

ஆரோக்கியமான வாழ்க்கை முறையோடு சலிப்பு இல்லாத கடின உழைப்பினால் ஜப்பானில் 100 வயதுக்கு மேல் வாழக்கூடியவர்கள் பலர் இருக்கிறார்கள். இந்த ரகசியத்தை சரியாக புரிஞ்சிகிட்டு கடைப்ப்பிடிச்சா நாமும் 100 வயதுக்கு மேல வாழலாம். உங்கள்ல யாருக்கு 100 வயசு வாழணும்னு ஆசை இருக்கு?
மகிழ்ச்சியா இருக்கு. எல்லாருக்குமே அந்த ஆசை இருக்கு. வாழ்த்துகள். நிச்சயமா முடியும். அதுக்கு நாம் என்ன செய்யணும்? ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் இருக்கணும்… எல்லா நாளும், நிறைய உழைக்கணும். சரி. இனி… ஜப்பான் நாட்டின் புவியியல் பற்றிக் கொஞ்சம் பார்க்கலாமா?
ஓயாத இயற்கை சீற்றங்கள்: ஜப்பான் நாட்டுக்குள் சிறிது சிறிதாய், 14000-க்கு மேற்பட்ட தீவுகள் அடங்கி உள்ளன. இவற்றில் ஹக்கைடோ, ஹொன்ஷு, ஷிகோகு, கியிஷு மற்றும் ஒக்கினாவா மிக முக்கியமான ஐந்து தீவுகளாகும். இந்தத் தீவுகளின் நிலப் பரப்பில் 15% மட்டுமே விவசாய நிலங்கள்.
70% காடுகள் ஆகும். 30,000 கி.மீ. நீளத்துக்கு கடற்கரை கொண்ட ஜப்பானில் இயற்கை சீற்றங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. நில நடுக்கம், சுனாமிப் பேரலை, எரிமலை வெடிப்புகள் என்று எப்போதும் இயற்கை சீற்றத்தை எதிர்கொள்ளத் தயார் நிலையில் உள்ளது இந்த நாடு.
கோடையில் அதிக வெப்பமும் பனிக் காலத்தில் அதிக குளிரும் காணப்படும். ஏறத்தாழ நம்மைப் போலவே ஏப்ரல், மே, ஜூன் கோடை மாதங்கள். சில பகுதிகளில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களிலும் கோடைநிலவுகிறது. வனப்பகுதிகள் மிகுந்து உள்ளதால், பல்லுயிரி சூழல் நன்கு அமைந்து உள்ளது. அரிய வகை உயிரினங்கள், தேசியப் பூங்காக்கள் அதிகம் இருக்கின்றன. யுனெஸ்கோ பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் நான்கு உள்ளன.
சுற்றுசூழல் பிரச்சினைகளைத் தீர்க்கும்பொருட்டு ஜப்பான் நாட்டில் 50 ஆண்டுகளுக்கு முன்பே சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. புவியியல் விட்டு கொஞ்சம் வெளியே போகலாமா..?
போர் கூடாது: ஒரு வகையில் இது புவியியல், சுற்றுச்சூழல், இயற்கை வளம், பொருளாதாரம், அரசியல் உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கியது. இதனை முன் நிறுத்தும் ஜப்பான் நாட்டின் அரசமைப்பு சட்டம் மிக மிக சிறப்பான ஒன்று.
மிகக் குறைவாக 5000 சொற்களில் அமைந்துள்ள ஜப்பான் அரசமைப்பு சட்டத்தின் 9-வது பிரிவு உலகில் வேறு எந்த நாடும் சொல்லாத ஒன்றைச் சொல்கிறது. சர்வதேச அமைதியை முன்னெடுக்கும் வகையில், எப்போதும் எந்தக் காரணத்துக்காகவும் யாரோடும் ஜப்பான் போரில் ஈடுபடாது.
ஆமாம். போர் கூடாது என்று எத்தனையோ பேர் எவ்வளவோ பேசி இருக்கிறார்கள். ஆனால், அதனை ஒரு சட்டமாக தனது சாசனத்தில் பதிவு செய்துள்ள ஒரே நாடு ஜப்பான். மனமார வாழ்த்துவோம் நீடு வாழ்க ஜப்பான்!
இந்த வாரக் கேள்வி: இயற்கை சீற்றங்களை ஜப்பான் எவ்வாறு எதிர்கொள்கிறது?
(பயணிப்போம்)
- கட்டுரையாளர், கல்வி, வேலைவாய்ப்பு போட்டித்தேர்வுக்கான வழிகாட்டி. தொடர்புக்கு: bbhaaskaran@gmail.com