

இப்போது நாம் முந்தைய பகுதியில் விட்டுச் சென்ற கேள்விக்கு வருவோம். சூழல் மண்டலம் ஏன் சிக்கலாக இருக்கிறது? ஒரு தனிப்பட்ட உயிரினத்துக்கு மட்டும் ஏன் அங்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. நம் பூமி பல்வேறு உயிர்களுக்கு வீடாக இருக்கிறது.
அதனால் எல்லா உயிர்களையும் உள்ளட்டக்கிய வளர்ச்சி என்ற வகையில்தான் சூழல் மண்டல அமைப்பு உருவாகியுள்ளது. நமது விருப்பத்துக்கு ஏற்றாற்போல் ஒரு உயிரினத்தை அகற்றினால் அது ஒட்டுமொத்த வளர்ச்சிக்குமான தடையாக அமையும்.
மக்கள்தொகை போல விலங்குகள் தொகை: இதற்கான எடுத்துக்காட்டைத்தான் யெல்லோஸ்டோன் பூங்காவின் சூழல் மண்டல பாதிப்பில் பார்த்தோம். அந்தச் சூழல் மண்டலத்தில் மான்கள்தான் பிரச்சினை என்றால் மான்களை மொத்தமாக அழித்துவிடக் கூடாதா என்ற கேள்வி எழலாம். பதில் அவ்வளவு எளிதானது அல்ல. மான்களின் பங்கும் ஒட்டுமொத்த வளர்ச்சியின் ஓர் அங்கமாக இருக்கிறது. மான்கள் விதைகளைப் பரப்புகின்றன, அங்கு வாழும் சில உயிரினங்களுக்கு உணவாகவும் இருக்கின்றன.
அதனால் மான்கள்தான் பிரச்சினை என்று ஒட்டுமொத்தமாக அகற்றிவிட முடியாது. அதன் எண்ணிக்கைத்தான் பிரச்சினையாகிறது. அதேபோல ஓநாய்களின் வருகை ஒட்டுமொத்த மான்களையும் அழித்துவிடாதா என்ற கேள்வியும் வரலாம். ஓநாய்கள் முதிர்ந்தமான்களை மட்டுமே வேட்டையாடுகின்றன. அவை மான்களை அழிப்பதில்லை, அவற்றின் எண்ணிக்கையை மட்டும் கட்டுப்பாட்டில் வைக்கின்றன.
இங்கேதான் உயிரினங்களின் எண்ணிக்கை என்ற அம்சம் வருகிறது. சூழலியலில் உயிரினங்களின் எண்ணிக்கை (Population) எந்த வகையில் முக்கியத்துவம் பெறுகிறது. உயிரினத்தின் எண்ணிக்கையை எது நிர்ணயம் செய்கிறது ஆகியவற்றை அடுத்தப் பகுதியில் பார்க்கலாம்.
- கட்டுரையாளர்: அறிவியல், சூழலியல், தொழில்நுட்பம் குறித்து எழுதி வரும் இளம் எழுத்தாளர். ‘மிரட்டும் மர்மங்கள்’ நூலாசிரியர்; தொடர்புக்கு: tnmaran25@gmail.com