பெற்றோரால் ஆசிரியராகிவிட முடியுமா?

பெற்றோரால் ஆசிரியராகிவிட முடியுமா?
Updated on
2 min read

நீங்கள் மாலைநேரத்தில் குழந்தைகள் படிக்கும்போது அருகிலிருந்து கவனிக்கும் பெற்றோரா? அவர்கள் படித்துவிட்டோம் என்று சொல்லும்போது எங்கே நீ படித்ததை எனக்குச் சொல் பார்க்கலாம் என்றோ, எங்கே நான் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல் என்றோ பரிசோதிக்கும் பெற்றோரா?

குழந்தைகள் பாடப்பகுதியில் தங்களுக்கு ஏற்படும் ஐயங்களை உங்களிடம் கேட்கும்போது ஆகா இதுதான் அருமையான வாய்ப்பு என்று நினைத்துஅவர்களுக்குப் பாடம் நடத்தும் பெற்றோரா? அப்படியானால் கீழ்வரும் கருத்தை நீங்கள் அவசியம் மனதிற்கொள்ள வேண்டும்.

பாடங்களுக்கு இடையே: தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிப்பாடங்களுக்கும் கணிதம், அறிவியல்,சமூக அறிவியல் போன்ற பாடங்களுக்கும் ஏதேனும் வேறுபாடு உண்டா?கற்கும் முறையிலும் கற்பிக்கும் முறையிலும் வேறுபாடு வேண்டுமா? வேறுபாடு வேண்டும் என்றால் ஏன் என்று பார்ப்போம்.

அறிவியல் பாடத்திலுள்ள சொற்களுக்கும் மொழிப்பாடத்திலுள்ள சொற்களுக்கும் பெரிய வேறுபாடு உண்டு. எடுத்துக்காட்டாக, விலங்குகள் என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். இந்தச் சொல்லைக் கேட்டதும் நம் மனதில் சிங்கம், புலி, கரடி, யானை... போன்றவற்றின் பிம்பங்கள்தாம் வருகின்றன. ஆனால், அறிவியலில் தாவரங்களைத் தவிர உயிருள்ள அனைத்தும் விலங்குகள் என்ற சொல்லுக்குள் அடங்கும். புழு, பூச்சிகளோடு மனிதர்களாகிய நாமும் இச்சொல்லுக்குள் வருகிறோம்.

அதுபோல் நட்சத்திரம் என்ற சொல்லைக் கேட்டால் சாதாரணமாக சூரியனை நாம் சேர்ப்பதில்லை. ஆனால், தானாக ஒளிரும் அனைத்துமே நட்சத்திரங்கள் என்று அறிவியல் பாடம் சொல்கிறது. எனவே நட்சத்திரம் என்ற சொல்லுக்குள் சூரியனும் அடங்கும்.

கணிதப் பாடத்தில் வரும் பெருக்கல் என்ற சொல்லுக்கும் சாதாரணமாக நாம் சொல்லும் பெருகுவது என்பதற்கும் வேறுபாடு உண்டு. ஆற்றில் வெள்ளம் பெருகியது என்ற வாக்கியம் வெள்ளத்தின் அளவு கூடியது என்பதைக் குறிப்பிடுகிறது. ஆனால், கணிதப்பாடத்தில் பெருக்கல் என்பது எப்போதும் பெருக்குத்தொகை கூடுதலாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஓர் எண்ணை ஒன்றால் பெருக்கினால் அதே எண்தான் பெருக்குத் தொகையாக வரும். ஓர் எண்ணைப் பூஜ்ஜியத்தால் பெருக்கினால் பூஜ்ஜியமே விடையாக வரும்.

இங்கு பெருக்குத் தொகை குறைகிறது. அதுபோல் ஓர் எண்ணை ஒன்றைவிடக் குறைவான மதிப்புள்ள பின்னங்களால் பெருக்கும்போதும் பெருக்குத்தொகை அந்த எண்ணைவிடக் குறைகிறது. எனவே பெருக்கல் என்பது எப்போதும் பெருக வேண்டும் என்று கணிதப்பாடத்தில் எதிர்பார்க்க முடியாதல்லவா?

வரையறைகள் முக்கியம்: கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்களில் ஒவ்வொரு சொல்லும் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் வருகின்றன. அவ்வாறு வரையறைப்படுத்தும்போதுதான் பொருட்களை வகைப்படுத்த முடியும். அவ்வாறு வகைப்படுத்தும்போதுதான் அதன் பண்புகளை, தனித்தன்மைகளை அறியமுடியும். வௌவாலை நாம் பாலூட்டி என்று அழைப்பதற்கு இந்த வரையறைதான் காரணம். பட்டாம் பூச்சியைஏன் பறவையென்று அழைப்பதில்லை என்பதற்கும் இதுதான் காரணம்.

அறிவியலில் ‘மூழ்குவது’ என்று சொல்லும்போது ஒரு பொருள் பாத்திரத்தின் அடிப்பகுதியைத் தொடவேண்டுமா? முழுப்பகுதியும் தண்ணீருக்குள் மூழ்கி அதே நேரத்தில் பாத்திரத்தின் அடிப்பகுதியைத் தொடாமல் இருக்க வேண்டுமா? இல்லை பொருளின் பெரும்பான்மைப் பகுதி தண்ணீருக்குள் இருக்க மேற்பகுதியிலேயே இருப்பதா?

ப்ளூட்டோ ஒரு கோள் அல்ல என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள் என்ற செய்தியை சில வருடங்களுக்கு முன்பு நாம் படித்தோம். இது ஏன்? ஒரு குறிப்பிட்ட சுற்றுப்பாதையில் மட்டுமே பயணிக்க வேண்டும் என்பது கோளின் ஒரு பண்பு. ஆனால், ப்ளூட்டோவுக்கு ஒரு குறிப்பிட்ட சுற்றுப்பாதையில்லை என்பதைக் கண்டறிந்த போது அது கோள் என்ற வரையறைக்குள் வராது என்று அறிவித்தனர். இப்போது அது விண்கல் மட்டுமே.

இந்த வேறுபாடு இருப்பதால் பலவேளைகளில் அறிவியல் கருத்துகளைப் புரிந்துகொள்வதில் குழந்தைகளுக்குக் குழப்பம் ஏற்படுவதுண்டு.

அது மட்டுமல்ல கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களின் அணுகுமுறைகளும், அப்பாடங்களைக் கற்பிப்பதற்கான நோக்கங்களும் மொழிப்பாடத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. அதனால் மொழிப்பாடம் கற்பிப்பதுபோல், இப்பாடங்களைக் கற்பிக்கக் கூடாது.

கற்பிப்பது ஒரு கலை. உளவியல் கருத்துகளால் கட்டமைக்கப்பட்ட கலை.அதற்கு ஆழமான புரிதலும் விரிவான பயிற்சியும் தேவை. இது புரியாமல் நாம் தவறான முறையில் கற்பித்தால் நினைவுபடுத்திச் சொல்வதுதான் படிப்புஎன்று குழந்தைகள் தவறாகப் புரிந்துகொள்ள வாய்ப்பு இருக்கிறது. எனவே சற்று கவனம் தேவை.

- கட்டுரையாளர்: மூத்த கல்வியாளர், கல்வி இயக்குநர், ‘Qrius Learning Initiatives’, கோவை; தொடர்புக்கு: rajendran@qrius.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in