

பருவ நிலைக்கு ஏற்றார்போல நம் முன்னோர்கள் பயிர் செய்து வந்தனர். சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் கோடை வெயில் அதிகமாக இருக்கும். அதிகத் தண்ணீர் இன்றி வளரும் கம்பு, கேழ்வரகு, சிறுதானிய பயிர்களை விதைத்தனர். கேழ்வரகு ஆண்டுக்கொரு முறை விளையும் தானிய பயிர் ஆகும். இது ஒரு பூக்கும் தாவரம். இதன் வேறு பெயர்கள் ஆரியம், ராகி, கேப்பை.
எத்தியோப்பியாவின் உயர்ந்த மலைப்பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட இப்பயிர் ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது என்கின்றனர். ”வட கர்நாடகாவில், துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்துள்ள ஹல்லூர் என்ற இடத்தில் கி.மு. 2300-ஐ சேர்ந்த பழமையான கேழ்வரகு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மிகப் பழமையான கேழ்வரகு: இந்தியாவில் கண்டெடுக்கப்பட்டுள்ள மிகப் பழமையான கேழ்வரகு அதுவே. கர்நாடகப் பகுதிகளில் இருந்துதான், இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு கேழ்வரகு பரவியது. அதனால்தான் இன்று கேழ்வரகு உற்பத்தியில் கர்நாடகம் முன்னணியில் இருக்கிறது. திருப்பத்தூர் தாலுகாவில் உள்ள பையனம்பள்ளி முக்கியமான தொல்லியல் தளம். இங்கு கி.மு.1390-ஐ சேர்ந்த கேழ்வரகு கண்டெடுக்கப்பட்டுள்ளது” தமிழகமும் கர்நாடகமும் கேழ்வரகு உற்பத்தில் இந்தியாவில் முன்னணியில் உள்ளன. ( உணவு சரித்தரம் நூலில் முகில்)
எருது கால் உறாஅது, இளைஞர் கொன்ற
சில் விளை வரகின்..
(புறநானூறு)
சிறு நிலம்தான். எருது கொண்டு உழ அவசியமின்றி, அந்த வீரன் வெறும் காலாலே உழுது கேழ்வரகு விதைக்கிறான் என்பது இதன் பொருள்.
காடுகளில் திரியும் பசுவிலிருந்து கறக்கப்பட்ட சுத்தமான பாலை மண்பானையில் ஊற்றி, சந்தனம் அல்லது அகில் கட்டையால் நெருப்பு மூட்டி, அதில் கரும்பின் இனிப்பு சேர்த்து கிண்டி, அது கொதித்து வரும்போது, அறுவடை செய்த கேழ்வரகை வைத்துச் சமைத்து காட்டு வாழை இலையில் இட்டு உண்டார்கள் என புறநானூறு கூறுகிறது.
மாற்று உணவு: அரிசிக்கு மாற்று உணவு எது என்று கேட்டால், யோசிக்காமல் கேழ்வரகு என்று சொல்லி விடலாம். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் இதுவே மாற்று உணவு. மற்ற தானியங்களைவிட கேழ்வரகில் இருக்கும் சத்து மிக மிக அதிகம்.
பாலை விட கேழ்வரகில் மூன்று மடங்கு கால்சியம் சத்து அதிகம் உள்ளது. அரிசியை விட பத்து மடங்கு கால்சியம் அதிகம். உடல் எடையைக் குறைக்க முடியும். தோல், நகம், முடியின் அழகைப் பாதுகாக்க உதவுகிறது. கேழ்வரகு நம் உடலில் உள்ள சேதமடைந்த திசுக்களைச் சரியாக்கும் தன்மை கொண்டது.
குடலுக்கு வலிமை கொடுக்கும். ரத்தத்திலுள்ள கொழுப்பையும், கொழுப்பு அமிலங்களை யும் கரைத்து, கெட்ட கொழுப்பை நல்லக் கொழுப்பாக மாற்றும் அற்புதமான ஆற்றல் கேழ்வரகுக்கு உண்டு. ரத்தசோகையைத் தடுக்கும். குழந்தைகளுக்குக் கேழ்வரகு மாவில் கஞ்சி செய்து கொடுக்கிறார்கள். இதுகுழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைக் கொடுக் கிறது.
தித்திப்பால்: கேழ்வரகை ஊறவைத்து, பால் எடுத்து, அதில் பனைவெல்லம் சேர்த்து கஞ்சி காய்ச்சி, அதில் கொஞ்சம் நெய்யோ, தேங்காய் எண்ணெயோ சோ்த்தால் அது கேழ்வரகுத் தித்திப்பால். குழந்தைகளுக்குத் தாய்ப்பால் பற்றாமல் போகும்போது ஏழாம் மாதத்தில் இருந்து கொடுப்பது பழக்கம்
- கட்டுரையாளர்: முதுகலைத் தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, வெலக்கல் நத்தம், திருப்பத்தூர் மாவட்டம்; தொடர்புக்கு: devavino86@gmail.com