மாறட்டும் கல்விமுறை - 8: புரிந்ததா, புரிந்ததா என்று பலமுறை கேட்பது ஏன்?

மாறட்டும் கல்விமுறை - 8: புரிந்ததா, புரிந்ததா என்று பலமுறை கேட்பது ஏன்?
Updated on
2 min read

தோல்வியே வெற்றியின் முதல்படி. தவறுகள் கற்றலின் இன்றியமையாத கூறு. தவறு செய்யாதவர்கள் எதையும் கற்றுக் கொள்வதில்லை. ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்வது முட்டாள்தனம். புதுப்புதுத் தவறுகள் செய்பவர்கள் புத்திசாலிகள்.

அப்பப்பா... எத்தனையெத்தனை பொன்மொழிகள். அனுபவித்தவர்கள் கூறிச்சென்ற அருஞ்சொற்கள். இவை தெரிந்திருந்தும் நாம் என்ன எதிர்பார்க்கிறோம்?

வகுப்பறையில் குழந்தைகள் சொல்பவை, எழுதுபவை அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். வகுப்பறையில் தவறே வரக் கூடாது.
சிறுவயதில் தவறு செய்தால் பின்பு திருத்தவே முடியாது.

படிப்பதிலும் எழுதுவதிலும் தவறு வந்தால் அதை உடனுக்குடன் திருத்த வேண்டும். தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்.

அப்பப்பா... எத்தனையெத்தனை எதிர் கருத்துகள். இவையனைத்தும் முன்பு கூறியவற்றுக்கு நேர்முரண். இவை எழுதப்படாத சட்டங்களாக வகுப்பறையில் நிலைநிற்கின்றன. நிலைநிற்க வேண்டும் என்று பெற்றோராகிய நாம் விரும்புகிறோம்.

ஆசிரியர் மேல், குழந்தை கீழ்! - நம்முடைய முன்னனுபவங்களோடு தொடர்புள்ள கருத்தை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதாவது தவறுகளை உடனுக்குடன் திருத்துகிறோம். நாம் திருத்திக் கொடுத்ததைப் பார்த்து குழந்தை சரியாக எழுதினால் நாம் மகிழ்ச்சி அடைகிறோம். என் குழந்தையின் வளர்ச்சிக்கு நான் உதவியிருக்கிறேன் என்ற மனநிறைவு நமக்கு ஏற்படுகிறது. நாம் தொடர்ந்து இதைச் செய்துகொண்டே இருக்கிறோம். குழந்தை பேசும்போதும் திருத்துகிறோம். வாசிக்கும்போதும் திருத்துகிறோம். எழுதும்போதும் திருத்துகிறோம்.

நாம் பேசும்போது, அவர்களிடம் எதை யாவது சொல்லும்போது “புரிந்ததா, புரிந்ததா?” என்று பலமுறை கேட்கிறோம். அதாவது அவர்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள் என்று நாம் முன்பே முடிவு செய்ததுபோல நம் கேள்வி இருக்கும். மட்டுமல்ல ஒவ்வொரு பாட ஆசிரியரும் சொல்லி வைத்தாற்போல் இம்முறையையே பின்பற்றுகிறார்கள். ஒவ்வொரு ஆசிரியரும் இதையே செய்ய வேண்டும் என்று பெற்றோராகிய நாம் ஒவ்வொருவரும் விரும்புகிறோம். ஆசிரியர்களுக்கு அறிவுரை கூறுகிறோம்.

ஆசிரியர்களோ குறிப்பேட்டைத் திருத்துகிறார்கள். தேர்வுத்தாளைத் திருத்துகிறார்கள். வாசிக்கும்போது திருத்துகிறார்கள். கண்கொத்திப் பாம்பாகச் செயல்படுகிறார்கள். அப்படித் திருத்தும்போது நமக்கு ஓர் இனம் புரியாத திருப்தியும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. தவறுகளைத் திருத்தும்போது நம் உடல்மொழியும் குரலும் நம்மை உயர்ந்தவர்களாக நிலைநாட்டுகின்றன. குழந்தையை மிகவும் கீழ் நிலையில் நிறுத்துகிறோம். அது கையறு நிலைக்குத் தள்ளப்படுகிறது. இதற்கு ஏற்றாற்போன்ற செய்முறையை நாம் வகுத்து வைத்திருக்கிறோம்.

