திறன் 365: சுவரொட்டி தயாரிப்போம், வகுப்பறையின் சுவை கூட்டுவோம்

திறன் 365: சுவரொட்டி தயாரிப்போம், வகுப்பறையின் சுவை கூட்டுவோம்
Updated on
1 min read

வகுப்பறை குழந்தைகளுக்கானது. அப்படியெனில், வகுப்பறை குழந்தைகளுக்குப் பிடித்தமாதிரி இருக்கவேண்டும்தானே! வண்ணம் நிறைந்த வகுப்பறை. படங்கள் நிறைந்த வகுப்பறை. விசாலமான வகுப்பறை. காற்றோட்டமான வகுப்பறை. வேடிக்கைப் பார்க்க வசதியான ஜன்னல்கள் உள்ள வகுப்பறை. இவற்றுடன் சுவர்களின் ஒரு பக்கம் குழந்தைகளின் படைப்புகள் உள்ள வகுப்பறை. குழந்தைகள் வரைந்த ஓவியம், வர்ணம் தீட்டிய காகிதம், விதவிதமான காகித மடிப்புகள், கவிதைகள், கிறுக்கல்கள், இப்படி பல.

பார்த்து ரசிக்கும் கண்கள்: காட்சிப்படுத்தப்பட்டவைகளைப் பார்த்துப் பார்த்து ரசிக்கும் கண்கள். அவை குழந்தைகளுடையவை. தனக்குத்தானே ரசிப்பவை. நண்பர்களுக்கு காட்டி வியப்பவை. கொஞ்சம்கவனித்துப் பாருங்கள். குழந்தைகளுக்கு மட்டுமல்ல. நாமும் ரசித்துமகிழ்வோம். குழந்தைகள் படைப்பாற்றல் நிரம்பியவர்கள். அவர்களின் படைப்பு உலகம் பிரமிக்க வைக்கும்.

குழந்தைகளை எப்போதும் எடைபோட்டுக் கொண்டே இருக்கின்றோம். இந்த வகுப்புக்கு இது, அந்த வகுப்புக்கு அது. விளையாட்டு வகுப்பில்தான் விளையாட வேண் டும். ஓவிய வகுப்பில்தான் ஓவியம் வரைய வேண்டும்.

வகுப்பறையில் உடல் இயக்கச் செயல்களுக்கும், படைப்பாற்றலை வெளிப்பாடுத்தும் செயல்களுக்கும் இடம் அளித்துள்ளோமா? வகுப்பறைஅற்புதமான இடம். தாயின் கருவறைக்கு நிகரான இடம். குழந்தையின் வளர்ச்சியுடன் பாதுகாப்பும் அளிக்கிறது. எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அளிக்கும் இடம்.

வகுப்பறை குழந்தைகளின் படைப்புகள் நிறைந்து காணப்படும் போது தாயின் கருவறைக்கு நிகரானதாகிடும். படைப்பாற்றலை வெளிப்படுத்தி, காட்சிப்படுத்த சுவரொட்டிகள் தயாரிக்க செய்யலாம். பாடக் கருத்துக்களை புரிந்து வைத்துள்ளனரா என்பதற்கும், அந்த கருத்தின் மீதான புரிதலை வலுவூட்டுவதற்கும் உதவும் வகையில் படங்கள், ஓவியங்கள், வரைபடங்கள் போன்ற பல்வேறு வடிவமைப்புக் கூறுகளைப் பயன்படுத்தி, பாடக்கருத்தை வெளி படுத்தும் காட்சி உருவாக்கும் செயல் முறையே சுவரொட்டித் தயாரித்தல் ஆகும்.

சகாக்களின் முழு ஒத்துழைப்பு: குழந்தைகள் சுயமாகவோ, குழுவாகவோ இணைந்து சுவரொட்டிகளைத் தயாரிக்க செய்யலாம். குழந்தைகளே சுவரொட்டிகளை வடிவமைக்கும் போது , படைப்பாற்றல் மிகுதியாக வெளிப்படும். தங்கள் கலைப்படைப்பை முழுமையாக வெளிப்படுத்துவார்கள். ஒருவருக்குஒருவர் கருத்துக்களை பரிமாறிக்கொள்வதால், சகாக்களுடைய முழுஒத்துழைப்பு வழங்குவதுடன், விவாதமும் செய்வார்கள், யோசனையும் வழங்கிக் கொள்வார்கள். இதன் வழியாக கூட்டாக ஒரு சிக்கலை எப்படி தீர்ப்பது என்பதை கற்றுக் கொள்வார்கள்.

சுவரொட்டியை தயாரிக்கும் போதும், ஒவ்வொரு குழந்தையும் தகவல்களை பல வழிகளில் சேகரித்து குழுவிற்கு உதவுவார்கள். இது சுயாதீனமான கற்றலை ஊக்குவிக்கிறது.

ஒவ்வொரு குழுவும் வந்து சுவரொட்டிகளைக் காட்சிப்படுத்தி, கருத்தை வெளிப்படுத்தும் போதுஅவர்களின் பேச்சுத்திறன் வளர்கிறது. அத்துடன் நம்பிக்கையையும் சேர்த்து வளர்க்கிறது.

சுவரொட்டி தயாரித்தல் என்பதுஆக்கப்பூர்வமான விமர்சன சிந்தனைத் திறனை மேம்படுத்துகிறது. காட்சிப்படுத்துதல் மூலம் குழந்தைகளை ஈர்த்து, தகவல் தொடர்பை மேம்படுத்துகிறது. கற்றலை வலுப்படுத்த சுவரொட்டிகள் தயாரித்தல் நம்பிக்கை வழங்குகிறது. இச்செயல்பாட்டால், குழந்தைகளின் நம்பிக் கைக்கு உரிய ஆசிரியராக மாறுங்கள்.

- எழுத்தாளர், தலைமையாசிரியர்,டாக்டர் டி. திருஞானம் தொடக்கப் பள்ளி, மதுரை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in