

பொதுவாக ஒரு சிக்கலைத் தீர்க்க நாம் கடந்த வாரம் கண்டடைந்த உத்தியை தவிர வேறு உத்திகளும் இருக்கின்றனவா? என்று வினவினாள் அருட்செல்வி. நிறைய இருக்கின்றன என்றார் எழில். அவற்றுள் இன்னொன்றைக் கூறுங்கள் என்று வேண்டினான் கண்மணி.
கதிரேசன் ஒரு கைபேசியை வாங்க விரும்பினார். தன் நண்பர்களிடம் அவர்கள்வைத்திருக்கும் கைபேசிகளின் தன்மை, விலை ஆகியன போன்ற பல்வேறு தகவல்களைக் கேட்டறிந்து தனக்கு பொருத்தமான கைபேசியை வாங்கினார். இவ்வாறு ஒரு சிக்கலுக்குப் பலரின் கருத்துகளைக் கேட்டறிந்து பொருத்தமான தீர்வைத் தேர்ந்தெடுப்பதற்கு ‘சிந்தனைத் திரட்டல்’ உத்தி என்று பெயர் என்றார் எழில்.
சிந்தனை திரட்டல் உத்தியா? - எல்லாச் சிக்கல்களுக்கும் இந்த உத்தியைப் பயன்படுத்தலாமா? என்று வினவினாள் மதி. சின்னஞ்சிறு சிக்கல்களுக்குத் தேவையில்லை. ஆனால் அரிய, முக்கியமான, பணம் பெருந்தொகையாகத் தேவைப்படுகிற சிக்கல்களுக்கு இந்த உத்தி பொருத்தமானது என்று தெளிவுபடுத்தினார் எழில்.
தொடர்ந்து ‘ஏன்’ என வினவினால் எளிதில் முடிவெடுக்கலாம் என்றீர்கள். அதே உத்தியை சிக்கலைத் தீர்க்கவும் பயன்படுத்தலாமா? என்று வினவினான் காதர். ஏன் என்று வினவினால், சிக்கலின் முடிச்சை அறியலாம். பின்னர் அம்முடிச்சை அவிழ்க்க ‘அதற்கு என்ன செய்ய வேண்டும்’ எனத் தொடர்ந்து வினவ வேண்டும் என்றார் எழில். புரியவில்லை என்று உதட்டைப் பிதுக்கினான் காதர்.
என்ன செய்ய வேண்டும்? - முதற்பருவ இடைத்தேர்வில் கணிதப் பாடத்தில் மதி எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறாமைக்கு, அவர் கணிதக் கோட்பாடுகளைச் சரியாகப் புரிந்துகொள்ளாததே காரணம் என்று ஏன் என்று வினவிக் கண்டுபிடித்தோம். இப்பொழுது மதியும் முகிலும் உரையாட வேண்டும். மதி என்ன சொன்னாலும் முகில் அதற்கு என்ன செய்ய வேண்டும் என வினவ வேண்டும் என்றார் எழில்.
மதி: கணிதக் கோட்பாடுகள் சரியாகப் புரியவில்லை
முகில்: அதற்கு என்ன செய்ய வேண்டும்?
மதி: அவற்றை மனப்பாடம் செய்யாமல் புரிந்துகொள்ள வேண்டும்.
முகில்: அதற்கு என்ன செய்ய வேண்டும்?
மதி: அவற்றை எனது வாழ்க்கையோடு தொடர்புபடுத்த வேண்டும்
முகில்: அதற்கு என்ன செய்ய வேண்டும்?
மதி: அவற்றை அன்றாட வாழ்வில் பயன்படுத்த வேண்டும்.
அருமை என்று அவர்களைப் பாராட்டிய எழில், இப்பொழுது புரிகிறதா? என்று காதரிடம் வினவினார். புரிகிறது என்றான் அவன்.
நீங்கள் வேறு ஏதேனும் உத்தியைப் பயன்படுத்தி சிக்கலைத் தீர்த்து இருக்கிறீர்களா? என்று வினவினார் எழில். நான் என்று கையை உயர்த்திய முகில், இந்த குழந்தை அந்த பந்தை எடுக்க சரியான வழியைக் காட்டுக என்று எழுதி சிக்கலான பாதைகள் உள்ள படத்தோடு குழந்தை இதழ்களில் புதிர்கள் வெளிவரும் அல்லவா என்றான். ஆமாம் என்றாள் தங்கம் ஆர்வத்தோடு.
அப்புதிரில் குழந்தையின் அருகில் பல வழிகளும் பந்தின் அருகில் ஒரேயொரு வழியும் இருக்கும். பெரும்பாலோர் குழந்தையின் அருகிலிருக்கும் வழிகளில் ஒன்றைத்தேர்ந்தெடுத்து சரியான பாதையைக் கண்டுபிடிக்க முயல்வார்கள். ஆனால், நானோ பந்தின் அருகிலிருக்கும் அந்த ஒரேயொரு பாதையின் வழியாக குழந்தையிடும் வந்தடைவேன் என்றான் முகில். அருமை. இதற்கு முடிவிலிருந்து தொடங்கும் உத்தி என்று பெயர் என்றார் எழில்.
(தொடரும்)
- கட்டுரையாளர்: வாழ்க்கைத் திறன் கல்வித் திட்ட வடிவமைப்பாளர் மற்றும் பயிற்றுநர்; தொடர்புக்கு: ariaravelan@gmail.com