

ராஜனின் ஏழ்மையான குடும்பச்சூழல் அவர் மருத்துவம் படிக்க சிறிதும் உதவவில்லை. இருப்பினும் தந்தையின் விருப்பத்தையும் மீறி மருத்துவ நுழைவுத் தேர்வை எதிர்கொண்டார். அப்போதெல்லாம் அரசு கொடுக்கும் உதவித்தொகை மூலம் படித்து மருத்துவப் பட்டம் பெற்று பிற்பாடு அரசு சொல்லும் ஊரில் வேலை பார்த்துக் கழித்துக் கொள்ளலாம் என்ற திட்டம் நடைமுறையில் இருந்தது. இதன் மூலம் நான்கு ஆண்டுப் படிப்பை அரசு உதவித்தொகையுடன் சென்னை மருத்துவக் கல்லூரியில் முடித்து முதன்மை மதிப்பெண்களுடன் ராஜன் தேறினார்.
அதேசமயத்தில் அவருக்குத் திருமணமும் முடிந்தது. முடிந்த கையோடு ஏற்கெனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, அரசிடம் பெற்ற உதவித்தொகையை பணிசெய்து கழிக்க வேண்டி, அரசு நிர்ணயித்த பர்மாவுக்குப் புறப்பட்டார்.
பழிகளுக்கு அஞ்சாத சேவை! - தனது மனைவி மற்றும் பெண் குழந்தையுடன் ஆயிரக்கணக்கான மைல்கள் கப்பலில் பயணம் செய்து, ரங்கூனில் மாதம் இருபத்தி ஐந்து ரூபாய் என்ற குறைந்த ஊதியத்தில் உதவி மருத்துவராகப் பணியாற்றத் தொடங்கினார்.
ஆனால், அங்கும் நிலைமை அவருக்குத் திருப்தியாக இருக்கவில்லை. ரங்கூன் மருத்துவமனையின் தலைமை மருத்துவர், ஒரு குமாஸ்தாவைப் போல் வெறும் எழுத்துப் பணிக்கு மட்டுமே ராஜனை உபயோகப்படுத்தினார். தான் கற்றறிந்த கல்விக்கு அநீதி விளைவிப்பதாக உணர்ந்த ராஜன், அதனை எதிர்த்து தலைமை மருத்துவரிடம் கேள்வி எழுப்பினார்.
தனக்கு எதிராக குரல் எழுப்பிய அவரை ‘பம்பு வார்ட்' எனப்படும் மரணத் தருவாயில் இருக்கும் நோயாளிகளின் வார்டுக்கு மாற்றினார் அந்த தலைமை மருத்துவர். பெரும் இன்னல்களுக்கு இடையே அங்கே பணியாற்றினாலும், அவர்மீது வஞ்சத்துடன் இருந்த அந்த தலைமை மருத்துவர், நோயாளி ஒருவருக்கு தவறான சிகிச்சையளித்ததாக ராஜனைக் குற்றம் சாட்டினார்.
இன்னலுக்கு பின் இனிமை: அதையும் எதிர்த்து அந்த மருத்துவமனையை விட்டு வெளியேறிய ராஜன், அடுத்ததாக பர்மாவின் ராணுவ மருத்துவமனையில் சேர்ந்ததுடன் அங்கிருக்கும் தவறுகளையும் சுட்டிக்காட்ட ஆரம்பித்தார்.அதனால் ராணுவ மருத்துவமனையிலிருந்தும் வெளியேற்றிய உயர் அதிகாரிகள், அடுத்து ராஜனை இராணுவ வீரர்களுடன் வட பர்மாவின் காடுகளுக்குள் இருந்த கேம்ப்களுக்கு சென்று மருத்துவம் பார்க்க அனுப்பினர்.
இதனால், தான் படும் கஷ்டங்களை தனது குடும்பமும் படவேண்டாம் என்று எண்ணிய ராஜன் ஒரு பெரும் கடனை வாங்கி தனது மனைவியையும் மூன்று பெண் குழந்தைகளையும் இந்தியாவுக்கு அனுப்பிவிட்டு மனவருத்தத்துடன்தான் மட்டும் பர்மாவிலேயே தங்கி தனது பணியைத் தொடர்ந்தார் ராஜன்.
அவரது துயரத்தைக் கண்ட வ.வே.சு.ஐயரின் நெருங்கிய உறவினரான பசுபதிஐயர், ராஜனுக்கு உதவிக்கரம் நீட்டினார். அவரிடமிருந்து பெற்ற பணத்தில் அரசாங்கத்திற்குத் தரவேண்டிய உதவித்தொகையான ஐந்நூறு ரூபாயை முற்றிலும் அடைத்துவிட்டு, ரங்கூனிலேயே சுதந்திரமாக மருத்துவப் பணியைத் தொடங்கினார் டாக்டர் ராஜன்.
தனது கூர்மையான அறிவுத்திறனால் நோய்களை முறையாகக் கண்டறிந்து, அதற்கேற்ப மருந்துகளை அவர் பரிந்துரைக்க,நோயுற்றவர்கள் முற்றிலும் குணமடைந்ததுடன் விரைவிலேயே ரங்கூனில் வசித்த தமிழர்களிடையே கைராசி டாக்டராக பிரபலமடைந்தார் ராஜன். கடன் தொல்லைகள் நீங்கி, இல்லத்தாரை வரவழைத்து, முதன்முறையாக மகிழ்ச்சியுடன் மனைவி மற்றும் மூன்று மகள்களுடன் பர்மாவில் வசிக்கத் தொடங்கினார்.
என்றாலும், ரங்கூனில் தனது மருத்துவப் பட்டத்தை ‘சப் அசிஸ்டெண்ட் சர்ஜன்' என பலரும் குறிப்பிடுவதைக் கண்ட ராஜன், அங்கு பணிபுரிந்து வந்த வெளிநாட்டு மருத்துவர்களுக்கு இணையான பெயரைப் பெற இங்கிலாந்து சென்று மேற்படிப்பு பயில முடிவெடுத்தார்.
மனைவி உள்பட குடும்பமே அவரது எண்ணத்திற்கு எதிராக நின்றபோதும், மீண்டும் பசுபதி ஐயரின் உதவியை நாடிய ராஜன் தனது குடும்பத்தை அவருடன் திருவரங்கத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு இங்கிலாந்தை நோக்கி கப்பலில் பயணம் மேற்கொண்டார்.
இங்கிலாந்தில் மருத்துவம் பயின்றபோது வ.வே.சு. ஐயர் மற்றும் அவர் மூலமாக காந்தியை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்ற ராஜனின் கவனம் அதன்பிறகு நாட்டின் சுதந்திரத்திற்கு பாடுபட வேண்டும் என்று திரும்ப ஆரம்பித்தது. அத்துடன் மருத்துவப் படிப்பையும் விரைவாக முடித்துவிட விரும்பிய ராஜன், தான் சேமித்து வைத்த பணம் மற்றும் நண்பர்கள் உதவிய பணம் எல்லாம் செலவான நிலையிலும், மூன்று ஆண்டுகள் கடினமாக முயன்று, அனைத்திலும் முதல் மாணவனாக விருதுகளுடன் நாடு திரும்பினார்.
(ராஜன் மகிமை தொடரும்)
- கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com