

காஃபி குடிப்பதற்கு உங்களுக்குப் பிடிக்கும்தானே? சுவையான காஃபியை உங்கள் அம்மாவோ, அப்பாவோ எப்படித் தயார் செய்கிறார்கள் என்று பார்த்திருக்கிறீர்களா?
முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க விடுவார்கள். அதில் தேவையான அளவு காஃபி தூளும் சர்க்கரையும் சேர்ப்பார்கள். அவ்வளவுதான் சுவையான காஃபி ரெடி. அதெல்லாம் சரி, கதைக்கும் காஃபிக்கும் என்ன தொடர்பு என்றுதானே கேட்கிறீர்கள். இருக்கிறது. காஃபி தயார் செய்ய ஒரு பார்மலா இருக்கிறது அல்லவா? அதேபோல கதைகள் எழுதுவதிலும் சில ஃபார்முலாக்கள் இருக்கின்றன. ஆஹா… அந்த பார்முலாக்களைச் சொல்லுங்கள் மனப்பாடம் செய்துகொள்கிறோம் என்று கேட்பது புரிகிறது. கொடுத்துவிட்டால் போச்சு!
சிங்கத்துக்கு வந்த வாசனை: அதற்கு முன் புகழ்பெற்ற எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய ‘பழக்க வாசனை’ எனும் சிறுவர் கதையின் சுருக்கத்தைப் பார்ப்போம்.
‘அது ஒரு சர்க்கஸ் சிங்கம். ஓர் ஊரில் இருந்து வேறு ஊருக்கு வண்டியில் அழைத்துச் செல்லப்பட்டது. அப்போது திடீரென்று ஒரு வாசனை அதைத் தீண்டியது. நன்கு தெரிந்த வாசனை ஆயிற்று என்று யோசித்தது. அடடா.. அந்த சிங்கம் பிறந்து வளர்ந்த காட்டின் வாசனை என்று கண்டுபிடித்தது. அந்தக் காட்டின் வழியாகத்தான் வண்டி சென்றது. சிங்கம் குட்டியாக இருக்கும்போதே சர்க்கஸ்காரர்கள் பிடித்து வந்துவிட்டார்கள்.
இப்போது அதற்கு வயதாகி விட்டது. எப்படியாவது வண்டியில் இருந்து தப்பிச் சென்று காட்டுக்குள் குதித்து விட வேண்டும் என நினைத்தது சிங்கம். அது இருந்த கூண்டை முன்கால்களால் ஓங்கி ஓங்கி அடித்தது. கூண்டும் உடைந்தது. வேகமாகச் சென்ற வண்டியில் இருந்து சிங்கம் பாய்ந்து காட்டுக்குள் குதித்து தப்பியது.
அப்பாடா… இனி விடுதலை… யாரும் தன்னை சவுக்கால் அடிக்க மாட்டார்கள். நினைத்த இடத்திற்குச் செல்லலாம். ஆசைப்பட்ட விலங்குகளை வேட்டையாடித் தின்னலாம் என்று நினைத்தது சிங்கம். ஆனால், தளர்ந்து இருந்த அதன் உடலால் காட்டுக்குள் வேகமாகக் கூட செல்ல முடியவில்லை. சர்க்கஸில் இளைத்து போன யானையைப் பார்த்த சிங்கத்திற்கு, துதிக்கையை ஆட்டிக்கொண்டு, பெரிய மரத்தையே முறித்துகொண்டு வந்த யானையைப் பார்த்ததும் நடுக்கம் வந்தது.
அதைப் பார்த்த நரி சிரித்தது. சிறு விலங்கைக்கூட சிங்கத்தால் வேட்டையாட ஆட முடியவில்லை. சர்க்கஸில் இருந்தாலாவது அரை வயிற்றுக்கு இரை கொடுப்பார்கள். இங்கே அதுவும் கிடைக்கவில்லையே என்று வருந்தியது. அதனால், சர்க்கஸ் வண்டி சென்ற தடத்தில் சர்க்கஸ் கூடாரம் நோக்கி நடக்கத் தொடங்கியது சிங்கம்.’
விலங்குக்கு பதில் மனிதர்: இந்தக் கதை என்ன ஃபார்முலாவில் எழுதப்பட்டிருக்கிறது தெரியுமா? - ‘சிறு வயதில் பிடிபட்டு துன்புறுத்தப்படுகிறது ஒரு விலங்கு. மீண்டும் பழைய இடத்திற்கே செல்ல வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், அங்கு வாழ முடியாமல் திரும்பிச் செல்ல வேண்டியதாகிறது.’
இந்த ஃபார்முலாவில் நாம் ஒரு கதை எழுதிப் பார்ப்போமா? ஒரு விலங்கு என்பதற்கு பதில் ஒரு மனிதர் அல்லது ஒரு பறவை அல்லது ஒரு வாகனம் அல்லது ஒரு மலர் அல்லது ஒரு பூச்சி என எதை வேண்டுமானாலும் வைக்கலாம். அது ஏதோ ஒரு காரணத்தால் வேறொரு இடத்திற்கு கடத்தப்பட வேண்டும்.
அங்கிருந்து தப்பித்துச் செல்வதற்கு புதிய வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். அப்படிச் சென்று அங்கு இருக்க முடியாமல் போவதற்கு புதிய காரணங்களைச் சொல்ல வேண்டும். அந்தக் காரணங்கள் மீண்டும் அடைப்பட்டிருந்த இடத்திற்கே செல்ல தூண்ட வேண்டும். முயற்சி செய்துப் பாருங்கள்.
- கட்டுரையாளர் : எழுத்தாளர், ‘ஒற்றைச் சிறகு ஓவியா’, ‘வித்தைக்காரச் சிறுமி’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; தொடர்புக்கு: vishnupuramsaravanan@gmail.com