

நகைச்சுவை நடிகர் வடிவேலு ஒரு படத்தில் ‘ரிஸ்க் எடுக்குறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி' என வசனம் பேசுவார். அந்த வசனத்தை நம்மில் பலரும் அவ்வப்போது பேசுகிறோம். ஆனால், இன்ஷூரன்ஸ் எடுத்தவர்கள் மட்டுமே அந்த வசனத்தை பேச வேண்டும்.
ஏனென்றால் ஒரு நல்ல இன்ஷூரன்ஸ் எடுத்தவர்கள், வாழ்க்கையில் எந்த ரிஸ்கை வேண்டுமானாலும் எடுக்கலாம். அவர்களுக்கு ஏதேனும் நிகழ்ந்தாலும், அவர்களது குடும்பத்தை இன்ஷூரன்ஸ் நிறுவனம் காப்பாற்றிவிடும். நம்முடைய வாழ்க்கையில் அடுத்த கணம் என்ன நடக்கும் என யாருக்கும் தெரியாது.
வாழ்க்கை நிச்சயமற்றதாகிவிட்டது. குடும்பத்துக்காக உழைக்கும் நபர் திடீரென இறந்துவிட்டால் அந்த குடும்பம் என்ன ஆகும்? அவரது குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆகும்? மனைவி, தாய், உடன்பிறந்தோர் என்ன ஆவார்கள்? இந்த மாதிரியான சூழலில் குடும்பத்தை காக்க உதவுவது ஆயுள் காப்பீடு.
இந்த இன்ஷூரன்ஸ் திட்டம் என்பது பாதுகாப்புத் திட்டம் ஆகும். ஒருவரின் இறப்பிற்குப் பிறகு அவரின் குடும்பம் எவ்வித பொருளாதாரச் சிக்கல்கள் இல்லாமல் வாழ காப்பீடு அவசியம். தன் குடும்பத்தினருக்காக உழைக்கும் அந்த நபர் இந்த காப்பீட்டை எடுப்பதன் மூலம், குடும்பத்துக்கே ஒரு நல்ல பாதுகாப்பை உருவாக்கி வைக்கிறார் எனலாம்.
ரூ.1 கோடிவரை காப்பீடு: கால காப்பீடு (Term Insurance) என்பது ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு எடுக்கப்படும் காப்பீடு ஆகும். இதில் பாலிசி எடுத்த நபர் முதல் பிரிமீயம் (கட்டுதொகை) குறிப்பிட்ட காலத்திற்குள் இறந்துவிட்டால், அவரது நாமினிக்கு (குடும்ப உறுப்பினர்) பெரிய தொகை வழங்கப்படும். எனவே இந்த காப்பீடு குடும்பத்திற்கான அற்புதமான பாதுகாப்பு திட்டமாக கருதப்படுகிறது. தற்போது சந்தையில் முன்னணியில் இருக்கும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் ஏராளமான டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை வைத்திருக்கின்றன.
சில ஆயிரங்களை செலுத்தி ரூ.1 கோடிவரை காப்பீட்டு தொகை வழங்கும் பாலிசிகள் கூட இருக்கின்றன. இந்த திட்டத்திற்கான பிரிமீயம் தொகையை மாதவாரியாக கணக்கிட்டால் சில நூறு ரூபாய்கள் மட்டுமே வரும். எனவே இந்த காப்பீட்டு திட்டத்தின் விதிகளை முழுமையாக படித்து, யார் வேண்டுமானாலும் இந்த காப்பீட்டை எடுக்கலாம். குடும்பத்தின் ஆணிவேராக இருக்கும் உழைக்கும் நபர்கள் கட்டாயம் இந்த காப்பீட்டை எடுக்க வேண்டும். இதற்கான பிரிமீயம் தொகையை ஆண்டுதோறும் அல்லது மாதந்தோறும் கூட செலுத்தலாம்.
நன்கொடை காப்பீடு: ஆயுள் காப்பீட்டில் நன்கொடை திட்டம் (Endowment insurance) என்பது பாதுகாப்பு மற்றும் முதலீட்டு பயன்களை தரக் கூடியது. இதில் பாலிசிதாரர் செலுத்தும் பிரிமீயம் தொகையானது பாதுகாப்பு மற்றும் முதலீட்டுக்காக பயன்படுத்தப்படும். காப்பீட்டின் இறுதி பிரிமீயம் செலுத்தும் வரை பாலிசிதாரர் உயிருடன் இருந்தால் அவருக்கு மொத்த பணமும் வட்டி மற்றும் போனஸ் உடன் பெரும் தொகையாக திரும்ப வழங்கப்படும். ஒருவேளை, பாலிசிதாரர் இடைப்பட்ட காலத்தில் இறந்துவிட்டால், காப்பீட்டு திட்டத்தில் உறுதி செய்யப்பட்ட தொகை குடும்ப உறுப்பினருக்கு வழங்கப்படும்.
யூலிப் காப்பீடு: இந்த திட்டத்தில் பாலிசிதாரர் செலுத்தும் பிரீமியம் தொகையை காப்பீட்டு நிறுவனம் பங்குச்சந்தை, பரஸ்பர நிதியில் முதலீடு செய்யும். அதில் வரும் பணத்தை அந்த நிறுவனம் பாலிசிதாரரின் பாதுகாப்பு மற்றும் முதலீட்டுக்கு பயன்படுத்தும். என்டோவ்மெண்ட் பாலிசியை போலவே, இந்த திட்டத்திலும் அதே பலன்கள் கிடைக்கும். அடுத்த அத்தியாயத்தில் முழு வாழ்க்கைக்கான காப்பீடு, குழந்தைகள் நலனுக்கான காப்பீடு, பணம் திரும்ப கிடைக்கும் காப்பீடு, ஓய்வு கால காப்பீடு குறித்து அலசுவோம்.
(தொடரும்)
- கட்டுரையாளர் தொடர்புக்கு: vinoth.r@hindutamil.co.in