

அயர்லாந்தைச் சேர்ந்த இயற்பியல் வல்லுநர், வானியலாளர், கணிதமேதையான சர் வில்லியம் ரோவன் ஹாமில்டன் (Sir William Rowan Hamilton) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 4).
# அயர்லாந்து தலைநகர் டப்ளினில் (1805) பிறந்தார். தந்தை வழக்கறி ஞர். பணி தொடர்பாக அவர் அதிக நேரம் வெளியே சென்றுவிடுவதால், குழந்தைகளோடு அதிக நேரம் செலவிட முடியவில்லை. இதனால், 3 வயது மகனை உறவினர் ஜேம்ஸ் ஹாமில்டனுடன் அனுப்பிவைத்தார்.
# சிறந்த கல்வியாளரும், மொழியியல் அறிஞருமான அவருடன் வேறு ஊருக்குச் சென்றார். அவர் நடத்திய பள்ளியிலேயே பயின்றார். மொழிகளை விரைவாகக் கற்றார். ஐரோப்பிய மொழிகள், பாரசீகம், அராபிய மொழி, சமஸ்கிருதம், மராத்தி, மலாய் உள்ளிட்ட 15 மொழி களை 13 வயதுக்குள் கற்றுத் தேர்ந்தார். பின்னாளில், ஓய்வு நேரங்களில் பாரசீக, அராபிய மொழி இலக்கியங்களை வாசித்தார்.
# கணிதம், அறிவியலிலும் சிறந்து விளங்கினார். லத்தீன் மொழியில் எழுதப்பட்டிருந்த வடிவியல் அறிமுக நூலையும் பிரெஞ்ச் மொழியில் வெளிவந்திருந்த விரிவான வடிவியல் நூலையும் படித்ததால், அதில்ஆர்வம் பிறந்தது. பல்வேறு மொழிகளில் வெளிவந்த அறிவியல், கணிதநூல்களை வாசித்து அறிவை மேம்படுத்திக்கொண்டார்.
# நியூட்டனின் ‘அரித்மேடிகா யுனிவெர்சலிஸ்’, ‘பிரின்சிபியா’, பியரி லாப்ளேசின் ‘மெக்கானிக் செலிஸ்டே’ ஆகிய நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். தான் படித்த நூல்களில் இடம்பெற்றிருந்த கணித, அறிவியல், வானியல் தொடர்பான கண்டுபிடிப்புகள், தீர்வுகளில் உள்ள தவறுகளை ஆசிரியரிடம் சுட்டிக்காட்டும் அளவுக்கு 17 வயதுக்குள் திறன் பெற்றிருந்தார்.
# ட்ரினிட்டி கல்லூரியில் பயின்றார். கணிதம், வானியல் பயின்றார். பட்டப்படிப்பு முடிப்பதற்கு முன்பே பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அங்கேயே முதுகலைப் பட்டமும் பெற்றார். 22-வது வயதில் டன்சிங் அப்சர்வேட்டரியில் ஆராய்ச்சி மாணவராக இணைந்து, வானியல் கண்காணிப்பில் ஈடுபட்டார்.
# வானியல் தொடர்பான வெவ்வேறு களங்களில் விரிவுரைகள் நிகழ்த்தினார். கணித ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு, சிக்கல் எண்களைக் கண்டறிந்தார். பிளாட்டோனிக் திடப்பொருள்கள் குறித்து ஆராய்ந்தார். இவை ஹாமில்டன் சுற்றுகள் எனப்படுகின்றன.
# இயக்கவியல், ஒளியியல் அமைப்புகள் குறித்து விரிவாக ஆராய்ச்சி மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சிகள் மூலம்புதிய கணிதக் கோட்பாடுகள், நுட்பங்களைக் கண்டறிந்தார். அவற்றை கட்டுரைகளாக வெளியிட்டார். ஹாமில்டனின் முதன்மைச் செயல் பாடு (Hamilton’s principal function) என்று அழைக்கப்படும் ஒற்றைச் செயல்பாட்டைக் கண்டறிந்தார்.
# ஒளி அலைக் கோட்பாட்டை நிறுவ இக்கோட்பாடு உதவியது. இதுகுறித்த இவரது கட்டுரைகள் பல தொகுதிகளாக வெளிவந்தன. தற்போது ஹாமில்டனியன் இயக்கவியல் (Hamiltonian Mechanics) என்று குறிப்பிடப்படும் நியூட்டனின் இயக்க முறைமைகளை மறுசீரமைத்த இவரது வழிமுறை, கணித இயற்பியல் துறையில் இவரது முக்கியப் பங்களிப்பாகப் போற்றப்படுகிறது.
# நவீன மின்காந்தவியல், குவான்டம் இயக்கவியல் ஆகிய கோட் பாடுகளைஆராய்வதற்கான முக்கிய வழிமுறையாகவும் இது கருதப் படுகிறது. இவரது பல கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளி வந்தன. ராயல் ஐரீஷ் அகாடமியின் கன்னிங்ஹாம் பதக்கம் பெற்றார். வானியல், கணிதம், அறிவியல் அமைப்புகளில் அங்கம் வகித்தார்.
# ராயல் ஐரீஷ் அகாடமி தலைவராகவும் செயல்பட்டார். இயக்கவியல், ஒளியியல், இயற்கணிதம் உள்ளிட்ட துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய சர் வில்லியம் ரோவன் ஹாமில்டன் 60-வது வயதில் (1865) மறைந்தார்.