வாழ்ந்து பார் - 40: சிக்கல் ஒரு வாய்ப்பு!

வாழ்ந்து பார் - 40: சிக்கல் ஒரு வாய்ப்பு!
Updated on
2 min read

சிக்கலைத் தீர்க்கும் வழிமுறைகளைக் கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்த மதி, சிக்கலே வராமல் இருக்க ஏதேனும் வழியிருக்கிறதா? என்றாள். வாழ்வில் சிக்கல் எழுவது இயல்பு. அதனைக் கண்டு அஞ்சுவதைவிட, சிந்தித்துச் செயலாற்றினால் அதனைத் தீர்க்க முடியும். அதனை எவ்வாறு செய்வது என்பதைத்தான் இதுவரை கலந்துரையாடினோம் என்றார் எழில்.

சிக்கலை இன்னொரு கோணத்தில் நோக்கினால் நமது திறன்களையும் செயல்திறமைகளையும் வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பு ஆகும் என்றார் புன்னகையோடு. ஒரு சிக்கலுக்குத் தீர்வு காணும்பொழுது உறவுகளுக்கு இடையே முரண்பாடு எழாதா? என்று வினவினான் அழகன். அதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்றார் எழில். அவற்றை எப்படிக் கையாள்வது? என்று வினவினான் அருளினியன்.

‘நீயா உடைத்தாய்?’ - பொன்னியும் முல்லையும் வீட்டிற்குள் பந்தைவீசி விளையாடினார். பொன்னி வீசிய பந்து சுவரிலிருந்த கடிகாரத்தின் மீது பட்டது. கடிகாரம் கீழே விழுந்து உடைந்தது. அந்த ஓசைகேட்டு, மற்றோர் அறையிலிருந்து அங்கு வந்த அவர்தம் அம்மா, நீயா உடைத்தாய்? என்று இளையவளான முல்லையைக் கேட்டார். அவள் விழித்தாள். அவள்இல்லை. நான்தான் உடைத்தேன். இனிமேல் வீட்டிற்குள் பந்து விளையாட மாட்டேன்என்றாள் பொன்னி என்றார் எழில். இதில் பொன்னி என்ன செய்தாள்? என்று வினவினார்.

குற்றத்தை ஒப்புக்கொண்டாள் என்றாள் பாத்திமா. தானே சிக்கலுக்குக் காரணம் என்றாள் என்றும் கூறலாம் என்றான் அருளினியன். அருமை! ஒரு சிக்கல் தோன்றியதும் முதலில் அதற்குக் காரணம் ‘நானா?’ என ஆராய வேண்டும். ஆம் என்றால் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றார் எழில்.

வேறொருவர் காரணம் என்றால்? என்று வினவினாள் மணிமேகலை. சிக்கல் ஏன் தோன்றியது என அவரோடு இணைந்து ஆராய வேண்டும் என்றார் எழில். அதாவது, ‘இச்சிக்கலுக்கு நீதான் காரணம்’ என நேரடியாகக் குற்றஞ்சுமத்தாமல், அவர்தான் காரணம் என்பதை அவரை உணர்ச் செய்ய வேண்டுமா? என்று வினவினான் முகில். ஆம் என்றார் எழில்.

காது கொடுத்து கேள்: சிக்கலுக்கானத் தீர்வில் கருத்துவேறுபாடு ஏற்பட்டால்….என்று வினவினாள் கயல்விழி. அவற்றைக் கையாளப் பழக வேண்டும் என்றான் சுடர். எப்படி? என்று அவனிடம் வினவினாள் தங்கம். தெரியவில்லை என்றான் அவன். அனைவரும் சிரித்தனர்.

நமது நிலைப்பாட்டை நியாயப்படுத்தத் துடிக்கக் கூடாது. மாற்றுக் கருத்தைக் கவனமாகக் கேட்க வேண்டும் என்றாள் இளவேனில். அவ்வாறு கேட்கும்பொழுது குறுக்கிட்டுப் பேசவோ, ஏளனமாகச் சிரிக்கவோ கூடாது என்றான் சாமுவேல். அதாவது உங்களது உணர்வுகளையும் எண்ணங்களையும் மதிக்கிறேன் என நமது செயலால் உணர்த்த வேண்டும் என்றாள் மதி. அக்கருத்து பொருளுடையதாகவும் பொருத்தமானதாகவும் இருந்தால் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றான் தேவநேயன்.

ஒருவேளை அக்கருத்து பொருளற்றதாகவும் பொறுத்தமற்றதாகவும் இருந்தால்….? என்று வினவினாள் மதி. அக்கருத்திலுள்ள போதாமையைத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். அதேவேளையில் அவரைச் குற்றம் சொல்லக்கூடாது என்றார் எழில். அதாவது கருத்தையும் ஆளையும் பிரித்துப்பார்க்க வேண்டும் என்றாள் அருட்செல்வி. அவளை நோக்கிக் கட்டைவிரலை உயர்த்திக் காட்டிய எழில். எதிர்காலத்தில் நிகழ வேண்டியனவற்றையே பேச வேண்டும். கடந்தகாலத்தில் நிகழ்ந்தவற்றைப் பேசக்கூடாது என்றார்.

சிக்கலைத் தீர்க்க ஏன் இவ்வளவு மெனக்கெட வேண்டும் என்று வினவினாள் அருட்செல்வி. மன அழுத்தத்திற்கும் உணர்வெழுச்சிக்கும் ஈடுகொடுக்க என்றார் எழில்.

(தொடரும்)

- கட்டுரையாளர்: வாழ்க்கைத் திறன் கல்வித் திட்ட வடிவமைப்பாளர் மற்றும் பயிற்றுநர்; தொடர்புக்கு: ariaravelan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in