மகத்தான மருத்துவர்கள் - 39: காந்தியடிகளின் மகன் உயிரை காப்பாற்றியவர்

மகத்தான மருத்துவர்கள் - 39: காந்தியடிகளின் மகன் உயிரை காப்பாற்றியவர்
Updated on
2 min read

வெளிநாடு சென்று படித்துவிட்டு வந்ததால் சாத்திரங்களின் பெயரைச் சொல்லி சொந்த மக்களே டாக்டர் ராஜனை ஒதுக்கி வைத்தனர். இதனால் தாய்நாட்டில் வறுமையில் உழன்ற டாக்டர் ராஜன் மீண்டும் ரங்கூனுக்கே சென்று பணிபுரியத் தொடங்கினார். இப்போது முழுமையாக அவரை ஏற்றுக்கொண்ட பர்மாவினர், ஒருகட்டத்தில் அவரைக் கொண்டாடவும் தொடங்கினர்.

தொடர்ந்து மருத்துவப் பணி புரிந்து தேவையான அளவு செல்வத்தை சேர்த்ததுடன், மூத்த மகளுக்குத் திருமணமும் நடத்தியிருந்த சமயத்தில், பேரிடி விழுந்தது அவர் வாழ்வில். நான்காவது முறையாக கர்ப்பம் தரித்த ராஜனின் மனைவி, அப்போது ஆண்குழந்தையை பிரசவித்ததோடு, பிரசவித்த ஓரிரு வாரங்களில் இறந்தும் போனார்.

காந்தி உரைக்கு தமிழாக்கம்: கையில் குழந்தைகளுடன் 1914 ஆம் ஆண்டு மீண்டும் திருவரங்கம் திரும்பிய அவர், நாடு இருந்த நிலையைப் பார்த்து வேதனையுற்று மருத்துவத்தை விட்டு சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக இறங்கினார். அதேசமயம் சென்னையில் காந்தியடிகளை மீண்டும் சந்திக்க நேரிட, நாட்டு விடுதலைக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்த ராஜன், தமிழ்நாட்டில் உப்பு சத்தியாகிரகம், தீண்டாமை ஒழிப்பு உள்ளிட்ட பலபோராட்டங்களை ராஜாஜி உள்ளிட்ட பல தலைவர்களுடன் முன்னின்று நடத்த ஆரம்பித்தார்.

அந்த சமயத்தில் ஒருமுறை அவர் பிரிட்டிஷாரால் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மற்றும் கோவைச் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது தந்தை இறந்த செய்தி வந்தபோதும் தன்னை சிறையிலிருந்து அனுப்பச் சொல்லி அவர் கேட்கவில்லையாம். சிறையிலிருந்து வெளிவந்த பிறகும் காந்தியடிகளுடன் தொடர்ந்து பயணித்த அவர், காந்தியடிகளின் விடுதலை இயக்க சொற்பொழிவுகளுக்கு தமிழ் மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கி, தனது மக்களிடையே தாய்த்தமிழில் சுதந்திர வேட்கையைக் கூட்டினார்.

ஒருமுறை டாக்டர் ராஜனின் உற்ற நண்பர் ஒருவர், "உன்னைப் போன்ற திறமைசாலிகள் தொழிலை விட்டுவிட்டு சிறை செல்வதால் நாட்டிற்கு என்ன லாபம்? ஏழைகளுக்கு இலவச சிகிச்சை செய்தால் அது சேவையாகாதா?" என்று உபதேசம் செய்தார். அதன் பின்னர் 1923ஆம் ஆண்டு, திருச்சியில் காந்தி தலைமையில் ஒரு சிறிய மருத்துவமனையை மருத்துவர் ராஜன் தொடங்கினார்.

அதில் எளியவர்களுக்கு இலவசமாகவும் மற்றவர்களிடம் பணம் பெற்றும் சேவை செய்துவந்தார். 7 ஆண்டுகள் மருத்துவம் மற்றும் சுதந்திரப் போராட்டம் ஆகிய இரண்டிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இந்த சமயத்தில் காந்தியடிகளின் மகனுக்கு அறுவை சிகிச்சையும் செய்து, அவரைக் காப்பாற்றவும் செய்தார் டாக்டர் ராஜன்.

தேடி வந்த அமைச்சர் பதவி: தமிழ்நாட்டில் தீண்டாமை இயக்கம் மற்றும் அரிஜன சேவா சங்கத்திற்கு தலைமை வகித்த அவர், 1934 ஆம் ஆண்டு காங்கிரஸ் வேட்பாளராக நின்று வென்றதோடு, 1937 ஆம் ஆண்டு சுகாதார துறை அமைச்சராகவும் பதவியேற்றார்.

சுகாதாரத் துறை கைக்கு வந்ததும், தான் விரும்பிய பல மாற்றங்களை சுகாதாரத் துறையில் நிகழ்த்திய இவர், தமிழகத்தில் பல தலைமை மருத்துவமனைகளை நிறுவி, அவற்றில் திறமையான அரசு மருத்துவர்களை நியமித்தார். அவர்களுக்கான ஒழுக்க விதிகளையும் கொண்டு வந்தார்.

மேலும் அவர்களுக்குப் போதிய ஊதியமும் அளித்து, சுகாதாரத் துறையை ஊழலற்ற முன்னேற்றப் பாதையில் செலுத்தினார். இன்றைக்கும் பெருமளவு மருத்துவர்களை நமது உலகிற்கு வழங்கும் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியை 1938 ஆம் ஆண்டு 72 மாணவர்களுடன் தொடங்கியது டாக்டர் ராஜன்தான்.

இரண்டாம் உலகப் போர் சமயத்தில் காங்கிரஸ் அரசு தனது அமைச்சரவையை முற்றிலுமாக விலக்கிக் கொண்டது. அப்போது அமைச்சர் பதவியை இழந்த ராஜன், விவசாயத்தில் ஈடுபட்டு, அதில் சாதி மத பேதமின்றி ஊர் மக்கள் அனைவரும் இணைத்து ஒன்றாக பணிபுரியச் செய்தார்.

சுதந்திரத்திற்குப் பிறகு தமிழகத்தில் உணவு மற்றும் சுகாதாரத் துறையின் அமைச்சராகப் பொறுப்பேற்று அரும்பணியாற்றிய டாக்டர் ராஜனுக்கு குடல் அழற்சி ஏற்பட்டது. இதற்கு நடத்தப்பட்ட அறுவைச்சிகிச்சை பலனின்றி 1953 ஆம் ஆண்டு, 73 வயதில் இயற்கை எய்தினார்.

வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு ஆசையையும் பெரும் போராட்டத்திற்குப் பிறகு மட்டுமே அடைய முடிந்தாலும், அதைப் பற்றி கவலையேபடாமல், அனைத்திலும் முயன்று சாதனை புரிந்த இந்த மருத்துவரை எல்லா நாளும் நம் நினைவில் கொள்வோமாக.

(மகிமை தொடரும்)

- கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in