

ஸ்ட்ராட்போர்ட் நகரின் சந்தை வீதியில் ஆட்டுக்குட்டியில் இருந்து ரிப்பன் துணி வரை எல்லாம் கிடைக்கும். வில்லியமின் தந்தை ஜான் ஷேக்ஸ்பியரும் அதே சந்தையில் கையுறை, பெல்ட் வியாபாரம் செய்து வந்தார். தந்தையை ஏமாற்றிவிட்டு ஸ்ட்ராட்போர்ட்டில் ஊர் சுற்றுவதென்றால் சிறுவன் வில்லியமிற்கு கைவந்த கலை.
மக்கள் கூட்டம் நிறைந்த அந்நகரில் தெருக்கூத்துகளும் நாட்டார் பாடல்களும் எந்நேரமும் ஒலித்துக் கொண்டிருக்கும். வில்லியம் அவற்றை இமைக் கொட்டாமல் பார்ப்பான். நாடகங்கள் என்றால் அவனுக்கு கொள்ளைப் பிரியம்.
தீராத விளையாட்டுப் பிள்ளை: ஜான் அந்நகரின் மேயர் பதவியில் இருந்ததால், அரசு பணத்தில் நடிகர்களை அழைத்து வந்து நாடகம் போடுவார். ஒவ்வொரு நாடகத்திற்கும் தன் மகனை அழைத்துச் சென்று கதைக்களத்தை விவரிப்பார். அந்தவகையில் இங்கிலாந்து அரசி முதலாம் எலிசபெத்தோடு ஒருசில நாடகங்களை வில்லியம் பார்த்திருக்கிறான்.
நாடக அரங்கின் ஒவ்வொரு அங்கத்தையும் அவன் நோட்டமிடுவான். மேடையில் எங்கெல்லாம் ஆணி அடித்திருக்கிறார்கள், எந்தெந்தக் காட்சியில் என்னென்ன வண்ணங்கள் பயன்படுத்துகிறார்கள், உச்சரிப்புக்கு ஏற்ப எங்கனம் உடலை அசைக்க வேண்டும் என்று எல்லாம் அவனுக்குத் தெரியும்.
ஸ்ட்ராட்போர்ட்டில் நாடகம் முடிந்துவிட்டால், அருகிலுள்ள காவன்ட்ரி நகரத்திற்கு நடந்தே சென்று பைபிள் கதையொட்டிய நாடகங்களைப் பார்த்து வருவான். வீட்டின்மூத்தப் பிள்ளை என்பதால் பெற்றோருக்கு சமர்த்து. ஆனால், இது வெகுகாலம் நீடிக்கவில்லை. இங்கிலாந்தின் ஸ்டார்ட்போர்ட் நகரில் பஞ்சம் தாண்டவமாடியது. பிளேக் எனும் கொள்ளை நோய் ஆண்டுக்கணக்காக மக்களைப் பாடாய்ப் படுத்தியது.
திருப்புமுனை காட்சி: வில்லியமின் குடும்பம் நொடித்துப்போய், ஒருவேளை சோற்றுக்கும் திண்டாட வேண்டியிருந்தது. பதிமூன்று வயது நிரம்பிய குடும்பத்தின் மூத்தப் பிள்ளை வில்லியம் மீது குடும்ப பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஆரம்பக்கல்வி மட்டுமே பயின்ற வில்லியம் ஆசிரியராகப் பணிபுரிந்தானா, வக்கீல் வேலை செய்தானா என்றெல்லாம் வரலாற்றில் பதிவாகவில்லை.
ஆனால் அடுத்த ஐந்தாவது ஆண்டில் ஆனி ஹாத்வே எனும் பெண்மணியை திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்க்கைக்குள் நுழைந்தான். மூன்று குழந்தைகளைப் பெற்றதும், வறுமை மேலும் வாட்டியது. திடீரென ஒரு நாள் ஸ்ட்ராட்போர்ட்டில் இருந்து வில்லியம் காணாமல் போனான்.அதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுவதுண்டு.
பஞ்சப்பாட்டு தாங்க முடியாமல், பக்கத்து தோட்டத்திலிருந்து முயல்களை திருடியதால் தோட்டக்காரனுக்குப் பயந்து காணாமல் போனார் என ஒருசிலர் சொல்வார்கள். தங்கள் ஊருக்கு நடிக்க வந்த நாடகக் குழுவில் முக்கிய வேடதாரி ஒருவர் இறந்துபோனதால், வில்லியம் அதில் சேர்ந்துகொண்டான் என்று சிலர் சொல்வார்கள். வில்லியமின் வாழ்க்கையில் இரண்டு கதைக்கும் இடம் இருந்தன.
(வில்லியம் கதை தொடரும்)
- கட்டுரையாளர்: இயற்பெயர் சதீஸ்குமார். மொழிபெயர்ப்பாளர், ஆய்வு மாணவர், பாரதியார் பல்கலைக்கழகம்; தொடர்புக்கு: iskrathewriter@gmail.com