

அவுரங்காபாத் நகரம் கொஞ்சம் கொஞ்சமாக பிடிக்க ஆரம்பித்தது. அந்த நகரத்து மக்களும் நட்புடன் பழக ஆரம்பித்தனர். மழை குறைந்தபாடில்லை. குஜராத் மாநிலத்தின் ரான் ஆப் கட்ச் செல்ல வேண்டும். மும்பையிலிருந்தே சென்றிருக்க வேண்டும்.
அப்போது குஜராத் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்ததால் செல்ல முடியவில்லை. சரி இப்போது செல்லாம் என அங்கிருக்கும் நண்பர்களிடம் விசாரித்தால், வெள்ள பாதிப்பு குறைந்துவிட்டது, ஆனால் மழை நிற்கவில்லை என்றார்கள். வேறு வழியில்லை, புதிய பயண திட்டத்தை உருவாக்க வேண்டும்.
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர், ஜெய்சல்மர், ஜெய்பூர் நகரங்களுக்கு செல்வதுதான் திட்டமாக இருந்தது. ஆனால், அவுரங்காபாத்தில் இருந்து திட்டம் போடும்போது, மொத்தமாக மாற்ற வேண்டும். சிலமணி நேர தேடல்களுக்கு பின், மத்தியபிரதேச மாநிலம் இந்தோர் சென்று அங்கிருந்து உதய்பூர் செல்வதாக முடிவானது.
அவுரங்காபாத் வந்தபோது வண்டி எப்படி பஞ்சர் ஆனதோ, அங்கிருந்து கிளம்பும்போதும் அதேமாதிரி பஞ்சர். சொல்லிவைத்தார்போல் ஒரு கிலோ மீட்டரில் ஒரு பஞ்சர் கடை இருந்தது. பஞ்சர் போட்டுவிட்டு இந்தோருக்கு பொறுமையாக கிளம்பினோம். ஒரு மாலைதான் இந்தோரில் இருந்தாலும், அந்த நகரம் நமக்கு ரொம்பவே பிடித்துவிட்டது. அழகாகவும் அதே சமயம் சுத்தமாகவும் இருந்தது. நமக்கு ஆச்சர்யமாக இருந்தது இந்தோர்.
ஆச்சரியமூட்டும் ஊர்: நாளை காலை ராஜஸ்தானின் உதய்பூர் செல்லவேண்டும். ராஜஸ்தான் என்றாலே பாலைவனம், வெயில், ஒட்டகம் என்ற பொதுபுத்தியோடுதான் உதய்பூர் சென்றோம். அங்கு சென்ற பிறகுதான் தெரிந்தது நான் நினைத்தது எல்லாம் தவறு. அழகிய மலைகளாலும் ஏரிகளாலும் நம்மை ஆச்சரியப்படுத்தியது உதய்பூர். எத்தனை எத்தனை ஏரிகள், அந்த ஏரிகளை சுற்றிலும், ஏரிகளுக்குள்ளும் பிரம்மாண்டமான அரண்மனைகள். ராஜஸ்தானின் ஒரு பகுதிதான் பாலைவனம், மற்ற அனைத்தும் பெரும்பாலும் சோலைவனம்தான்.
உதய்பூர் நகரத்தை இரண்டாம் மகாராஜா உதய் சிங் 1559ஆம் ஆண்டு உருவாக்கியுள்ளார். மேவார் அரசின் தலைநகராக உதய்பூர் இருந்திருக்கிறது. உதய்பூருக்கு அழகே அங்குள்ள ஏரிகள்தான். 1680களில் செயற்கையாக இந்த ஏரிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
மழை அரண்மனை: இந்த ஏரியினுள் மூன்று சிறிய தீவுகள் இருக்கிறது. பிச்சோலா ஏரியில் படகு சவாரி செய்து அங்குள்ள அரண்மனைகளின் அழகை பார்த்துவந்தோம். அடுத்து சென்ற இடம் மழை அரண்மனை. உதய்பூரில் இருக்கும் ஒரு மலையின் உச்சியில் அமைந்துள்ளது இந்த அரண்மனை. 19 ஆம் நூற்றாண்டில் மகாராணா சஜ்ஜன் சிங்கின் கட்டளையின் கீழ் கட்டப்பட்ட இந்த அரண்மனை முதலில் மழைக்கால மேகங்களைக் காண மன்னர் பயன்படுத்திய அரண்மனையாக இருந்தது.
அரண்மனைகள், மலைக்கோயில், படகுசவாரி, மழை அரண்மனை, மனிதர்கள், உணவு என எல்லாவிதத்திலும் உதய்பூர் நமக்கு பிடித்துப்போனது. ஏரிகளையும் இங்குள்ள அரண்மனையின் தங்கவும் பல வெளிநாட்டினர் படையெடுத்து வருகின்றனர். இந்த ஏரிகளின் அழகால் உதய்பூர் இந்தியாவின் வெனிஸ் என்று அழைக்கப்படுகிறது.
உதய்பூரில் இருந்த மூன்று நாட்களும் அத்தனை அழகாக இருந்தது. மீண்டும் குடும்பத்துடன் உதய்பூர் வரவேண்டும் என்ற ஆசையுடன் அடுத்த மிக முக்கியமான நகருக்கு கிளம்பினோம்.
கட்டுரையாளர்: இதழியலாளர், கீழடி, கண்ணகி கோட்டம் உள்ளிட்ட தமிழ் பண்பாட்டு நிலப்பரப்புகளை ஆவணப்படம் பிடித்தவர், பயணப் பிரியை.
- தொடர்புக்கு: bharaniilango@gmail.com