திறன் 365: சொல்லியெறி, தடு, தொடர்…

திறன் 365: சொல்லியெறி, தடு, தொடர்…
Updated on
2 min read

வகுப்பறை சுவராஸ்சியம் நிறைந்ததாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பாடவேளையும் ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும், புதிய அனுபவத்தையும் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு அனுபவமும் வித்தியாசத்தை வழங்கவேண்டும்.

வித்தியாசம் தான் அழகு. குழந்தைகளை ரசிக்க வைக்கும். ஆனந்தமடையச் செய்யும். ஆனந்தம், ஆசிரியரைத் தேடி ஓடிவரச் செய்யும். ஆசிரியர் - மாணவர் உறவு மேம்படச் செய்யும். கற்பித்தப்பின், பாடக்கருத்துக்களை வலுவூட்டுவதற்கு விளையாட்டுகளைப் பயன்படுத்தலாம். விளையாட விரும்பாத குழந்தை உண்டா? அதுவும் துவக்கப்பள்ளிக் குழந்தைகள் விளையாட்டு என்றவுடன் துள்ளிக் குதித்து ஓடிவருவார்கள்.

எழுத்துக்கள் அறிமுகம்: எழுத்துக்களை அறிமுகம் செய்தபின் இந்த விளையாட்டைப் பயன்படுத்த வேண்டும். ஆங்கிலம் எனில்குழந்தைகளிடம் a,e,i,o,u என்பதுஉயிரெழுத்து என கட்டாயம் அறிமுகம் செய்திருக்க வேண்டும். இந்த விளையாட்டில் அதிகபட்சம் 27 மாணவர்கள் கலந்து கொள்ளமுடியும். ஆங்கில எழுத்துக்கள் ஒட்டிய பதாகையை அனைவருக்கும் கொடுக்கவும். 27வது நபரிடம் பிளாஸ்டிக் பந்து அல்லது காகித பந்தை கொடுக்கச் செய்யவும்.

காகித பந்து வைத்திருப்பவர் உயிரெழுத்து தவிர பிற எழுத்துக்கள் அணிந்தவர்கள் மீது எறியலாம். அவர் எறியும் போது எழுத்தை குறிப்பிட்டு சொல்லி எறியவேண்டும்.

ஆசிரியர் விசில் அல்லது கைதட்டியவுடன், மாணவர்கள் வகுப்பறையில் இங்கும் அங்கும் ஓடவேண்டும். காகிதப்பந்து வைத்திருப்பவர் ஒருவரைக் குறிபார்த்து எறியமுடிவு எடுத்தால், அந்த நபர் அணிந்துள்ள பதாகையில் உள்ள எழுத்தை சொல்லி, பந்தை எறிய வேண்டும். எழுத்தை சரியாக சொல்லவில்லை எனில், அந்த குறிப்பிட்ட எழுத்து அந்த மாணவருக்குத் தெரியவில்லை என்பதை ஆசிரியர் குறித்து வைத்து அவருக்கு அந்த எழுத்தை பின்னர் கற்றுத்தர வேண்டும்.

இப்படி பந்து எறியும் போது, உயிரெழுத்து அணிந்துள்ள மாணவர்கள் பந்தை தடுக்கலாம். குறிப்பிட்ட நபரை காப்பாற்றலாம். அப்படி காப்பாற்றினால், அந்த உயிரெழுத்து அணிந்த நபர், ” I am vowel ‘A’ . I saved ‘M’. ” எனக் கூற வேண்டும்.

பந்து விளையாட்டு: பந்து குறிப்பிட்ட எழுத்து அணிந்தவர் மீது பட்டுவிட்டால், அவர் தன்னிடம் உள்ள பதாகையை எறிந்தவருக்கு வழங்க வேண்டும். பின்பு, அவர் பந்து எறிய வேண்டும். எல்லா எழுத்துக்களும் சொல்லி முடிக்கும் வரை விளையாட்டைத் தொடரலாம்.

இந்த விளையாட்டை, எண்கள் வலுப்படுத்தவும் பயன்படுத்தலாம். 1 முதல் 9 வரை எண்கள் எழுதிய பதாகைகள் வழங்கவும். 0, 10 என்ற எண்ணை அறிமுகப்படுத்த வேண்டும். அந்தப் பதாகைகளையும் அணிவிக்கும் முன்பு, அந்த எண்களை அறிமுகப்படுத்தவும்.

வழக்கம் போல் விளையாடவும். ஒருவர் பந்து எறிவார். எறியும் போது ’8’ என சொல்லி எறிய வேண்டும். 0 வைத்துள்ள நபர் அவர் மீது பந்து படாமல் காப்பாற்றிவிட்டால், அவர் ”என் பெயர் பூச்சியம், நான் 8 என்ற எண்ணை காப்பாற்றிவிட்டேன்.” எனக் கூறுவார். ஆட்டம் இப்படி அனைத்து எண்களும் சொல்லி முடியும் வரை தொடரும்.

மூன்று, நான்கு, ஐந்தாம் வகுப்புகளுக்கு பாகா எண்கள் உள்ளவர்கள் தடுக்கலாம். மூன்று இலக்க, நான்கு இலக்க எண்கள் உள்ள பதாகைகள் அணிவித்து, அந்த எண்களை வலுப்படுத்தலாம்.

வித்தியாசம் அழகு: தமிழ் எழுத்துகளை வலுப்படுத்தவும் இந்த விளையாட்டை பயன்படுத்தலாம். உயிரெழுத்துகள் காப்பாற்றும்அரணாகத் திகழலாம். உயிர்மெய்எழுத்து வரிசைகளை அறிமுகப்படுத்தி விளையாடலாம். வித்தியாசம்அழகு. ஆம்! வித்தியாசமான ஆசிரியரே குழந்தைகளுக்கு பிடித்தவர். முயற்சி செய்யுங்கள்.

- எழுத்தாளர், தலைமையாசிரியர், டாக்டர் டி. திருஞானம் தொடக்கப் பள்ளி, மதுரை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in