ருசி பசி - 8: ராகி சிறையில் அடைக்கப்பட்ட கதை தெரியுமா?

ருசி பசி - 8: ராகி சிறையில் அடைக்கப்பட்ட கதை தெரியுமா?
Updated on
2 min read

ஆடி மாதம் என்றாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வரும் நிகழ்வு அம்மன் கோயில் கூழ் ஊற்றுதல். கேழ்வரகில் செய்யும் கூழ் உடலுக்கு ஆரோக்கியமானது. கேழ்வரகை ராகி என்றும் அழைப்பார்கள். ராகியைக் குறித்த புராணக் கதையைப் தெரிந்து கொள்வோமா? பதினான்கு வருட வனவாசம் முடிந்த பிறகு, ராமர் அயோத்திக்கு வந்தார். அப்போது ராமனின் வருகையை மக்கள் கோலாகலமாகக் கொண்டாடினர்.

அனுமன் கிஷ்கிந்தைக்குச் செல்ல விரும்பினார். அதற்கு முன்பாக கொஞ்சம் ராகியை எடுத்துக் கொண்டு செல்ல நினைத்தார். உடனே அரிசிக்கு கோவம் வந்துவிட்டது. அரிசியாகிய நானே உயர்ந்தவன். சிறந்தவன். கடவுளுக்குப் படைக்கக்கூடிய தகுதி கொண்டவன். உயரிய என்னைத் தேர்தெடுக்காமல் ராகியைத் தேர்ந்தெடுப்பது எந்த விதத்தில் நியாயம் என்று அனுமனிடம் சண்டைக்கு வந்தது அரிசி.

இந்திரனின் தீர்ப்பு: ராகிக்கு கோவம் வந்துவிட்டது. மக்கள் அதிகம் விரும்புவது என்னைத்தான். நீங்கள் என்னையே கொண்டு செல்லுங்கள் என்று அனுமனிடம் சொன்னது. என்ன செய்வெதென்று புரியாமல் தவித்த அனுமன் பிரச்சினையை ராமரிடம் கொண்டு சென்றார். இந்தப் பிரச்சினையை இந்திரன் தீர்த்து வைப்பதே சரியாக இருக்கும். அதுவரை அரிசியும் ராகியும் காத்திருக்கட்டும் என்று இரண்டு தானியங்களையும் ராமர் சிறை வைத்தார்.

ஆனால் இந்திரன் தன்னுடைய வேலைகளில் கவனம் செலுத்தியதால் சில மாதங்கள் கழித்து தான் அயோத்திக்கு வந்தார். அப்போது ராமர் அரிசியையும் ராகியையும் விடுதலை செய்தார். இந்திரன் என்றைக்கும் அரிசியைவிட ராகியே உயர்ந்தது என்றார். காரணம், இந்திரனுக்காக காத்திருந்த காலத்தில் அரிசிப் புழுத்துப் போய்விட்டது. வண்டுகள் அரிக்க, பொலிவு இழந்து நின்றது.

ஆனால் ராகி தன்னுடையை பொலிவும் வளமும் மாறாமல் அப்படியே இருந்தது. இதுவே இந்திரத் தீர்ப்பின் பின்னணியில் உள்ள நியாயம். இது, செவிவழிக் கதையோ, புராணக் கதையோ இருந்துவிட்டு போகட்டும். ஆனால் கதையில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் 100 சதவிகிதம் உண்மையானது. ராகி பத்து வருடங்கள் ஆனாலும் கெட்டுப்போகாமல், பூச்சி அரிக்காமல் அப்படியே இருக்கும். வரலாற்றில் பதிவாகியிருக்கும் பல பஞ்சங்களில் கேழ்வரகுதான் மக்களுக்கான முக்கியமான உணவாக இருந்து, எண்ணிலடங்கா உயிர்களைக் காத்திருக்கிறது. ‘உணவு சரித்திரம்’ என்ற புத்தகத்தில் ஆசிரியர் முகில் எழுதிய பதிவு இது.

60 வகை கேழ்வரகு: கேழ்வரகு பிறந்த இடம் தமிழகம் இல்லையென்றாலும், தமிழ்ச் சமூகத் தோடும் தமிழக நிலவியலோடும் நெருக்கமான தொடர்பு உடையது கேழ்வரகு. இங்கு பல நூற்றாண்டு காலப் பின்னணி கேழ்வரகுக்கு இருக்கிறது.

கேழ்வரகிலேயே வெண்ணிறக் கேழ்வரகு, கறுப்புக் கேழ்வரகு, நாகமலைக் கேழ்வரகு, மூன்று மாதக் கேழ்வரகு, தேன்கனிக்கோட்டைக் கேழ்வரகு என்று ஏறத்தாழ 60 வகைகள் இருக்கின்றன. ஓசூர், தேன்கனிக் கோட்டை, தளி பகுதிகளில் கேழ்வரகுத் திருவிழா எனும் விழாவே கேழ்வரகு அறுவடைத் திருவிழாவாக, நம் பொங்கல்போல் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

கேழ்வரகு அடை
கேழ்வரகு மாவு 2 கப்
பெரிய வெங்காயம் 1
மிளகாய் 3
சீரகம் 1 டீஸ்பூன்
வேர்க்கடலை தேவையான அளவு கடுகு

உளுத்தம் பருப்பு: மிளகாயை சிறு துண்டுகளாக கிள்ளி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவைப் போட்டு அதில் உப்பு, நறுக்கிய வெங்காயம், மிளகாய் துண்டுகள், சீரகம், பொடித்த வேர்க்கடலை ஆகியவற்றைப் போட்டுக் கலந்து வைக்கவும். கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் ஆகியவற்றை எண்ணெயில் தாளித்து மாவில் கொட்ட வேண்டும்.

தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவுபோல் இல்லாமல் தளர்வாக இருக்குமாறு பிசைய வேண்டும். தோசைக்கல்லில் தண்ணீரில் தெளித்து உருண்டை மாவை எடுத்து வட்டமாக தட்ட வேண்டும். சிறிதளவு எண்ணெய் விட்டு மூடி வேக வைத்தால் கேழ்வரகு அடை தயார்.

- கட்டுரையாளர்: முதுகலைத் தமிழாசிரியா், அரசு மேல்நிலைப்பள்ளி, வெலக்கல் நத்தம், திருப்பத்தூர் மாவட்டம்.
தொடர்புக்கு: devavino86@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in