

எந்த ஆண்டு எந்த மாதம் எந்தத் தேதி எத்தனை மணிக்கு நீங்கள் குழந்தைப் பருவத்திலிருந்து சிறுவனாக, சிறுமியாக மாறினீர்கள்? இளைஞரானீர்கள்? இந்தக் கேள்வியை நீங்கள் எப்போது பொறுப்புள்ளவரானீர்கள், அறிவாளியானீர்கள், கடமையுள்ளவ ரானீர்கள், நேர்மையானவரானீர்கள்... என்று விரிக்கலாம்.
இந்தக் கேள்வியைப் படிக்கும்போது என்ன முட்டாள்தனமான கேள்விகள் எனதோன்றுகிறதல்லவா? ஏன் அப்படித் தோன்றுகிறது? காரணம், குழந்தைப் பருவத்திலிருந்து இளமைப்பருவத்திற்கு மாறுவது என்பது நாள் பார்த்து, கிழமை பார்த்து நேரம் பார்த்து நடப்பதல்ல. எவ்வளது வயது மூப்படைந்தாலும் அவர்களுக்குள்ளே குழந்தைமை இருக்கிறது. சில நேரம் அக்குழந்தைமை வெளிப்படவும் செய்கிறது.
அதுபோல சிறிய குழந்தையானாலும் பல நேரங்களில் பெரியவர்கள் போல் நடந்துகொள்வதை, பேசுவதைக் காணலாம். அப்போது, அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் அந்தச் சூழலில் அக்குழந்தையிடம் இருக்கும் பெரியமனுஷத்தன்மை வெளிப்படலாம்.
கல்வியில் இதே கேள்வி: நீங்கள் எந்த ஆண்டு, எந்த மாதம், எந்தத் தேதி, எத்தனை மணிக்கு பெருக்கல் தெரிந்துகொண்டீர்கள்? வாசிக்கக் கற்றுக்கொண்டீர்கள், அறிவியல் தெரிந்துகொண்டீர்கள், இந்திய வரலாற்றை அறிந்துகொண்டீர்கள், எழுத்தாளரானீர்கள்... என்று விரிக்கலாம் அல்லவா?
இப்போது மேற்குறிப்பிட்ட ஏதேனும் ஒரு கருத்தை எடுத்துக்கொள்வோம்...நீங்கள் எப்போது வாசகரானீர்கள் என்று கேட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்? நாம் வாசித்துக் கொண்டே இருக்கிறோம். குறிப்பிட்ட வகைப் புத்தகங்களைத் தவிர்த்து பிற புத்தகங்களை நாம் வாசித்திருக்க மாட்டோம்.
அதுமட்டுமல்ல வாசித்த கருத்துக்களை எப்படிப் புரிந்துகொள்கிறோம் என்று நமக்கே தெரியாது. நூலாசிரியர் எதை நினைத்து அந்தப் பழமொழியைப் பயன்படுத்தினார். தெரியாது. அப்படியா னால் இது தொடர்ந்துகொண்டே இருக்குஅல்லவா. அந்தக் கதாபாத்திரம் நம்மிடம்எதைச் சொல்ல வருகிறது என்று தேடத்தொடங்கினால் நாம் சரியாக வாசிக்கவில்லையென்று புரியும். ஆழமான ஆய்வுக் கட்டுரைகளை நாம் தொட்டிருக்கவே மாட்டோம். இப்போது நம்மை வாசகர் என்று சொல்ல முடியுமா?
பள்ளியில் இக்கருத்தை நாம் ஏற்றுக்கொண்டால் நம் பள்ளியில் நடக்கும் பல செயல்களை மறுபரிசீலனை செய்தேயாக வேண்டும். ஒரு கருத்தைச் சொல்லிக் கொடுத்து, அதை பலதடவை எழுத வைத்து அதே கேள்வியைத் தேர்வுக்கு கேட்டு மதிப்பெண்ணளித்து அக்கருத்தை நான் புரிந்து கொண்டுவிட்டேன் என்ற தவறான எண்ணத்தைப் பெரியவர்களாகிய நாம் குழந்தைக்கு ஊட்டிவிடுகிறோம்.
ஐந்தாம் வகுப்பு ஆண்டுத்தேர்வில் மூன்றாவது கேள்விக்கு விடையெழுதியபோது மூலக்கூறுகள் என்றால் என்னவென்று தெரிந்து கொண்டேன் என்று குழந்தை நம்புகிறது. உயர் வகுப்புக்கு வந்தபிறகு யாராவது தாவர செல்லில் மூலக்கூறு உண்டா என்றோ, அணுவும் மூலக்கூறும் ஒன்று தானா என்றோ கேட்டால்... அவ்வளவுதான் நம் குழந்தை குழம்பிப் போகலாம்.
புரிதல் என்பது உண்மையில் என்ன? - ஆம்... இது ஒரு இடைவிடாத செயல்பாடு. தொடர்ந்து நடக்கும் செயல். வாழ்வின் இறுதிவரை தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும்.
பள்ளிப் படிப்புமுடிந்து கல்லூரிக்குப் போகும்போதுதான் “பள்ளியில் படித்தது இதுதானா?” என்று விளங்கிக் கொள்ள முடிகிறது. பட்டப்படிப்பு படிக்கும்போது தான் “இதைத்தான் அப்படிச் சொன்னார்களா?” என்று நாம் வியப்போம். பட்டப்படிப்பும்முடித்து உண்மையில் வேலைக்குச் செல்லும்போது “ஓ அந்தக் கருத்துதான் இங்கு இப்படி பயன்படுகிறதா” என்று ஒரு கருத்து களத்தில் எப்படி தாக்கம் செலுத்துகிறது என்பது புரியவருகிறது. களத்திலிருந்து நேரடி அனுபவம் பெற்ற பிறகும் சிலர் “இப்போது தான் அந்தக் கருத்து எனக்குப் புரியத் தொடங்கியுள்ளது” என்று சொல்லக் கேட்கலாம்.
ஒரு பாடத்தை வாசிப்பதால், ஒரு செயல்பாட்டில் ஈடுபடுவதால் புரிதல் ஏற்படுவதில்லை என்பதைப் புரிந்துகொள்வோம். குழந்தையின் விருப்பம், தேவை ஆகியவைக்கேற்ப புரிதலின் வேகம் கூடவும் குறையவும் செய்யும். எனவே கொஞ்சம் பொறு மையோடு காத்திருப்போம்.
- கட்டுரையாளர்: மூத்த கல்வியாளர், கல்வி இயக்குநர், ‘Qrius Learning Initiatives’, கோவை; தொடர்புக்கு: rajendran@qrius.in