

பரதனும் மாயவனும் தென்னந்தோப்பில் விளையாடிக்கொண்டு இருந்தனர். மிகவும்சோர்வாக இருந்ததால் மாயவன் இளநீரைப் பறித்து குடிப்போம் என்றான். தோட்டகாரர்கள் அனுமதி இல்லாமல் இளநீர் பறிக்கக்கூடாது என்று பரதன் சொன்னான். மாயவனோ மரத்தில் விறுவிறுவென்று ஏறி இளநீரை பறித்து போட்டான். தனக்கு தேவையான அளவு குடித்துவிட்டு பரதனுக்கும் கொடுத்தான். திடீரென்று யாரோ தனது கையை பற்றியதை உணர்ந்தான். யாரைக் கேட்டு இளநீர் பறித்தீர்கள் என்னோடு வாருங்கள் என்று பண்ணையாரிடம் அழைத்துச் சென்று ஒப்படைத்தார் காவல்காரர்.
நடந்ததை கேள்வியுற்று மரத்தில் கட்டிபோட்டு அவர்கள் வீட்டிற்கு ஆள் அனுப்பி பெற்றோரை வரச் சொல் என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டார். அந்த சமயம் பார்த்து ஒரு முதியவர் பண்ணையாரைப் பார்த்து உதவிக் கேட்க வந்தார். பிள்ளைகளை பார்த்து இரக்கப்பட்டு கட்டை அவிழ்த்து விட்டு போகச் சொன்னார்.
உள்ளே இருந்து வந்த பண்ணையார் அதிர்ச்சி அடைந்தார். முதியவர் பண்ணையாரிடம் நம்ம சொந்தகார பிள்ளைகள் என்பதால் இளநீரை நான் தான் வெட்டிக் கொள்ளச் சொன்னேன் என்றார். அதைக் கேட்டு பண்ணையார் மிகவும் கோபப்பட்டு இந்த ஊரிலே இருக்கக்கூடாது எங்கேயாவது சென்று பிழைத்து கொள் என்றார். அவரும் தலைகுனிந்து கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். இதைத் தான் வள்ளுவர் நாம் சொல்லும் பொய்யால் பிறருக்கு நன்மை ஏற்படுமானால் அங்கு பொய் சொல்லலாம் என்கிறார்.
அதிகாரம்: வாய்மை
பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின். - குறள்: 292
- கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர்