

மலையடிவாரத்தில் அமைக்கப்பட்டிருந்த ஓலைக் குடிசையின் வெளியே கட்டிலில் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த குணபாலனுக்குத்தான் கண்டகாட்சி ஆச்சரியமாக இருந்தது. மலையடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு மான்குட்டியை மேலே இருந்து பறந்து வந்த கழுகு ஒன்று திடீரெனத் தூக்கிச் சென்றது.
அது பறந்து சென்று மறையும்வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவன் ஆச்சரியம் விலகாமல் பார்த்துக் கொண்டிருந்தான். குணபாலன் அப்படி மெய்மறந்து பார்ப்பதை அங்கிருந்த பெரியவர் பார்த்துவிட்டார். அவர் குணபாலனிடம் வந்து, என்னதம்பி, அப்படிப் பார்க்கிறாய்? இது உனக்குப் புதிதாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறதா? என்றார். குணபாலனும், ஆமாம் ஐயா, இதுபோன்ற ஒரு காட்சியை இதற்கு முன்பு என் வாழ்வில் நான் பார்த்ததே இல்லை. என்னால் இப்போது கண்ட காட்சியை நம்பவே முடியவில்லை என்றான்.
அதற்கு அந்தப் பெரியவர், ‘இதெல்லாம் இங்கு நாங்கள் சர்வசாதாரணமாகப் பார்க்கக் கூடிய காட்சிதான். இந்த மலைகளையும் வனத்தையும் நம்பி எத்தனையோ உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றில்ஒரு ஜீவராசிதான் இந்தக் கழுகுகளின்கூட்டம். இவை உயர்ந்த மரங்களிலும்மனிதர்களுக்கு எட்டாத மலைச்சிகரங்களிலும் தங்கள் கூட்டை அமைத்துப் பரவலாக வசித்து வருகின்றன. அந்தக் கழுகுகளின் பெயரால்தான் இந்த மலைக்கு கழுகுமலை என்ற பெயரே வந்தது என்றார்.
மேலும் தொடர்ந்த அவர், இந்தக் கழுகுகள் உலகிலேயே மிகவும் பெரியவை மற்றும் வலிமையானவை. தன்னைவிட நான்கு மடங்கு எடை மிகுந்த மிருகங்களை எளிதில் தாக்கித் தூக்கிச் செல்லும் வல்லமை படைத்தவை. அவை தூக்கிச் செல்லும் விலங்குகளை உயரத்துக்குக் கொண்டுபோய் மேலிருந்து கீழே போடும். அப்படிப் போடுவதால் அந்த விலங்கும் கீழே விழுந்த வேகத்தில் அடிபட்டு, இறந்து போகும். அதன்பின் அந்த விலங்கை கூட்டமாகச் சேர்ந்து, உண்டு வாழக் கூடியவைதான் இந்தக் கழுகுகள் என்றார்.
குணபாலன் அவர் சொல்வதை ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டான். அதே நாளன்று கழுகுமலையின் மறுபுறத்தின் அடிவாரத்தில் மக்கள்புரட்சிப் படை விடுத்த சவாலை ஏற்று திருச்சேந்தி சிலவீரர்களுடன் அந்தக் கூட்டத்தின் தலைவனைச் சந்திக்க வந்து கொண்டிருந்தார். தன்னுடன் வந்த வீரர்களைக் குறிப்பிட்ட தூரத்திலேயே நிறுத்திவிட்டுத் தான் மட்டும் தனது குதிரையின் மீது அமர்ந்து ஓர் இடத்திற்கு வந்து சேர்ந்தார். அங்குஒரு பெரிய ஐயனார் சிலை இருந்தது. அந்தச் சிலைக்கு இரு புறமும் வரிசையாகக் குதிரை சிலைகளும் அமைக்கப்பட்டிருந்தன.
அப்போது திருச்செந்திக்கு இணையான ஆடை ஆபரணங்களைத் தரித்த அந்தக் கூட்டத்தின் தலைவனும் ஒரு குதிரை சிலைக்குப் பின்னாலிருந்து வெளியே வந்தான். ஆனால், அவன் தனது முகத்தைமட்டும் மறைத்து, முகமூடி அணிந்திருந்தான். அதனைக் கண்ட திருச்செந்தி பலமாகச் சிரித்தார்.
அதைப் பார்த்த அந்த முகமூடி ஆசாமி,ஏன் சிரிக்கிறீர்கள்? என்றான். அதற்குப்பதிலளித்த திருச்சேந்தி, நீ சொன்ன மாதிரிஇதோ நான் தனியாக வந்துவிட்டேன். நான் வீரன். ஆனால் நீயோ கோழை மாதிரி. இல்லை, இல்லை…கோழையேதான். இல்லா விட்டால், இப்படி உனது முகத்தை மறைத்து என்முன் தோன்றி இருப்பாயா? என்று கேட்டார்.
அவர் சொன்னதைக் கேட்ட முகமூடி அணிந்த ஆள், எனது முகத்தை உனக்குக் காட்ட வேண்டிய அவசியம் தற்போது இல்லை. ஆனால், எனக்கு இப்போது இந்த முகமூடி அவசியமாக இருக்கிறது. என்னுடன் நீ இப்போது மோதிப்பார். ஒருவேளை, சண்டையின் முடிவில் நான் தோற்றால், எனது முகமூடி உன்னாலேயே விலக்கப்படலாம். அப்போது எனது முகமும் உனக்குப் பரிச்சயமாகலாம். சரிதானே? என்றான்.
மேலும், நான் பேச்சை விட செயலில்அதிக நாட்டம் கொண்டவன். நேரத்தையும் சிக்கனமாகவே செலவு செய்வேன். வெட்டியாகப் பொழுதைக் கழிப்பதை விட, எனது எதிரிகளை வீழ்த்தி பொழுதைக் கழிப்பதே எனது வழக்கம். அதனால் இப்போது பேச நேரம் இல்லை. சண்டைக்கு வா என்றவாறு முகமூடி அணிந்தவன் வலதுகையில் வைத்திருந்த வாளை உயர்த்தியவாறு முன்னேறிவந்தான்.
அதைக் கண்டதும் திருச்செந்திக்கு மீசை துடித்தது. உடனடியாக அவர் தனது குதிரையை விட்டுக் கீழே குதித்தார். தனது வலது பக்கம் அணிந்திருந்த உறையில் இருந்த வாளைத் தனது இடதுகையால் வெளியே எடுத்து உயர்த்திப் பிடித்தார். முகமூடி அணிந்தவனும் இரண்டு அடிகள் முன்னால் எடுத்து வைத்தான். உடனே இருவரது வாள்களும் ஒன்றுடன் ஒன்று பலமாக மோதிக் கொண்டன. அதனால் ‘க்ளங்..., க்ளங்...’ என்ற சத்தம் பலமாகக் கேட்டது.
(தொடரும்)