கதை கேளு கதை கேளு 39: சுல்தானாவின் கனவு

கதை கேளு கதை கேளு 39: சுல்தானாவின் கனவு
Updated on
2 min read

நூறாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட முதல் அறிவியல் புனைகதை சுல்தானாவின் கனவு. எழுதியவர் ரொக்கேயா பேகம். கதைக்கு செல்வதற்கு முன்பு நூலை எழுதிய ஆசிரியர் பற்றி அறிந்துகொள்ளலாமா? காரணம் அறிவியல் புனைகதை எழுதிய முதல் பெண் எழுத்தாளர் இவர்.

ரொக்கேயா பேகம் இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர். பள்ளி சென்று படிக்க வேண்டும் என்ற மகளின் தீராத ஆர்வத்தைக் கண்டு, அவருடைய தந்தை வீட்டிற்கே ஆசிரியரை வரவழைத்து உருது மொழி கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்கிறார். பிறகு உறவினர்களின் ஏளனப்பேச்சால் மகளின் படிப்பை பாதியில் நிறுத்திவிடுகிறார். ஆனால் ரொக்கேயா பேகம் ரகசியமாக தன் சகோதரரிடம் வங்காளம் மற்றும் ஆங்கில மொழியையும் பேசவும், எழுதவும் கற்றுக்கொள்கிறார்.

கல்வி தாகம்: 18 வயதில் சகாவத் ஹூசைன் என்ற நீதிபதிக்கு இரண்டாவது தாரமாக மணம் முடிக்கப்பெறுகிறார். நீதிபதி தன் மனைவி ரொக்கேயா பேகத்தின் கல்வி கற்கும் ஆர்வத்தை அறிந்துகொண்டு, கதை, கவிதை, கட்டுரை முதலானவற்றை எழுதுமாறு ஊக்குவிக்கிறார். ஒருமுறைவெளியூர் சென்ற கணவர் வீடுதிரும்பும்போது, தான் எழுதிய அறிவியல் புனைகதையை ரொக்கேயா பேகம் பரிசளிக்கிறார். அதுதான் சுல்தானாவின் கனவு.

பிரம்மாண்ட அழகு: 1903-ம் ஆண்டில் ஏறக்குறைய நூறாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட, இந்தியாவிலேயே முதல் பெண்ணிய அறிவியல் புனைகதை நூல் சுல்தானாவின் கனவு. சுல்தானா தன் படுக்கையறையில் சாய்வுநாற்காலியில் அமர்ந்துகொண்டிருக்கிறாள். கண் விழித்து பார்க்கும்போது சுல்தானாவின் தோழி சாரா ஏர்கார் மூலம் வந்திறங்கி , சுல்தானாவின் முன்பு நின்று கொண்டிருக்கிறார்.

சிறிது உலாவ போகலாம் என்று சுல்தானாவை அழைத்துக் கொண்டு செல்கிறார். வெளியில் பேசிக்கொண்டே நடந்துச் செல்கிறார்கள். வழியில் ஒரு ஆண் கூடசுல்தானாவின் கண்களுக்கு தென்படவில்லை. தன் தோழி சாராவிடம் நகரின் பிரம்மாண்ட அழகைப் புகழ்கிறார். சாலைகள் சேறு சகதியில்லாமல் இருப்பதை பாராட்டுகிறார்.

சாரா தங்கள் நாட்டு இராணிக்கு அறிவியல் கண்டுபிடிப்புகள் மீதுள்ள ஆர்வம் பற்றியும், அடுப்பில்லாமல் சூரிய சக்தி கொண்டு உருவாக்கப்பட்டுள்ள சமையலறைகள் பற்றியும் சாரா பகிர்ந்துகொள்கிறார். தங்கள் ராணியின் மாளிகைக்கு அழைத்துச் சென்று சுல்தானாவை அறிமுகப்படுத்துகிறார். மக்கள் மீது அன்பு கொண்டவராய், அறிவியல் மட்டுமே மக்களை இன்பமான வாழ்விற்கு அழைத்துச் செல்லும் என்ற நம்பிக்கையுடன் ராணி கம்பீரமாகக் காட்சியளிக்கிறார்.

கைவேலைப்பாடுகள்: சாரா தன் வீட்டிற்கு சுல்தானாவை அழைத்துச் செல்கிறார். வீட்டில் நிறைந்துள்ள கைவேலைப்பாடுகள் கொண்ட திரைச்சீலைகள் கண்ணைக் கவருகின்றன. இந்த திரைச்சீலைகளை பின்னியது யார்? என சுல்தானா கேட்கிறார். நான்தான் என்கிறார் சாரா. நீங்கள் அலுவலகத்துக்கு செல்கிறீர்களே? பிறகெப்படி என வினவுகிறார் சுல்தானா. அலுவலக வேலைகளை முடிக்க இரண்டு மணிநேரம் போதுமானது.

ஆனால் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை அலுவலகப் பணிக்கு செல்லும் ஆண்கள், வீணாகக் கழிக்கும் பொழுதை கணக்கில் வைத்தால், பணி செய்யும் நேரம் குறைவுதான். பெண்கள் வீணாகப் பொழுதைக் கழிக்காமல் பணியை மட்டும் செய்துமுடிக்கிறோம் என்கிறார்.

பெண்களாலும் முடியும்: ஆண்களை இந்த நகருக்குள் வந்ததிலிருந்து காண இயலவில்லையே என்கிறார் சுல்தானா. பெண்களை அடைத்து வைத்து அடிமைகளாய் நடத்திய ஆண்கள் தற்போது பாதுகாப்பாக மர்தானாவில் இருக்கிறார்கள். காலங்காலமாக பெண்களை ஜெனானாவில் அடைத்து வைத்திருந்தார்கள்.

தற்போது அவர்களின் தேவை நமக்கில்லை என்கிறார். கடினமான வேலைகளை ஆண்கள்தானே செய்ய முடியும் என்கிறார் சுல்தானா. அவசியமில்லை. வயல்களை மின்சார ஆற்றலைக் கொண்டு உழுகிறோம். மற்ற கடினமான வேலைகளை எல்லாம் மின்சார உந்துவிசையைக் கொண்டே செய்கிறோம் என்கிறார் சாரா.

இது பெண்ணிய தேசம். அறமே இங்கு ஆட்சி செய்கிறாள் என்கிறார் சாரா. மீண்டும் தன் ஊருக்கு ஏர்காரில் திரும்பும் தருணத்தில் தவறி கீழேவிழுகிறார் சுல்தானா. அவரின் கனவும் கலைகிறது. பெண் சுதந்திரம் பற்றிய ரொக்கேயா பேகத்தின் கனவே சுல்தானாவின் கனவு.மர்தானாக்கள் வேண்டாம். ஜெனானாவும்வேண்டாம். ஆணும், பெண்ணும் சமம் என மக்கள் மனதிற்கு புரிந்தால் போதும்.

- கட்டுரையாளர்: குழந்தை நேய செயற்பாட்டாளர், ஆசிரியர், அரசுப்பள்ளி, திருப்புட்குழி, காஞ்சிபுரம் தொடர்புக்கு: udhayalakshmir@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in