

செல்லாத்தா... செல்ல மாரியாத்தா என்று அம்மன் கோயிலில் இருந்து பாடல் ஒலிக்க, குழலி வீடும் பரபரப்பாக இருந்தது. அப்பா வேப்பிலைத் தோரணங்களைக் கட்ட, அம்மா பெரிய அண்டாவில் கூழ் எடுத்து வந்தார். வேப்பிலை, மஞ்சள், பானகரம், வெல்லமிட்டு இடித்த பச்சரிசி மாவு என எல்லாம் தயாராக இருந்தன.
சுடரும் அவன் பாட்டியும் வந்திருந்தார்கள். பெரியவர்கள் சாமி கும்பிட அணியமானார்கள். பின் கூழ் வார்த்தார்கள். பலரும் வந்து கூழ் குடித்தார்கள். சிலர் பாத்திரங்களில் பெற்றுக்கொண்டார்கள். குழலியும் சுடரும் சுவையான அந்தக் கூழைக் குடித்துவிட்டுத் திண்ணையில் அமர்ந்தார்கள்.
சுடர்: கூழும் கூட எப்பயாவது சாப்பிடுற உணவா மாறிருச்சுல்ல...
குழலி: ஆமா சுடர். நாம ஏன் ஆடி மாசம் கூழ் ஊத்தறோம்?
சுடர்: ஆடி மாசத்த அம்மனுக்கு உகந்த மாசம்னு சொல்வாங்க. அதனாலதான எல்லா அம்மன் கோயில்கள்லயும் சிறப்பான வழிபாடும் திருவிழாக்களும் நடக்குது.
குழலி: அது சரி, ஏன் கூழ் ஊத்தறாங்க?
சுடர்: எப்படியும் ஒரு பதில் வச்சிருப்ப. நீயே சொல்லிடேன்.
குழலி: சித்திரை, வைகாசி, ஆனி மாதங்கள்ல வெயில் கடுமையா இருக்கும். ஆடியில காத்து அதிகமா இருக்கும். அதிகமான வெப்பமும் வறட்சியும் இருக்குறதால வர்ற நோய்கள், மழை பெஞ்சு நிலம் குளிர்ந்தாத் தானே குறைஞ்சிடுமாம். அதனால மழைய சாமியாவே நினைச்சாங்க. அதோட மழையைத் தர்ற தெய்வமா மாரியம்மனயும் கும்பிட்டாங்க. அம்மனோட மனசு குளிர்ந்தா, இந்த மண்ணும் குளிரும்னு நம்பினாங்க. அந்தக் காலத்துல அம்மை, காலரா போன்ற நோய்கள் வந்தப்ப, அதிலிருந்து தங்களக் காப்பாத்தினது மாரியம்மன்தான்னு மக்கள் நம்பினாங்க.
சுடர்: இன்னும் கூழைப் பத்திச் சொல்லலையே...
குழலி: சொல்றேன் சுடர். விவசாயிகளுக்குச் சித்திரை மாசம் அறுவடை முடிஞ்சிருமாம். அடுத்த ரெண்டு மாசத்துக்கு அவங்க அறுவடையில் கிடைச்ச தானியங்களக் கையிருப்பா வச்சிருப்பாங்களாம். ஆடி மாசத்துல அவங்ககிட்ட இருந்த தானியங்கள் தீர்ந்தா, அடுத்து வர்ற நாட்களுக்கு உணவுக்குத் தட்டுப்பாடு. பஞ்சம். அப்படி வந்த பஞ்சத்த இப்படிக் கூழ் ஊத்தற செயலால நம் முன்னோர்கள் தவிர்த்திருக்காங்க. ஆனா இப்ப அது ஒரு வழிபாட்டுச் சடங்கா மட்டும் தான இருக்கு. கம்பு, கேழ்வரகுல செய்யிற கூழ் உடம்போட சூட்டைத் தணிக்குமாம். அதனால வெப்பத்தால நோய்கள் அதிகரிக்காமப் பாத்துக்கறதுக்கும் நோய் வந்தவர்களுக்கு உடல் தெம்பைக் கொடுக்கறதுக்கும் இந்தக் கூழ் நல்ல சத்துள்ள உணவா இருந்திருக்கு. பிட்டுத் தின்பதைக் கரைத்துக் குடின்னு ஒரு பழமொழி ...
சுடர்: எங்கயிருந்து தான் உனக்கு மட்டும் இந்த மாதிரிப் பழமொழியெல்லாம் கிடைக்குதோ..
குழலி: இப்ப நான் சொன்னேன் பார்த்தியா.. ஆடியில ஏன் கூழ் ஊத்தினாங்கன்னு. அதோட தொடர்புடையதுதான். கேழ்வரகோ, கம்போ களியா, கட்டியா இருந்தாக் கொஞ்சப் பேர்தான் சாப்பிட முடியும். அந்தக் களியையே கரைச்சுக் கூழ் போல ஆக்கிட்டா நிறையப் பேர் சாப்பிடலாம்ல. உன்கிட்ட இருக்கிறதை இல்லாதவங்களோட பகிர்ந்து சாப்பிடணும்ங்கிற நம்மோட மரபுதான் சுடர் அது.
சுடர்: நான் கூடப் படிச்சிருக்கேன். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரேன்னு மணிமேகலையில..
குழலி: சரியாச் சொன்ன. பசியைப் பிணின்னு சொல்றாங்க. அதாவது பசிங்கிறது நோய். பசியைத் தீர்ப்பவனைப் பசிப் பிணி மருத்துவன்னு நம்ம இலக்கியங்கள் சொல்லுது. நம்ம பண்பாட்டுல பசி தீர்ப்பது பெரிய அறம். அதனால தான இன்னைக்கும் அன்னதானங்கள் நடந்துக்கிட்டே இருக்கு.
பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன்னு ஒரு மன்னன் சங்க இலக்கியத்துல வர்றான். அவன் கொடுத்த உணவினாலே அவனுக்கு அப்படிப் பேராம். அடிசில், அயனி, அவிழ், கூழ், சொன்றி, நிமிரல், புழுக்கல், புன்கம், பொம்மல், மிதவை, மூரல்ன்னு உணவோட செய்முறைகள வச்சுப் பல சொற்கள் இருக்கு நம்ம இலக்கியங்கள்ல...
சுடர்: பட்டியல் நீளமாப் போகுது... இன்னைக்கு முடியாது. இன்னும் ரெண்டு சொம்புக் கூழ் குடிக்கணும் நீ சொல்றதக் கேட்க.
- கட்டுரையாளர்: தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர்; தொடர்புக்கு: janagapriya84@gmail.com