

பிரபல உலோகவியலாளரும் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் முதல் இயக்குநருமான டாக்டர் பிரம்ம பிரகாஷ் (Brahm Prakash) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 21). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் 10:
# பாகிஸ்தானின் லாகூர் நகரில் (1912) பிறந்தவர். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்று, முனைவர் பட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். பிரபல விஞ்ஞானி சாந்தி ஸ்வரூப் பட்னாகருடன் இணைந்து, பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
# அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி மையத்தில் (எம்ஐடி) உயர்நிலைப் பயிற்சிகளை மேற்கொண்டார். கனிமப் பொறியியல், உலோக வெப்ப இயக்கவியலில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு 2-வது முறை முனைவர் பட்டம் பெற்றார்.
# 1949-ல் நாடு திரும்பியதும், பம்பாயில் உள்ள அணுசக்தி நிறுவனத்தில் ஹோமி பாபாவால் உலோகவியலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1951-ல் பெங்களூர், இந்திய அறிவியல் கழகத்தில் உலோகவியல் துறையின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டார்.
# நாட்டுக்குத் தேவையான மிக முக்கிய அணுஉலை உலோகப் பொருட்களை உருவாக்கி, உற்பத்தி செய்தவர். இந்திய அறிவியல் கழகத்தில் உலோகவியல் படிப்புக்கு நவீன பாடத்திட்டம் வகுத்தார். விரைவில் செமஸ்டர் முறையும் அறிமுகம் செய்யப்பட்டது. உலோகவியல், வெப்ப இயக்கவியல் உள்ளிட்ட பாடங்களை மாணவர்களுக்கு இவரே கற்பித்தார்.
# தன் கருத்துகள், யோசனைகளை சுருக்கமாக கூறுவார். தான் அதிகம் பேசாமல் மற்றவர்களைப் பேசவைப்பார். சக விஞ்ஞானிகளை, இளம் விஞ்ஞானிகளைப் பேசத் தூண்டி அவர்களது எண்ணங்களைக் கேட்டறிவார். குறைந்த நேரத்தில் விரைவாக, துல்லியமாக முடிவு எடுப்பார்.
# இவரது தலைமையில் இத்துறையில் 6 ஆண்டுகளில் பல்வேறு வகையானஆராய்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இதனால் உலோகவியல் கல்வி, ஆராய்ச்சித் துறை இந்தியாவில் நல்ல வளர்ச்சி கண்டது.
# அணுசக்தியை அமைதி வழிகளில் பயன்படுத்துவதை வலியுறுத்தும் வகையில் ஜெனீவாவில் நடந்த ஐ.நா. முதலாவது மாநாட்டில் அறிவியல் செயலாளர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1952 முதல் 1972 வரை நாட்டின் அணுசக்தி திட்டங்களில் முக்கியப் பங்காற்றினார். அணுசக்தி தொடர்பான பல திட்டங்களின் திட்ட இயக்குநராக பணியாற்றினார்.
# விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குநராக 1972-ல் பதவி ஏற்றார். அப்போது, திருவனந்தபுரத்தில் பல்வேறுசிறு சிறு அமைப்புகளாக இருந்த விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையங்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் விக்ரம் சாராபாய் மையத்துடன் சிறப்பாக ஒன்றிணைத்தார்.
# விண்வெளி ஆணைய உறுப்பினராக இறுதிவரை செயல்பட்டார். நாட்டின் பலவெற்றிகரமான செயற்கைக்கோள், ஏவுகணை திட்டங்களில் முக்கியப் பங்காற்றினார். பதற்றப்படாத பக்குவம், நேசம், பரிவு, அனைவரையும் அரவணைத்துப்போகும் பண்பு, அர்ப்பணிப்பு உணர்வு என தனித்துவம் வாய்ந்த பண்புகளையும் கொண்டவர். இதனாலேயே ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் உள்ளிட்ட சகாக்களால் பெரிதும் நேசிக்கப்பட்டார்.
# பத்மஸ்ரீ, பத்மவிபூஷண் விருதுகளைப் பெற்றவர். நாட்டின் அணுசக்தி, ஆராய்ச்சி, அறிவியல் தொழில்நுட்பக் களங்களில் இறுதிவரை மகத்தான பங்களிப்பை வழங்கிய டாக்டர் பிரம்ம பிரகாஷ் 72-வது வயதில் (1984) மறைந்தார். இவரது பெயரில் இந்திய தேசிய அறிவியல் அகாடமி ஆண்டுதோறும் பரிசு வழங்கி வருகிறது.