

நகம் பற்றி தனக்கிருந்த சந்தேகங்களை மாணவி அகல்யா கேட்டபோது, நகம் என்பது இறந்த செல்களிலிருந்து தோன்றுகிறது என்று பதிலளித்தேன். அதற்கு அகல்யா, “ஏன் கை நகங்களும் கால் நகங்களும் ஒரே மாதிரி வளர்வதில்லை? இறந்த செல்களிலிருந்து வளர்கிறது என்கிறீர்கள் ஆனால் நாம் இறந்தபின்னும் நகங்கள் வளர்கின்றன என்கிறார்களே அது உண்மையா?” என்று மேற்கொண்டு கேட்டார். அதற்கான விடை இதோ:
பொதுவாக நமது கை நகங்கள் கால் நகங்களைக் காட்டிலும் இரு மடங்கு அதிகம் வளரும் தன்மை கொண்டவை. அதாவது கால் நகங்கள் மாதம் 1.5 மி.மீ. வளர்பவை என்றால் கை நகங்கள் 3.5 மி.மீ. வரை வளர்ந்திருக்கும். மழைக்காலத்தை விட, வெயில் காலத்தில் அவை வேகமாக வளர்கின்றன.
அதேபோல பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்குச் சற்று கூடுதலாக நகங்கள் வளரும். பெண்களுக்கும் சாதாரண சமயங்களைவிட கர்ப்பகாலத்தில் இவை அதிகம் வளர்கின்றன.
அதேபோல மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு, ஆரோக்கியக் குறைபாடு உள்ளவர்களுக்கு இவற்றின் வளர்ச்சிகுறையும் என்பது உண்மை. பொதுவாக நமது உடல் ஆரோக்கியமும், ஒவ்வொருவரின் விரல்களுக்குத் தரப்படும் பணிகளைப் பொறுத்து இவற்றின் வளர்ச்சி மாறுகிறது.
எல்லோரும் நம்புவதைப்போல இறந்தபின் நகங்கள் நிச்சயம் வளராது. இறந்தபின் நகத்திற்குக் கீழே உள்ளதோல் சுருங்குவதால், நகம் சற்று வெளித்தெரிவதால் அவ்வாறு நம்பியிருப்பார்கள். ஆனால், இந்த நம்பிக்கைதான் திரைப்படங்களில் பேய்கள் நீள நீள நகங்களுடன் வரக் காரணமா இருந்திருக்கலாம் அல்லவா!
அகல்யா: சூப்பர் டாக்டர்...சரி.. நகங்கள் நம் ஆரோக்கியத்தைக் குறிப்பிடும் என்கிறார் எனது அறிவியல் ஆசிரியர். எனது நகத்தில் கூடஅவ்வப்போது வெள்ளைப் புள்ளிகள்காணப்படும். இது எதுவும் குறைபாட்டின் அறிகுறியா டாக்டர்?
நல்ல கேள்வி அகல்யா...இது குறித்து நிச்சயம் அடுத்த வாரம் சொல்கிறேன்.
(தொடரும்)
- கட்டுரையாளர்: மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com