பற்றுக்கோடாக இருப்பது அவசியம்: தவறுகளைத் திருத்துவதற்கான நம் செயல்கள் குழந்தைகளிடம் சில எண்ணங்களைத் தோற்றுவிக்கும் என்பதை நாம் வசதியாக மறந்துவிடுகிறோம். வகுப்பறையில் ஒவ்வொரு நிலையிலும் எனக்குத் தவறு நேர்கிறது. தவறு வருவது மிகவும் மோசமானது. எத்தனை கவனித்தாலும் தவறு நேர்கிறது. அதற்கு கவனிக்காமல் இருப்பது எவ்வளவோ பரவாயில்லை. நான் சராசரியானவன். எனக்கு படிக்க வராது... போன்ற எண்ணங்கள் குழந்தைகளின் மனங்களில் எழுவதற்கு நம் செயல்கள் காரணமாகின்றன.

ஒரு கொடி வளர்ந்து சற்று உயரத்தை எட்டியதும் மேலே படர்ந்து தன்னை நிலைநிறுத்திக்கொள்ள, காற்றில் சாய்ந்தும் சரிந்தும் முறிந்து போகாமல் இருக்க நாம் அக்கொடியின் அருகே ஓர் உறுதியான கம்பை நட்டு வைப்போம் அல்லவா. அந்த உறுதியான கொம்புதான் அல்லது அந்தப் பற்றுக்கோடுதான் ஆசிரியர்களாகிய, பெற்றோர்களாகிய நாம். இங்கு மிகவும் கவனிக்க வேண்டியது கொடி வளர்ந்து ஒரு குறிப்பிட்ட உயரத்தை எட்டிய பிறகுதான் பற்றுக்கோட்டை நாம் நட்டு வைப்போம்.

கொடி தலையை நீட்டிய உடனே பற்றுக்கோட்டை நட்டால் அது கொடியின் வேரில் பட்டு வேர் அழிந்துவிடும். அல்லது அதன் பிஞ்சு உடலைப் பற்றுக்கோட்டுடன் இணைக்க முயன்றால் அது உடைந்துவிடும். இதனால் அந்த தாவரமே பட்டுப்போய்விடும்.

காத்திருப்போம் சில காலம்: கொடி ஒரு குறிப்பிட்ட வளர்ச்சியை எட்டும்வரை நாம் எப்படிக் காத்திருப்போமோ அதுபோல் குழந்தை தன்னம்பிக்கையோடு பேசும்வரை, எழுதும்வரை, எதையாவது படைக்கும்வரை காத்திருப்போம்.

தவறுகளை உடனுக்குடன் திருத்த வேண்டும். என்னால் வாசிக்க முடிகிறது, எழுத முடிகிறது என்னும் மகிழ்ச்சியைக் குழந்தைகள் அனுபவிக்கட்டும். மெல்ல மெல்ல சரியான எடுத்துக்காட்டுகளின் மூலம் தவறுகளை மறைமுகமாக உணர்த்துவதுதான் திருத்துவதற்கான வழி. பற்றுக்கோட்டில் ஒரு கொடி படர்ந்திருப்பதைக் காணும் ஒவ்வொரு முறையும் இந்தக்கருத்து உங்கள் நினைவுக்கு வரட்டும்.

- கட்டுரையாளர்: மூத்த கல்வியாளர், கல்வி இயக்குநர், ‘Qrius Learning Initiatives’, கோவை; தொடர்புக்கு: rajendran@qrius.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in