

ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்
என்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது. (நல்வழி, பாடல் எண்: 11, ஔவையார்)
என்று சத்தமாகச் சொல்லிச் சொல்லி மனனம் செய்து கொண்டிருந்தாள் குழலி. விளையாடி விட்டு வந்த சுடர் என்ன பாட்டு குழலி இது... நாளைக்கு ஏதும் தேர்வு இருக்கா என்ன... என்றவாறு திண்ணையில் அமர்ந்தான்.
குழலி: வா சுடர்... இது ஔவையாரோட நல்வழில வர்ற பாடல். இந்தப் பாடலோட பொருளத் தெரிஞ்சிக்கிட்ட பிறகு மனப்பாடம் செய்யணும்னு தோணிச்சு. அதான்.
சுடர்: பாடலோட பொருளச் சொல்லேன்.
குழலி: இந்த வயிறு இருக்கே, அது எப்படிப்பட்டதுன்னு சொல்ற பாட்டு. இந்த வயிறப் பசியில்லாமப் பாத்துக்கத்தான நாமஎல்லாம் ஓடி ஓடி உழைக்கிறோம். உணவுஇல்ல, இன்னைக்குச் சாப்பிட வேண்டாம்னுநினைச்சா இந்த வயிறு சும்மா இருக்குமா... பசி பசின்னு கிள்ளி எடுக்குது. சரி, இப்பத்தான் நிறைய உணவு இருக்கே. ரெண்டு நாளைக்குச் சேர்த்து சாப்பிட்டுக்கலாம்னு பார்த்தா, அதுக்கும் இந்த வயிறு ஒத்துழைக்க மாட்டேங்குது.
போதும் போதும்னு சொல்லுது. அதனால ஔவை வயிறைப் பார்த்துச் சொல்றாங்க, ஒரு நாளும் என்னோட துன்பத்தைப் புரிஞ்சுக்காத வயிறே, உன்னோடு வாழ்றது ரொம்ப ரொம்பக் கடினம்னு... உண்மை தான ஔவை சொல்றது.
சுடர்: ஆமா, குழலி உணவுன்னு சொன்ன உடனே நினைவுக்கு வருது. நம்ம தெரு முனையில இயற்கை உணவங்காடி ஒன்னு திறந்திருக்காங்க பார்த்தியா...
குழலி: நேத்து அம்மா கூட அந்தக் கடைக்குப் போயிருந்தேன். பல வகையான தானியங்கள் அதுவும் இயற்கை உரங்கள் போட்டு விளைய வச்ச தானியங்கள அங்க விற்கிறாங்க. நாம கேள்விப்படாத தானியங்களா இருந்துச்சு. ஒவ்வொரு தானியத்தோட பேரையும் படிச்சு நமக்குத் தெரிஞ்சிருக்கான்னு பார்த்தப்ப, ஒன்னு ரெண்டைத் தவிர வேறெதும் தெரியல.
சுடர்: நமக்குத் தெரிஞ்சது அரிசி, கம்பு, கேழ்வரகு, சோளம் இப்படி ரெண்டு மூணு தான.. வேறென்ன தானியங்கள் அங்க இருந்திச்சு...
குழலி: தினை, வரகு, பனி வரகு, சாமை, குதிரைவாலி, கருப்புக்கவுனி, பூங்கார் அரிசி, காட்டுயானம், குள்ளக்கார், மாப்பிள்ளைச் சம்பா இப்படி நாம கேள்விப்படாத பல தானியங்கள் அங்க இருந்துச்சு.
சுடர்: நாமதான் அரிசியைத் தவிர வேற எதையும் சாப்பிடறதில்லையே. 2023 ஆம் ஆண்டை, சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா. அறிவிச்சிருக்கு தெரியுமா... சிறுதானியஉற்பத்திய அதிகப்படுத்தவும் ஊட்டச்சத்துகள் குறித்த விழிப்புணர்வ ஏற்படுத்தவும்தான் இந்தமுயற்சியாம். குழலி நாம ஐந்திணைகள் அதோட கருப்பொருள்கள் பத்திப் பேசினோமே.
உனக்கு ஐந்திணை மக்களோட உணவுப் பொருட்கள் பத்தியும் தெரிஞ்சிருக்கும் தானே. நீ இப்ப சொன்ன தானியங்கள அந்தக் காலத்து மக்கள் பயன்படுத்தியிருப்பாங்க தான. அதைப் பத்தி ஏதாவது தெரிஞ்சிருந்தா சொல்லேன்.
குழலி: ஒவ்வொரு திணையிலயும் நிலத்துக்கும் தட்பவெப்பத்துக்கும் ஏத்த மாதிரி அவங்க விளைவிச்ச தானியங்கள உணவாச் சாப்பிட்டிருக்காங்க. மற்ற நிலத்தாரோடவும் பகிர்ந்துக்கிட்டிருக்காங்க. பண்டமாற்று போல...
சுடர்: பாரதியார் சொல்வாரே... கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்வோம்னு. நம்மகிட்ட இருக்கிற பொருளைக் கொடுத்து, நம்மகிட்ட இல்லாத பொருளை வாங்குறது...
குழலி: சரியாத்தான் சொல்ற... முல்லை நிலமக்களுக்கு வரகு, சாமை போன்ற தானியங்களும் குறிஞ்சி நில மக்களுக்குத் தினை, மூங்கிலரிசி போன்ற தானியங்களும் மருத நில மக்களுக்குச் செந்நெல், வெண்ணெல் போன்ற தானியங்களும் நெய்தல் நிலத்தவர்களுக்கு உப்புக்கு விலைமாறிய பண்டங்களும், மீனுக்கு விலைமாறிய பண்டங்களும் முக்கிய உணவா இருந்துச்சாம்.
பாலை நில மக்கள் கொள்ளையிட்ட பொருள்களையும், சூறையாடியதில் கிடைத்த உணவுப் பொருட்களையும் சாப்பிட்டாங்களாம். அது மட்டுமில்லாம வேறு நிலத்திலிருந்து அவங்க இடத்துக்கு வந்த மக்களுக்குச் சுவையான உணவைக் கொடுத்து உபசரிச்சாங்களாம்.
சுடர்: சரி குழலி, நாளைக்குப் பேசுவோம். திட்டக்கட்டுரை எழுதணும். கிளம்புறேன்...
- கட்டுரையாளர்: தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர்; தொடர்புக்கு: janagapriya84@gmail.com