கழுகுக் கோட்டை 08: அறைகூவல் விடுத்து வீரத்தை சீண்டிய சவால்

கழுகுக் கோட்டை 08: அறைகூவல் விடுத்து வீரத்தை சீண்டிய சவால்
Updated on
2 min read

திருச்சேந்தியின் வீரர்களிடமிருந்து தப்பிக்க மலை உச்சிக்கு ஓடிவந்த குணபாலனுக்கு அதற்கு மேல் ஓட வழி ஏதும் இல்லாமல் போனது. அடுத்த அடியை எடுத்து வைக்கவும் இடம் இல்லை. என்ன செய்வது என்று யோசிக்கவும் நேரம் இல்லை. ஆனால், ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிந்தது. அந்த வீரர்களிடம் மட்டும் மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதே அது. எனவே, திகைத்து நின்ற குணபாலன் இரண்டு அடிகள் பின்னால் வந்து நின்றான். அவனது செய்கையால் திகைத்த வீரர்களுக்கு அடுத்து அவன் என்ன செய்யப்போகிறான் என்பது புரியாமல் நின்றனர்.

ஆனால், இரண்டடி பின்வாங்கிய குணபாலன் திடீரென முன்னோக்கி ஓடி அதல பாதாளத்தில் பாய்ந்தான். அவன் பின்வாங்கியது பள்ளத்தாக்கில் பாய்வதற்கே என்று அவன் பாய்ந்த பிறகே திருச்சேந்தியின் வீரர்களுக்குப் புரிந்தது. உடனே அவர்கள், ‘அடப்பாவி,நம் கையில் மாட்டி சாகாமல் இப்படிப் பாய்ந்து போய் செத்துத் தொலைந்தானே!’ என்று பேசிக்கொண்டு அங்கிருந்து கலைந்து சென்றார்கள். ஆனால், குணபாலன் பள்ளத்தாக்கில் பாய்ந்து குதித்ததை ஓர் உருவம் மறைவில் நின்று பார்த்துக் கொண்டிருந்தது.

அதே நேரம் மன்னர் சங்கடசேனன் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்தவுடன் ஒவ்வொருவராக மன்னரிடம் விடைபெற்றுச் சென்றுகொண்டிருந்தனர். திருச்சேந்தியும் மன்னரிடம் விடைபெற்றுத் தனது ஊர் நோக்கிக் குதிரையைச் செலுத்தினார். வந்த வேகத்தை விடக் குதிரையின் வேகம் குறைவாகவே இருந்தது. ஆனால், திருச்சேந்தியின் மனப் போராட்டமோ எல்லையற்ற வேகத்தில் இருந்தது. யார் இந்த மக்கள் புரட்சிப் படை? அவர்களின் தலைவன் யார்? அவர்களை நம்மால் ஒழித்துக்கட்ட முடியாதா? என்பது போன்ற கேள்விகள் அவரது மனதைக் குடைந்தன.

எனது தலைமையின்கீழ் பதினைந்தாயிரம் வீரர்கள் இருந்தும் பயனில்லாமல் இருக்கிறதே என்று ஆதங்கப்பட்டவாரே தனது மாளிகையை அடைந்தார். நாளை முதல் சில வீரர்களைத் துணைக்கு அழைத்துக்கொண்டு மக்கள் புரட்சிப் படைக்கு எதிரான எனது வேட்டையை ஆரம்பித்துவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்துகொண்டார். அன்று இரவு வெகுநேரம் தூக்கம் வராமல் புரண்டு தவித்தவர், குதிரையில் வந்த அசதியால் பின்னிரவில் தூங்கிப் போனார். காலையில் கண் விழித்ததும் அவரே எதிர்பாராமல் ஓலையில் வந்த ஒரு செய்தி அவருக்காகக் காத்திருந்தது. பணிப்பெண் ஒருத்தி வந்து கொடுத்த ஓலையைத் தனது இடது கையால் வாங்கி, அதில் இருந்த எழுத்துகளின் மீது தன் பார்வையை ஓடவிட்டார் திருச்சேந்தி.

அதில், ‘தென்னகத்தைத் தன்னகத்தே வைத்து ஆட்சி செய்யும் திருச்சேந்தி அவர்களே, அரண்மனையில் நடந்த ஆலோசனைக் கூட்டம் எப்படி இருந்தது? நமது நீண்ட நாள் பகைக்கு ஒரு தீர்வு கிடைக்கப் போகிறது. எப்படி? என்று நீங்கள் கேட்கலாம். அது உங்களால் முடியக்கூடியதுதான். இன்று அந்தி சாயும் வேளையில் கழுகுமலை அடிவாரத்தில் உங்களுக்காக காத்திருப்பேன். சமாதானம் பேசுவதாக இருந்தால் நீங்கள் மட்டும் வரலாம். அதற்கும்பயம் என்றால், உங்களது படையை அனுப்புங்கள். எதிர்பார்த்துக் காத்திருப்பேன். இப்படிக்கு, தலைவன், மக்கள் புரட்சிப் படை!’ என்ற வார்த்தைகளைப் படித்ததும் திருச்சேந்திக்குக் கோபம் தலைக்கேறியது. கண்கள் சிவந்தன. மீசையுடன் சேர்ந்து உதடுகளும் துடித்தன.

ஆத்திரத்தில் அந்த ஓலையைப் பிய்த்துப் போட்டார். ‘யாரங்கே? படைகள்தயாராகட்டும். ஒரு சிறு கூட்டத்தின் கொட்டத்தை முடிக்கப் போகிறோம். தயாராகுங்கள்’ என்றார். ஏற்கெனவே அந்த ஓலைச் செய்தியைப் படித்து முடித்திருந்ததால் திருச்சேந்தியின் மனைவி அவரருகே வந்து, ‘அவசரப்படாதீர்கள். பொறுமையுடன் இந்த விஷயத்தைக் கையாளுங்கள். மன்னருக்குத் தகவல் அனுப்புங்கள்’ என்றார். அதனைக் காதில் வாங்கிக்கொள்ளாத திருச்சேந்தி, ‘என்னிடமே சவால் விடுவதற்கும் ஒருவன் இந்த மண்ணில் இருக்கிறானென்றால், அதை எப்படி எனது வீரம் பொறுக்கும்? அவனுக்கு எமனின் கோட்டைக்கு வழிகாட்டாமல் விடமாட்டேன்’ என்று கர்ஜித்தார்.

‘தயவுசெய்து எனது பேச்சைக் கேளுங்கள். இது மோசமான கூட்டம் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். எனவே, மன்னரின் உதவியை நாடுங்கள்’ என்று மறுபடியும் அவரது மனைவி அவருக்கு ஆலோசனை வழங்கினார். ‘பயந்தால் படையை அனுப்பு என்று என் தன்மானத்தையே சீண்டிவிட்டவனிடம் கோழையைப் போல நடந்துகொள்ளச் சொல்கிறாயா?’ என்று எதிர்க்கேள்வி கேட்டார் திருச்சேந்தி.

அவரே தொடர்ந்து, ‘நான் சுத்தமான வீரன்தான் என்பதை நிரூபிக்கப் போகிறேன். எப்படி என்கிறாயா? அவன் சொன்னபடி சமாதானம் பேசுவதாகப் போகப் போகிறேன். தனியாகப் போய் எனது வீரத்தை நிலைநாட்டப் போகிறேன். ஹாஹ்.. ஹாஹ்... ஹா...’ என்று சிரித்தார்.

(தொடரும்)

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in