறிப்பிட்ட பாடப் பிரிவுகள் மட்டும்) கணிதம் இயற்பியல், வேதியியல் முதுகலை பயின்றவர்களும் தெரிவு செய்யப்படுகின்றனர். எனவே ஜெ.இ.இ. (அட்வான்ஸ்டு) தேர்வுக்குத் தயாராகி அதில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைய முயலுங்கள்.
| உயர்கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான உங்களது சந்தேகங்களை ‘வேலைக்கு நான் தயார்’ பகுதிக்கு vetrikodi@hindutamil.co.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி நிபுணரின் வழிகாட்டுதல் பெறுங்கள். |
- கட்டுரையாளர்: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை முன்னாள் இணை இயக்குநர்.