

பறந்து விரிந்த மகாராஷ்டிரா மாநிலம் பலவகையான நிலப்பரப்புகளை உள்ளடக்கியது. அந்த நிலப்பரப்புகள் ஒவ்வொன்றும் பல வரலாறுகளைத் தாங்கி நிற்கின்றன. கலாச்சாரம், கலை என ஒவ்வொரு நிலப்பரப்பும் தனக்கென ஒரு அடையாளத்தைக் கொண்டுள்ளன. அந்த வரிசையில் மிக முக்கியமான வரலாற்று அடையாளமான இடத்துக்குச் செல்ல கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கிளம்பினோம்.
அவுரங்காபாத் நகரிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது சரணாந்திரி மலை. இந்த மலையில் உலகபாரம்பரிய சின்னமான எல்லோரா குகைகள்அமைந்திருக்கின்றன.
மழை பெய்துகொண்டிருந்தது, நாம் மட்டும்தான் அங்குரெயின்கோட் சகிதமாக சுற்றப் போகிறோம் என்று நினைத்துக் கொண்டு உள்ளேசென்றோம். இந்த முறையும் எதிர்பார்த்ததற்கு மாறாக, குடைகளைப் பிடித்துக்கொண்டு மழையில் நனைந்து நனையாமல் நூற்றுக்கணக்கானோர் குகையைநோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
மலையை குடைந்தெழுந்த கோயில்: இது ஒரு குடைவரைக் கோயில். இதை எப்படி கட்டி இருப்பார்கள் என யோசித்தாலே வியப்பாக இருக்கிறது. அதைவிட எனக்கு இங்கு பிடித்தது, இந்த குகையிலேயே இந்து, புத்த மதம், சமண மதமென்று மூன்று மதத்துக்கும் வழிபாட்டுத் தலம் ஒரே இடத்தில் இருப்பதுதான். ஒரு காலத்தில் இந்த மூன்று இடத்திலும் ஒரே சமயத்தில் வழிபாட்டு நடத்தப்பட்டிருக்கிறது.
கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்கு இந்த குகைகள் தொடர்ச்சியாக அமைந்து இருக்கிறது. இந்த குகைகளில் முதல் பன்னிரண்டு குடைவரைக் கோயில்கள் புத்த மத வழிபாடு நடக்கும் இடம். அடுத்த பதினேழு குடைவரைக் கோயில்கள் இந்துக் கோயில்கள். இங்குதான் கைலாசநாதர் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. அதற்கடுத்த ஐந்து கோயில்கள் சமணர்களுக்கானது.
கயிலாசநாதர் கோயில் பார்க்கவே அவ்வளவு பிரம்மாண்டமாக இருந்தது. ஒரு மலையைக் குடைந்து கட்டப்பட்டது என்பதை பார்த்தாலே சொல்லிவிட முடியும்.கோயிலுக்கு பின் இருக்கும் மலை மீது ஏறி நின்றால், இந்த கோயிலின் ஒட்டுமொத்த அழகையும் கண்டு ரசிக்கலாம். அனால்,மழை அதிகமாகப் பெய்து கொண்டிருந்ததால், மலை மீது செல்ல அன்று அனுமதி இல்லை. அது கொஞ்சம் கஷ்டமாக இருந்ததாலும், கோயில் கட்டப்பட்டிருக்கும் விதத்தைப் பார்த்து அதை ரசித்துக் கொண்டே இருந்ததில், அதை மறந்துவிட்டோம்.
20 ரூபாய் நோட்டு! - நம்முடைய புதிய இருபது ரூபாய் பணத்தின் பின் பகுதியில் ஒரு சிற்பம் இருக்குமல்லவா, அது இந்த கோயிலில் இருப்பதுதான். கருவறையும் அதற்கு முன் இருக்கும் தூணும் அந்த இருபது ரூபாய் நோட்டில் இடம் பெற்றிருக்கும். அது இங்கு வந்தபிறகுதான் நமக்கு நினைவுக்கே வந்தது. ராவணன் சிலை, பிரம்மாண்டமான சாளரங்கள் என ஒவ்வொன்றும் இந்த கோயிலில் நம்மை ஆச்சரியப்படுத்தியது.
அதுபோலவே புத்த குகை ஒன்றில் 15 அடி உயரமுள்ள புத்தர் சிலை இருந்தது. நிறைய பேர் இந்த புத்த சிலை அருகே தியானம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் தியானத்தைத் தொந்தரவு செய்யாமல் புகைப்படம் கூட எடுக்க முடியாமல் வந்துவிட்டோம். மூன்றாவதாக இருக்கும் சமண குகையில் நிறைய பழைமையான ஓவியங்களைப் பார்க்க முடிந்தது.
எல்லோராவில் இருக்கும் மொத்த குகைகளையும் சுற்றி பார்க்க நிச்சயம் ஒரு நாள் போதாது. மழை இல்லாத ஒரு நாளில் மீண்டும் இங்கு வர வேண்டும். பொறுமையாக ஒவ்வொரு குகையாகப் பார்த்து வரலாற்று நினைவுகளில் மீண்டும் கொஞ்சம் கரைந்து போகவேண்டும்.
அவுரங்காபாத்துக்கு அருகில் இருக்கும் அஜந்தா குகை செல்லும் திட்டமும் மழையால் கைவிடப்பட்டது. அடுத்து மத்தியப்பிரதேசம் வழியாக ராஜஸ்தான் செல்லவேண்டும். இதுதான் தற்போதைய திட்டம். மழையை பொறுத்து கடைசி நேரத்தில் இந்த திட்டமும் மாறும்.
- கட்டுரையாளர்: இதழியலாளர், கீழடி, கண்ணகி கோட்டம் உள்ளிட்ட தமிழ் பண்பாட்டு நிலப்பரப்புகளை ஆவணப்படம் பிடித்தவர், பயணப் பிரியை; தொடர்புக்கு: bharaniilango@gmail.com