

திருச்சேந்தியின் வீரர்களிடம் இருந்து தப்பிக்க குணபாலன் பள்ளத்தாக்கில் விழுந்த போது அதைப் பார்த்த அதே உருவம் இப்போது கையில் தீப்பந்தத்துடன் அவன் வீழ்ந்த இடத்தைக் குறிவைத்துச் சென்றுகொண்டிருந்தது. அந்த உருவத்தின் பின்னால் ஒரு நான்கைந்து பேர்கள் தீப்பந்தங்களுடன் சென்றுகொண்டிருந்தனர். அவர்கள் எதிர்பார்த்தது போலவே மரக்கிளைகளில் அடிபட்டு, வலது காலில் பலமான காயத்துடன் மயக்கிக் கிடந்தான் குணபாலன்.
உடனடியாக குணபாலனுக்குத் தேவையான முதலுதவியை அந்தக் கூட்டம் செய்தது. அதன்பிறகு அவனை நான்கு பேர்கள் சேர்ந்து தூக்கிக்கொண்டு பாதுகாப்பான ஒரு குடிலை நோக்கி சென்றனர். அங்கே இருந்த ஒரு பெரியவர் அவனது ரத்தக் காயங்களைக் கழுவி சுத்தம் செய்தார்.
பிறகு சில மூலிகை மருந்துகளை அந்தக் காயங்களில் போட்டுவிட்டார். அவனது வலது காலை சோதித்தவர் சற்றேகவலையாக, ‘இந்தக் கால் எலும்பு முறிந்துவிட்டது போல் தெரிகிறது.’ என்றார். பிறகு எலும்பு முறிந்த இடத்தில் சில மூங்கில் பட்டைகளை வைத்துக் கட்டினார்.
‘இந்த இளைஞனுக்கு மூன்று மாதங்களாவது கட்டாய ஓய்வு தேவை. அப்போதுதான் இவனது கால்கள் பழையபடி குணமாகும்.’ என்றார். குணபாலனைக் காப்பாற்ற உதவிய அந்த உருவம் இப்போது முன்னாள் வந்தது. அந்த உருவம் வேறு யாருமல்ல, இதற்கு முன் குரு சாமியார் வேடத்தில் வந்த நபர்தான் அவர். அவரது பெயர் சேரலாதன். ‘இவன் குணமாக இன்னும் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் ஆகட்டும். அதுவரை நாமே இவனை வைத்துப் பராமரிப்போம்.
இவனது எண்ணமும் நமது இயக்கத்தின் கொள்கைகளும் ஒத்துப்போகின்றன. எதிர்காலத்தில் இவன் நமது இயக்கத்துக்குப் பெரிதும் உதவக் கூடும்’ என்றார் சேரலாதன். பெரியவரும், ‘அப்படியே ஆகட்டும்!’ என்றார். குணபாலனுக்கு அன்றைய பொழுது மயக்கத்திலேயே கழிந்தது.
மறுநாள் காலைக் கதிரவன் தனது ஒளிக்கரங்களால் பூமிப்பந்தைத் தீண்டியவேளையில் குணபாலன் தனது விழிகளைத் திறந்தான். முன்பு சொன்னது போலவே, ‘நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேனா? எங்கு இருக்கிறேன்?’ என்றான். இப்போதும் அவனைச் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தவர்கள் சிரித்தனர்.
அவன் கண் விழித்ததைக் கேள்விப்பட்ட சேரலாதனும் அங்கே வந்து சேர்ந்தான். சேரலாதனைக் கண்டதும் குணபாலனுக்கு மேலும் ஆச்சரியமாக இருந்தது. சேரலாதன் அவனிடம், ‘என்ன தம்பி, இப்போதும் சொர்க்கலோகம் சென்று வந்தாயா? அங்கு நாரதமுனியைக் கண்டாயா? என்றார்.
அதற்குப் பதிலளித்த குணபாலன், ‘இந்த முறை நான் எவரையும் காணவில்லை. ஆனால், எனது உயிரைக் காப்பாற்ற கடவுள் உங்களை அனுப்பிக்கொண்டே இருக்கிறார் என்பதை மட்டும் தெரிந்துகொண்டேன்’ என்றான். அதைக் கேட்ட சேரலாதன், ‘அடடே, அப்படியா? உன்னை மட்டும் காப்பாற்றிக்கொண்டே இருக்கிறார் என்றால், உன்னால் இந்த பூமியில் இன்னும் சில நல்ல காரியங்கள் நடக்க வேண்டும் என்பது அந்தக் கடவுளின் சித்தம் போல இருக்கிறது!’ என்று சொல்லிச் சிரித்தார். உடன் இருந்த அனைவரும் அவர் சொன்னதைக் கேட்டுச் சிரித்தார்கள்.
குணபாலனும் அவர்களுடன் சேர்ந்து சிரித்தான். இப்போது அவனது பார்வை அவனது காலை நோக்கிச் சென்றது. அவனது சிரித்த முகத்தில் இப்போது கவலை ரேகைகள் படர்ந்ததன. அதைப் பார்த்த அந்தப் பெரியவர், ‘தம்பி, என்ன பார்க்கிறாய்? கவலைப்படாதே! நீ பயப்படும் அளவுக்கு ஆபத்து நேரவில்லை.
உனது காலில் லேசான எலும்பு முறிவுதான் ஏற்பட்டுள்ளது. சில நாட்கள் ஓய்வெடுத்தால் சரியாகிவிடும். கவலையை விடு. உன்னை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என்றார். சேரலாதனும் வேறு ஓர் ஊரில் நாடகம் போட இருப்பதாகக் கூறி தனது குழுவினருடன் விடைபெற்றுச் சென்றார்.
சேரலாதன் சென்றவுடன் குணபாலன் சுற்றுமுற்றும் பார்த்து அந்தப் பகுதியை நோட்டம் விட்டான். அவனை ஒரு குடிசைக்கு வெளியில் ஒரு கயிற்றுக் கட்டிலில் படுக்க வைத்திருந்தார்கள். ஆங்காங்கே சில குடிசைகள் தென்பட்டன. அவற்றில் எவரும் இருப்பதாகத் தெரியவில்லை. இன்னும் சிலர் வேல், வாள் போன்ற ஆயுதங்களை வைத்து பயிற்சி மேற்கொண்டிருந்தனர்.
இப்போது குணபாலனுக்குள் சில கேள்விகள் எழுந்தன. இவர்கள் நாடகம் போடுபவர்கள் என்றால் எதற்கு அடர்ந்த காட்டின் நடுவே குடியிருக்க வேண்டும்? இந்த போர்ப் பயிற்சிகள் எதற்காக? என்னிடமே நடிக்கிறார்களோ? எனப் பலவாறாக யோசித்தான். ஆனால், விடைதான் கிடைக்கவில்லை. அப்போது தூரத்தில் ஓர் அதிசயக் காட்சியைப் பார்த்தான்.
(தொடரும்)