

கல்யாண சமையல் சாதம்
காய் கறிகளும் ப்ரமாதம் -
அந்த கௌரவப்ரசாதம் இதுவே எனக்கு போதும் என்னும் பாடல் அனைவரும் அறிந்ததே. காய் கறிகளைக் குழந்தைகள் விரும்பி உண்கிறார்களா? வயதிற்கு ஏற்ற எடையளவில் இருக்கின்றார்களா? பிறந்தவுடன் கொழுகொழு வென்று குழந்தை இருந்தால் ஆரோக்கியமான குழந்தையாக பெற்றோர் நினைக்கின்றனர்.
ஒல்லியாக இருக்கும் குழந்தைகளை நோஞ்சான் என பரிகசிக்கும் நிலையும் உள்ளது. ஒரு குழந்தை ஆரோக்கியமானதாக இருக்கின்றதா என குழந்தையின் ஒவ்வொரு செயலையும் உற்றுநோக்க வேண்டும். பின்பு குழந்தையின் வயதிற்கும் தேவைக்கும் ஏற்ற சத்தான உணவினை வழங்க வேண்டும். சத்தான உணவில் முதலில் காய்கறிகளைச் சேர்க்க வேண்டும்.
காய்கறிகள்: இன்று காய்கறிகள் சந்தைக்கு எப்படிவருகின்றது என்பதையும் கவனிக்க வேண்டும். நிலமும் மண்ணும் விதைகளும் மருந்தாக மாறிவிட்டது. காய்கறிகள் பதப்படுத்தப்படுகின்றன. அதனால் ஏற்படும் நன்மைகளை விட தீமைகள் அதிகமாக உள்ளன. இன்றுசிலா் மாடித்தோட்டம் அமைக்க தொடங்கிவிட்டனர். தம் குடும்பத்திற்குத் தேவையான மருந்தில்லா காய்கறிகளைத் தாமே விளைவித்து தொடங்கியிருக்கின்றனர்.
‘‘காய்கறி என்ற சொல் முதலில் காய்களைக் மட்டும் குறிக்கவில்லை. காய்களையும் மிளகையும் சேர்த்தே காய்கறியென்று பழங்காலத்தில் அழைத்தனர். கி.பி 15ஆம் நூற்றாண்டில்தான் சிலி நாட்டில் இருந்து வந்த மிளகாய் தமிழ்நாட்டிற்குள் நுழைந்தது. அதுவரை தமிழர் சமையலில் உறைப்புச் சுவைக்காகக் கறுப்பு மிளகினை மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளனர். இறைச்சி உணவிற்கு அதிகமாக கறியினைப் பயன்படுத்தியதால் இறைச்சியே பின்னாளில் கறி எனப் பிரிந்து வழங்கப்பட்டுள்ளது என தொ.பரமசிவம் குறிப்பிடுகின்றார்”.
சிலம்பில் கண்ணகி பலாக்காய், வெள்ளரிக்காய், மாதுளங்காய், மாவின் கனி, வாழைக்காய், நெல் அரிசி, பால், தயிர், நெய் முதலிய பொருட்களைக் கொண்டு கோவலனுக்காக உணவு சமைத்தாள் என்ற குறிப்பு உள்ளது. கத்தரிக்காய், குறைந்த கலோரி அதிகநார்ச்சத்து கொண்டது எடை குறைப்புக்கும் , கொலஸ்ட்ரால் குறைப்பிற்கும் மிக முக்கியமானது. சர்க்கரை. புற்றுநோய்க்கு மிகவும் பலன் அளிக்கக்கூடியதென்று மருத்துவம் கூறுகின்றது.
வெண்டைக்காய் சாப்பிட்டால் கணக்கு வரும் என்று யாரோ சொல்லி வைத்தது கதைதான். வெண்டைக்காய் சாப்பிட்டால் குளிர்ச்சி தரும். வயிற்றுப் புண் நீக்கும். காய்களை விரும்பி சாப்பிடாத குழந்தைகளுக்கு மாற்று வடிவங்களிலோ, சுவையிலோ செய்து கொடுக்கலாம்.
வெண்டைக்காய் புலாவ்
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி 1 கப்
வெண்டைக்காய் 10
இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி
கரம் மசாலா
சீரகத்ததூள்
முந்திரிப் பருப்பு
வெங்காயம் 4
தக்காளி 1
எண்ணெய் 2 மேசைக்கரண்டி
தனியாத்தூள் 1/2
பாஸ்மதி பத்து நிமிடம் ஊறவைத்துஉதிரி உதிரியாக வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். வெங்காயம் தக்காளியைப் பொடியாக நறுக்கி வைத்து கொள்ள வேண்டும். வெண்டைக்காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அதை எண்ணெயில் வறுத்துக்கொள்ள வேண்டும். பின்பு இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போகும்வரை வதக்க வேண்டும். அடுத்து வெங்காயம், தக்காளியை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்க வேண்டும்.
நன்கு வதங்கியதும் மிளகாய்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், கரம் மசாலா சேர்க்க வேண்டும். வெண்டைக்காய் நன்கு வெந்தவுடன் வடித்து வைத்த சோற்றை சேர்க்க வேண்டும். பாஸ்மதிக்குப் பதிலாக பச்சரிசியிலும் செய்யலாம். இறுதியாக கொத்தமல்லி தூவி இறக்க வேண்டும்.
- ம.பரிமளா தேவி, முதுகலைத் தமிழாசிரியா், அரசு மேல்நிலைப்பள்ளி, வெலக்கல் நத்தம், திருப்பத்தூர் மாவட்டம்.