நீங்க ‘பாஸ்' ஆக வேண்டுமா? - 37: காப்பீடு என்னும் ஆபத்பாந்தவன்!

நீங்க ‘பாஸ்' ஆக வேண்டுமா? - 37: காப்பீடு என்னும் ஆபத்பாந்தவன்!
Updated on
2 min read

தருமபுரி அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்தவன் அருண். அங்குள்ள தனியார் பள்ளியில் 8-வது படிக்கிறான். அவனுக்கு இரண்டு தங்கைகள். ஒருத்தி 4-ம் வகுப்பும், இன்னொருத்தி 1-ம் வகுப்பும் படிக்கின்றனர். அருணின் அப்பா சேகர் சேலத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்தார். தாய் பரிமளா தங்களது தோட்டத்தில் விவசாய பணிகளை செய்துகொண்டு, குடும்பத்தை நடத்திவந்தார்.

இந்த நடுத்தர குடும்பம் ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாக கடந்தது. திடீரென ஒருநாள் அவர்களின் வாழ்வில் பேரிடிவிழுந்தது. அருணின் தந்தை சேகர்மாரடைப்பில் இறந்தார். அந்த குடும்பமேசோகத்தில் மூழ்கியது. அருணையும் அவனது தங்கைகளையும் படிக்க வைக்க முடியாமல் தாய் கஷ்டப்பட்டார்.

வீட்டில் உணவுக்கே அல்லாடும் நிலை ஏற்பட்டது. பள்ளியில் கட்டணம் கட்ட முடியாமல் அருணும் அவனது தங்கைகளும் படிப்பை பாதியிலே விட்டனர். தாய் பரிமளாவுக்கு போதிய வருமானம் இல்லாததால், அந்த 3 பிள்ளைகளின் எதிர்காலமே சூன்யமானது.

ஒருவேளை அருணின் அப்பா இன்ஷூரன்ஸ் (காப்பீடு) செய்திருந்தால் அந்த குடும்பத்துக்கு இந்த துர்பாக்கிய‌ நிலை ஏற்பட்டிருக்காது. பொருளாதார ரீதியாக அந்த குடும்பத்துக்கு இன்ஷூரன்ஸ் நிறுவனம் கைக்கொடுத்திருக்கும்.

காப்பீடு (இன்ஷூரன்ஸ்) என்றால் என்ன? - காப்பீட்டை வங்கியில் சேமிப்பது போன்று என சொல்ல முடியாது. பங்குச்சந்தை முதலீடாகவோ, பரஸ்பர நிதி வாங்குவதைப் போலவோ கருத முடியாது. அப்படியென்றால், இது சேமிப்பா? என்றால் இல்லை. செலவா? என்றால் அதற்கும் இல்லை என்பதே பதில். அதாவது, சிறிய செலவில் பெரிய‌ முதலீடு என்பதே சரியான பதில்.

எதிர்பாராத இழப்புகள் நம்முடைய வாழ்வை எப்போது வேண்டுமானாலும் புரட்டி போட்டு விடலாம். அதில் நாம் முற்றிலும் நிலைகுலைந்து போகலாம். அந்த மோசமான‌ சூழ்நிலையில் இருந்து நம்மையும் நம்மை சார்ந்து இருப்பவர்களையும் பாதுகாத்து கொள்வதுதான் காப்பீடு. காலத்தின் கோர தாக்குதலில் இருந்து நம்மை நாமே காத்துக் கொள்ள உருவாக்கி கொள்ளும் தற்காப்பு வலை என்றும் இதனை சொல்லாம்.

இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், காப்பீடு என்பது நம்மை ஆபத்தில் இருந்து காக்கும் ஆபத்பாந்தவன். பயிர்களின் பாதுகாப்புக்காக வேலி போடுவதுபோல, வாழ்க்கையின் பாதுகாப்புக்காக போட்டுக்கொள்ளும் வேலி. இந்த வேலியை அமைக்க சிறிய அளவில் செலவு ஆனாலும், அதுதானே மொத்த விளைச்சலையும் பத்திரமாக பாதுகாக்கிறது.

காப்பீட்டின் வரலாறு: காப்பீட்டு முறை இந்தியாவிலும் வெளிநாட்டிலும் நீண்ட காலமாக, ப‌ல வடிவங்களில் நடைமுறையில் இருந்திருக்கிறது. பண்டையகாலங்களில் கடல் வணிகத்தில் ஈடுபட்டிருந்த வியாபாரிகள் திடீர் விபத்துகளால் தங்களின் சரக்கை இழந்தனர். இதனால் பெரும் நஷ்டத்தை சந்தித்த வியாபாரிகள் அதனை சமாளிக்க புதிய திட்டங்களை தீட்டினர். அதில் ஒன்று தான் காப்பீடு.

அதாவது வியாபாரிகள் தங்களின் நஷ்டத்தை ஈடுகட்ட, முதலில் தங்களுக்குள் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தினர். அதற்கான சட்ட‌ ரீதியான திட்டங்களை வகுத்தனர். பின்னர் அந்த கூட்டமைப்பில் உறுப்பினர்கள் அனைவரிடமும் சரக்கிற்கு ஏற்றவாறு கட்டுத்தொகையை (பிரிமீயம்) வசூலித்த‌னர். பின்னர், கப்பல் விபத்தில் சிக்கினால் நஷ்டம் அடைந்த வியாபாரிக்கு காப்பீட்டு தொகையை வழங்கினர். இந்த நஷ்ட ஈடு, அந்த வியாபாரி பாதிப்பில் இருந்து மீள பொருளாதார ரீதியாக உதவியது.

இந்த முறை 19-ம் நூற்றாண்டில் நிறுவனமையமாக மாறியது. அதற்காக சிறப்பு சட்டங்கள் தீட்டப்பட்டு இங்கிலாந்தில் இன்ஸூரன்ஸ் நிறுவனமாக ஆரம்பமானது. ‘ஓரியண்டல் இன்ஷூரன்ஸ் கம்பெனி' என்ற பெயரில் 1818-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தது.

தற்போது காப்பீட்டில் பல்வேறு பிரிவுகள் உருவாகியுள்ளன. ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு, வாகன காப்பீடு, பயிர்காப்பீடு என நிறைய வகைகள்இருக்கின்றன. அவற்றை அடுத்தடுத்த அத்தியாயங்களில் பார்ப்போம்.

(தொடரும்)

- கட்டுரையாளர் தொடர்புக்கு: vinoth.r@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in