

ஆஸ்திரேலியா கண்டத்தில் அதற்கே உரிய தனித்தன்மை வாய்ந்த உயிரினங்கள் அதிகம். பறவைகளில் பாலூட்டிகளில் மலர்களில் கடல்வாழ் உயிரினங்களில், மிகப் பெரும்பாலானவை ‘உள்ளூர் வகை’. அதாவது இந்த மண்டலத்தில் மட்டுமே காண முடியும். 700-க்கு மேற்பட்ட வகை ஊர்வன இங்கு உள்ளன.
ஆஸ்திரேலியக் காடுகளில் யூகலிப்டஸ் மரங்கள் மற்றும் விழுது விடும் மரங்கள் ஆகியன மிகுந்துள்ளன. கொடிய வன விலங்குகள், கடும் விஷம் கொண்ட பாம்புகள் ஏராளமாக இருந்தாலும் ஆஸ்திரேலியாவின் அடையாளம், நமக்குத் தெரியும் - கங்காரு! ஆஸ்திரேலியாவின் பல்லுயிர்த் தன்மையைப் பேணிக் காக்கும் பொருட்டு தேசியக் கொள்கை மூலம் ‘பாதுகாக்கப்பட்ட பகுதிகள்’ அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி இயற்கையான, உலகப் புராதன சின்னங்கள் 16 உள்ளன.
ஆஸ்திரேலியாவின் பிரதான நிலத்தில் இருந்து சுமார் 240 கி.மீ. தொலைவில் உள்ளது அதன் மாநிலங்களில் ஒன்றான டாஸ்மானியா தீவு. உலகின் 26-வது பெரிய தீவு இது. மிகச் சிறிய 1000 தீவுகளைக் கொண்டுள்ளது. இந்தத் தீவின் தலைநகரம் ஹோபர்ட்.
ஒரு காலத்தில் ஆஸ்திரேலிய மண்ணுடன்இணைந்து இருந்ததுதான் இந்த டாஸ்மானியா தீவு. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கடல் நீர் எழுந்து ‘பாஸ் ஸ்ட்ரெய்ட்’ உருவானதில் டாஸ்மானியா நீரால் சூழப்பட்ட தனித் தீவு ஆனது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மூதாதையர், சில ஆயிரம் பேர் மட்டும் இங்கு வாழ்ந்தனர். 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட ‘கருப்பு போர்’ முடிவில் இம்மண்ணின் மைந்தர்கள், குடியேறிகளால் அகற்றப்பட்டு விட்டனர்.
சுற்றுலா, விவசாயம், மீன்வளம் ஆகியன டாஸ்மானியா பொருளாதாரத்தின் முக்கிய ஆதாரம். டாஸ்மானியாவின் 40 சதவீத நிலம், வனங்களை உள்ளடக்கிய ‘பாதுகாக்கப்பட்ட மண்டலங்கள்’ ஆகும்.
இந்த வாரக் கேள்வி: தலைகீழ் முக்கோண வடிவில் இருக்கும் டான்சானியாவைச் சுற்றி சுமார் 1000 தீவுகள் உள்ளன. இவற்றில் பெரியது எது?
(பயணிப்போம்)
- கட்டுரையாளர், கல்வி, வேலைவாய்ப்பு போட்டித்தேர்வுக்கான வழிகாட்டி; தொடர்புக்கு: bbhaaskaran@gmail.com