

தனது நகத்தில் அவ்வப்போது வெள்ளைப் புள்ளிகள் காணப்படுகிறது. இது எதுவும் குறைபாட்டின் அறிகுறியா என்ற சந்தேகத்தை அகல்யா எழுப்பி இருந்தார். அவருக்கான பதில் இதோ:
அகத்தின் அழகை நமது முகம் பிரதிபலிக்கும் என்பது போலவே, நகமும் பிரதிபலிக்கும் என்பது உண்மைதான். நகங்களின் தன்மையை வைத்தே நமது ஆரோக்கிய அறிகுறிகளை கணிக்க முடியும். எப்படியென்றால், பொதுவாக ஆரோக்கியமாக இருப்பவர்களின் நகங்கள் எப்போது பளபளப்பாகவும், இளஞ்சிவப்பாகவும், சற்றுகுவிந்தும் காணப்படும்.
அடிக்கடி நகங்கள் உடைந்தால் (brittle nails)அது நீர்த்தன்மையற்று இருப்பதாலும், சமயங்களில் வைட்டமின்கள் பி,சி,டி மற்றும் அத்தியாவசிய தாதுப்பொருட்களின் (அயோடின், ஜின்க்) குறைபாடுகளை அது குறிக்கலாம்.
நோய்களை பிரதிபலிக்கும் நகம்: ஸ்பூன் போல குவிந்த, வெளுத்த நகங்கள்(koilonychia) ரத்த சோகையின் முக்கிய அறிகுறி. இது இரும்புச்சத்து குறைபாட்டைக் குறிக்கும். அதேபோல இதய நோய், நுரையீரல் நோய் உள்ளவர்களின் நகங்கள் அதிகம் குவிந்து, சற்றே நீல நிறத்தில் காணப்படும்.
இதனை ‘clubbing' என அழைக்கும் மருத்துவர்கள், உள்ளேயிருக்கும் நோயின் முக்கிய அறிகுறியாகவே இதைக் காண்கிறார்கள். மேலும் சர்க்கரை நோய், சிறுநீரக நோய், கல்லீரல் நோய், மூட்டு நோய் என ஒவ்வொரு நோயையும் நகங்கள் பிரதிபலிப்பதால்தான் மருத்துவர்கள் உங்களைப் பரிசோதிக்கும்போது விரல்களையும் திருப்பிப் பார்க்கிறார்கள்.
மேலும், பூஞ்சைத்தொற்று, சொரியாசிஸ் போன்றவற்றில் நகங்கள் சிதைந்து, நிறமிழந்து சொரசொரப்பாகவும் உணரப்படும். ஆனால், உனது வெண்புள்ளிகள் அப்படியல்ல. நகங்களுக்கு வெளிப்புறத்தில் ஏற்பட்டிருக்கும் சிறு காயங்கள்தான் இந்த வெள்ளைப் புள்ளிகளே தவிர, இவை வேறு நோய்களைக் குறிப்பதில்லை.
அகல்யா: மிக்க நன்றி டாக்டர். எனது தோழி எப்போதும் நகம் கடித்துக் கொண்டே இருக்கிறாள். என்ன செய்வது?
பதில்: பொதுவாக சிலர் நகம் கடிப்பது பொழுதுபோக்குப்போலத் தெரிந்தாலும் அது நமது மன அழுத்தத்தின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். Onychophagia என்றுகுறிப்பிடப்படும் இந்த நிலை நகங்களின் அழகைக் குறைப்பது மட்டுமன்றி, நகங்கள் மூலமாக வயிற்றுக்குள் கிருமிகளையும் அழுக்கையும் கொண்டு சேர்த்து, பல்வேறு நோய்களை ஏற்படுத்துகிறது என்பதை உனது தோழிக்குப் புரியும்படி சொல் அகல்யா. நினைத்தால் எளிதில் விட்டுவிடக்கூடிய ஒன்றுதான் நகம் கடிப்பது.
(தொடரும்)
- கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்; தொடர்புக்கு: savidhasasi@gmail.com