போவோமா ஊர்கோலம் - 8: அவுரங்காபாத்தில் ஒரு குட்டி தாஜ்மகால்!

போவோமா ஊர்கோலம் - 8: அவுரங்காபாத்தில் ஒரு குட்டி தாஜ்மகால்!
Updated on
2 min read

ஷீரடியில் இருந்து கிளம்பி வட மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் நகரத்துக்கு வந்தடைந்தோம். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்த நகரம். கூகுளில் கூட இந்த நகரம் எப்படி இருக்கும், என்ன இருக்கும் என எதுவும் தெரியாமல் வந்தோம். அவுரங்காபாத் நகரத்தைச் சென்றடைவதற்கு முன்னே நாம் சென்ற வண்டி பஞ்சர் ஆகிவிட்டது.

வண்டியின் டயரை பார்த்த போது, புது ஆணி ஒன்று டயரை பதம் பார்த்திருந்து. மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் பெரும் பகுதியில் இதுபோன்ற பஞ்சர் கொள்ளைகள் நடக்கும் என அதன்பிறகுதான் தெரிந்தது. நமக்கு ஏற்கெனவே மும்பையில் இதுபோன்ற ஒரு அனுபவம் இருந்தது. அது எதேச்சையாக நடந்தது என நினைத்து விட்டுவிட்டோம். ஆனால், இப்போது புது ஆணியால் வண்டி டயர் பஞ்சர் ஆனதும் இது உறுதியானது. அங்கிருந்த சிலரிடம் விசாரித்தபோதும் இதையே உறுதிப்படுத்தினார்கள்.

ஒருவழியாகக் கடையைத் தேடிப்பிடித்து பஞ்சர் போட்டு, ஹோட்டல் இருந்த இடத்துக்கு சென்றால் அங்கு அப்படி ஒரு ஹோட்டல் இல்லை என்று வந்தது. இதுபோன்று நமக்கு நடந்ததில்லை. இதுதான் முதல்முறை. மீண்டும் ஒரு ஹோட்டல் தேடி அங்கு சென்று சேர்வதற்குள் சோர்ந்து போனோம். என்னடா இந்த நகரம், வந்த முதல் நாளே நம்மைப் பாடாய் படுத்துகிறதே என்று தோன்றியது. அலைச்சல்...அசதி அதனால் முதல்நாள் ஹோட்டல் அறையிலேயே தங்கிவிட்டோம்.

வரலாற்று பொக்கிஷங்கள்: மறுநாள் காலை அவுரங்காபாத் நகரத்தை சுற்றி பார்க்க கிளம்பினோம். பெரிய பெரிய சாலைகள், பிரம்மாண்ட கட்டிடங்கள். வரலாற்றைச் சுமந்து நிற்கும் பழைமையான கட்டிடங்கள் என அவுரங்கபாத் இப்போது அழகாக தெரிந்தது. எல்லாமே நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில் தானே இருக்கிறது.

அஜந்தா மற்றும் எல்லோரா குகைகள், பஞ்சக்கி, பீபி கா மக்பரா, சஹேலியோன்-கி-பாரி என வரலாற்றுப் பொக்கிஷங்கள் அவுரங்காபாத்திலும் அதை சுற்றிலும் இருந்தன.

அவுரங்காபாத்தில் நாம் முதலில் சென்று பார்த்தது 'குட்டி தாஜ்மகால்'. அதென்ன குட்டி தாஜ்மகால் என்ற கேள்வியுடன் தான் நாமும் அங்கு சென்றோம். பெயருக்கு ஏற்றாற்போல், அச்சு அசல் அப்படியே தாஜ் மஹாலைப் பார்ப்பதுபோல் இருந்தது. என்ன தாஜ் மஹாலைவிட இந்த வரலாற்று பொக்கிஷம் அளவில் சற்று சின்னதாக இருந்தது. இந்த குட்டி தாஜ்மஹாலுக்குப் பெயர் 'பிபி க மக்பரா'.

ஷாஜகான் மகன் கட்டியது: முகலாய மன்னர் ஷாஜகான் தனது மனைவி மும்தாஜ் நினைவாக ஆக்ராவில் இருக்கும் தாஜ்மஹாலை கட்டினார். அது காதலின் சின்னமாக இன்றுவரை போற்றப்படுகிறது. மன்னர் ஷாஜகானின் மகனான அவுரங்கசீப் மனைவிக்குக் கட்டப்பட்டது தான் இந்த 'பிபி க மக்பரா'. அவுரங்கசீப்பின் மனைவியான தில்ரஸ் பானு பேகத்தின் நினைவாக, அவரது மகன் முகமதுஆசம் ஷாவால் கட்டப்பட்டது.

நகரின் மையபகுதியில் பரந்து விரிந்து பிரம்மாண்டமாக அழகாக இருக்கிறது இந்த குட்டி தாஜ்மஹால். தாஜ்மஹால் எப்படி இருக்குமோ, என்னென்ன பொருட்கள் கொண்டு கட்டப்பட்டதோ, அது போலவே பார்த்து பார்த்து கட்டி இருக்கிறார்கள். இந்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த கட்டிடம் 'டெக்கான் தாஜ்' என்றும் அழைக்கப்படுகிறது.

அவுரங்கசீப்பின் மனைவியான தில்ரஸ்பானு பேகத்தின் நினைவிடம் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு பாதுகாப்பபடுகிறது. அதேசமயம் இந்த நினைவிடத்தில் இருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவில் அவுரங்கசீப்பின் நினைவிடம் அமைந்திருக்கிறது. அது மிகவும் சாதாரணமாகக் கட்டப்பட்டு, புதர்மண்டிக் கிடக்கிறது.

இதற்கான காரணமெல்லாம் இங்கு யாருக்கும் தெரியவில்லை. மீண்டும் மழை துரத்திவர ஹோட்டல் அறைக்கே சென்றோம். நாளை மகாராஷ்ட்டிராவின் மிகப்பழமையான இடத்துக்குச் செல்ல வேண்டும். மழை மட்டும் வராமல் இருந்தால் நன்றாக இருக்கும். பார்ப்போம்.

- கட்டுரையாளர்: இதழியலாளர், கீழடி, கண்ணகி கோட்டம் உள்ளிட்ட தமிழ் பண்பாட்டு நிலப்பரப்புகளை ஆவணப்படம் பிடித்தவர், பயணப் பிரியை; தொடர்புக்கு: bharaniilango@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in