

புகழ்பெற்ற எழுத்தாளர் சி.சு.செல்லப்பாவின் ’பழக்க வாசனை’ கதையின் ஃபார்மலா போல நீங்களும் எழுதிப் பார்த்தீர்களா? இந்த வடிவத்தில் நான் பல பள்ளிகளில் கதை எழுதும் பயிற்சி வகுப்புகள் நடத்தியிருக்கிறேன். அந்த வகுப்புகளில் எழுதப்பட்ட ஒரு கதையை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
விலங்கு, பறவை அல்லது ஏதோ ஒன்று தான் இருக்கும் இடத்தில் இருந்து வேறு இடத்திற்குச் சென்று விடுகிறது. ஒரு கட்டத்தில் மீண்டும் பழைய இடத்திற்கே வரும் சூழலில் அந்த இடத்தில் இருக்க முடியாமல் போய்விடுகிறது- இதுதான் அந்தக் கதை ஃபார்மலா. இனி கதையைப் பார்ப்போம்.
பூக்களை மட்டும் ரசித்தவர்! - ஓர் அழகான செடி. அதில் அழகான பூக்கள் பூத்திருந்தன. எல்லோரும் அந்தப் பூக்களைப் பார்த்து ரசித்து விட்டுச் சென்றனர். அந்தப் பூக்களின் அருகே இருக்கும் இலைகளும் எல்லோரும் தங்களையும் பார்த்து ரசிப்பதாக நினைத்து, தங்களைப் பெருமையுடன் நினைத்துக் கொண்டன.
அங்கே வந்த முரட்டு ஆள், பூக்களை ரசித்தார். பின், அவரின் அலைபேசிக்கு ஓர் அழைப்பு வந்தது. அதை எடுத்து பேசிக் கொண்டே செடியில் உள்ள ஓர் இலையைப் பறித்து அருகில் இருந்த மேஜை மீது போட்டு விட்டார்.
அதுவரை மகிழ்ச்சியோடு இருந்த அந்த இலை, கதறி துடித்தது. ஆனால், அந்த முரட்டு ஆளுக்கு அது கேட்கவே இல்லை. செடியில் இருந்த மற்ற இலைகளும் பூக்களும் அந்த இலையைப் பரிதாபமாகப் பார்த்தன. குறிப்பாக, அந்த இலையின் அருகே இருந்த பூ ரொம்பவும் வருத்தப்பட்டது.
தான் இருந்த இடத்திற்கு மீண்டும் போய்விட மாட்டோமா… தன் நண்பர்களோடு மகிழ்ச்சியோடு பேசிவிட மாட்டோமா… என்று தவித்தது அந்த இலை. ஆனால், வெயில் அதிகரிக்க, மேஜையில் கிடந்த அந்த இலை வாடத் தொடங்கியது.
மகிழ்ச்சி திரும்பியதா? - சிறிது நேரத்தில் திடீரென்று கருமேகங்கள் வானில் தோன்றின. வெயில் மறைந்தது. வேகமாகக் காற்று வீசியது. மேஜையின் மீது இருந்த இலையை, காற்று வேகமாகத் தள்ளியது. மேஜையின் விளிம்புக்கு வந்துவிட்டது இலை. காற்றும் இன்னும் பலமாக வீசியது. அதில் பறந்த இலை மீண்டும் செடியின் மேல் படர்ந்தது. அந்தச் செடியும் பூக்களும் இலைகளும் உற்சாகமாக அதை வரவேற்றன. அந்த இலைக்கு மகிழ்ச்சி தாளவில்லை.
தான் இருந்த இடத்திற்கே மீண்டும் வந்துவிட்டோம் என்று சத்தமாகச் சிரித்தது. மீண்டும் காற்று வீசினால் அங்கிருந்து நழுவி விடுவோமே என்று கவலைப்பட்டது. ஆனால், அந்தளவு வேகத்தில் காற்று வீசவில்லை. அதனால் எல்லாமே மகிழ்ச்சியாக இருந்தன.
சிறிதுநேரத்தில் மழைத் தூறல்கள் விழத் தொடங்கின. அடுத்த சில நிமிடங்களில் பெரியமழையாக மாறிவிட்டது. அதனால், செடியில் படர்ந்து இருந்த அந்த இலை தரையில் விழுந்தது. அனைத்தும் மீண்டும் சோகமாகி விட்டன. அந்த இலையின் அருகே இருந்த பூ ரொம்ப வேதனைப்பட்டது. மழையை நன்கு நிமிர்ந்து பார்த்தது. மழையின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் அந்தப் பூவும் செடியில் இருந்து உதிர்ந்து அந்த இலையின் அருகே விழுந்தது. அந்த இரண்டும் கைக்கோர்த்தப்படியே கிடந்தன.
இப்படி ஒரு கதையை எழுதியிருந்தார் ஒரு மாணவி. எனக்கு மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது. கதை ஃபார்மலாவை நன்கு உள்வாங்கி புதிய கதை உருவாக்கிய அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தேன். அடுத்த இதழில், கதை எழுத இன்னொரு ஃபார்மலா பற்றி விரிவாகச் சொல்கிறேன்.
வீட்டுக் கதை: இந்தக் கதையில் இலைக்குப் பதில், செடியில் இருந்த ஒரு பழம் விழுந்து விட்டால் என்னவாகும் என்று யோசித்து கதையாக எழுதுங்கள்.
- கட்டுரையாளர் : எழுத்தாளர், ‘ஒற்றைச் சிறகு ஓவியா’, ‘வித்தைக்காரச் சிறுமி’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; தொடர்புக்கு: vishnupuramsaravanan@gmail.com