

எனது தொழில் விவசாயம். அதனுடன் 30 மாடுகள் வைத்து பால் வியாபாரம் செய்கிறேன். எனது மகள் பிளஸ் 2 படித்து வருகிறாள். அவளை பால் உற்பத்தி தொழில் சம்மந்தமாக படிக்க வைக்க விரும்புகிறேன். அதற்கு என்ன படிக்க வேண்டும்?- மாதேஸ்வரன், புளியம்பட்டி, ஈரோடு.
பால் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்கள் குழந்தைகள் முதல் வயதானவர்கள்வரை அன்றாட உணவில் அவசியமாகிறது. எனவே தங்களின் முடிவு சிறப்பானது. பால் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்ய உகந்த படிப்பானது டையரி டெக்னாலஜி. இதனை தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் வழங்குகி்றது. இந்த பல்கலைக்கழகத்துக்குக்கீழ் திருவள்ளூர் மாவட்டம் அலமாதியில் உள்ள காலேஜ் ஆஃப் புட் அண்ட் டையரி டெக்னாலஜி கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு பி.டெக்., டையரி டெக்னாலஜி கற்பிக்கப்படுகிறது. இதுதவிர சென்னை சிரி சந்திர பிரபு ஜெயின் கல்லூரியில் பி.எஸ்சி. டையரி சயின்ஸ் வழங்கப்படுகிறது. இதுபோக நாடு முழுவதும் 64 கல்வி நிறுவனங்கள் டையரி டெக்னாலஜி படிப்பினை வழங்குகின்றன. அவை அனைத்தையும் இங்கு பட்டியலிட முடியாது ஒரு சில உங்களின் தகவலுக்காக.
1. ஓடிஐடி - ஆனந்த் குஜராத்.
2. காலேஜ் ஆப் டையரி அண்ட் புட் சயின்ஸ், உதய்பூர்
3. காலேஜ் ஆப் டையரி அண்ட் புட் சயின்ஸ். இடுக்கி, கேரளா
4. காலேஜ் ஆப் டையரி அண்ட் புட் சயின்ஸ், திருப்பதி, ஆந்திரா
5. டையரி சயின்ஸ் காலேஜ், குல்பர்கா.
6. டையரி சயின்ஸ் காலேஜ், பெங்களூரு.
இவற்றின் சேர்க்கை குறித்து நாளிதழ் விளம்பரங்கள் மற்றும் அவற்றின் இணையதள வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
உயர்கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான உங்களது சந்தேகங்களை ‘வேலைக்கு நான் தயார்’ பகுதிக்கு vetrikodi@hindutamil.co.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி நிபுணரின் வழிகாட்டுதல் பெறுங்கள்.
- கட்டுரையாளர்: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை முன்னாள் இணை இயக்குநர்.