

பிற விஞ்ஞானிகளின் கருத்தை வாசிப்பதும், ஆய்வு முடிவுகளைப் பயன்படுத்துவதும் அக்காலத்தில் திருட்டுக்கு சமமாகக் கருதப்பட்டது. இலவாசியேவும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் இன்றைக்கு இவையெல்லாம் தலைகீழ் நிலை. இதன்மூலம் இலவாசியே வேதியியல் ஆராய்ச்சியில் பல புதுமைகள் செய்தார்.
திணிவுக்காப்பு விதி எனச் சொல்லப்படும் Law of Conservation of Mass-ஐ முதன்முதலில் தெளிவுபடுத்திச் சொன்னவர், இலவாசியேதான். சான்றாக, இரும்பும் ஆக்சிஜனும் ஒன்று சேரும்போது துரு உருவாகும். இந்த மொத்த வேதி வினையிலும் எடையில் மாற்றம் ஏற்பட்டாலும், நிறையில் மாற்றம் ஏற்படாது என்று இலவாசியே தெளிவுபடுத்தினார்.
இவருக்கு முன்புவரை காற்றும் நீரும் தனிமங்கள் (Elements) என்றே கருதினார்கள். காற்றும் நீரும் சேர்மங்கள் (Compounds) என்று சொல்லியதோடு, முதன்முதலில் ஆக்சிஜனை தனிமமாக அறிவித்தார். எரிதலில் ஏற்படும் மாற்றங்களை முறையாக ஆய்வு செய்தார். 1789ஆம் ஆண்டு Elements of Chemistry என்று புத்தகத்தில் அவற்றை விரிவாக எழுதினார்.
தாராள பிரபு: காகிதம் எரிய ஆக்சிஜன் தேவைப்படுவதுபோல், மனித உடலின் கரிம வேதியியல் பொருட்கள் எரிய உடல் ஆக்சிஜனை உள்வாங்குகிறது. மனித உடல் குறைந்த வேகத்தில் எரிந்து கொண்டே இருக்கிறது. எரிதலின் விளைவாய் கார்பன் டை ஆக்சைடு சுவாசித்தின் மூலம் வெளியேற்றப்படுகிறது என்று அனைவருக்கும் புரியும்படி விளக்கினார்.
வரி வசூல் அதிகாரியாக பிரெஞ்சு மன்னருக்கு உழைத்தாலும், அவரின் மோசமான நிர்வாகத்தால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உதவி செய்தார். பயிரிடுதல் பற்றியும் கால்நடை வளர்ப்பு பற்றியும் இலாபகரமான திட்டங்களை விவசாயிகளைக் கூட்டி பகிர்ந்து கொண்டார். 1788இல் பஞ்சம் ஏற்பட்டபோது, தன்னிடம் இருந்த ஆயிரக்கணக்கான பணத்தையும் தானம் செய்தார்.
அரசு இயந்திரம் தவறும் இடங்களைச் சுட்டிக்காட்டி, மன்னருக்கு அவ்வப்போது கடிதம் எழுதினார். புரட்சியின் முக்கிய அங்கமாக இருந்தவரை, விதி பழிவாங்கிவிட்டது. பிரெஞ்சு புரட்சியாளர்கள் மன்னரின் விசுவாசிகளையும், உயிர் உறிஞ்சும் வரிவசூல் அதிகாரிகளையும் தேடித் தேடி வேட்டை ஆடினார்கள். அவ்வகையில் இலவாசியேவும் தன் அறிவியல் நோக்கங்களுக்காக நினைவுக் கூரப்படாமல் கொலை செய்யப்பட்டார்.
நவீன வேதியியலின் தந்தை: பிரான்ஸுக்குத் தப்பியோட வழியிருந்தும் அறிவியல் ஆராய்ச்சியில் மூழ்கியவரால், ஆய்வுக் கூடத்திலிருந்து அணுவளவும் அசைய முடியவில்லை. இலவாசியேவின் தன்னலமற்ற அறிவியல் பங்களிப்புக்காக, தற்கால வேதியியலின் தந்தை என்று அவரை அழைக்கிறோம்.
இலவாசியேவின் இறப்பையொட்டி பிரபல இத்தாலிய நாட்டு கணிதவியல் அறிஞர் ஜோசப் லாக்ராஞ்சி சொன்ன வார்த்தைகள் இன்றளவும் அவருக்குப் பொருந்துகிறது: “அவரின் தலையைத் துண்டாட உங்களுக்கு ஓரிரு நிமிடம் ஆகியிருக்கலாம். ஆனால் அவரைப் போன்ற ஒரு புத்திசாலியைப் பெறுவதற்கு நூற்றாண்டுகள் ஆனாலும் முடியாது.”
- கட்டுரையாளர்: இயற்பெயர் சதீஸ்குமார். மொழிபெயர்ப்பாளர், ஆய்வு மாணவர், பாரதியார் பல்கலைக்கழகம்; தொடர்புக்கு: iskrathewriter@gmail.com