

சென்ற வாரம் ஒரு பள்ளிச் சந்திப்பின்போது மற்ற மாணவியர் எல்லோரும் பெண்கள் நலம் சார்ந்த கேள்விகளை என்னிடம் எழுப்பினர். அதில் பிளஸ் 2 மாணவி அகல்யா மட்டும் வேறு ஒரு கேள்வியைக் கேட்டார்.
‘‘டாக்டர்... படிச்சு முடிச்சதும் ஒரு ப்யூட்டி கன்சல்டண்ட்டா ஆகணும்னு எனக்கு ஆசை. ’ஃபேர்னெஸ் கிரீம்', முடி உதிர்தல் பத்தின உங்க 'தயங்காமல் கேளுங்கள்' பதிவுகள் எல்லாம் எனக்கு ரொம்ப பயனுள்ளதா இருந்தது. கூடவே, நகம் பத்தியும் எனக்கு சில கேள்விகள் இருக்கு. அதை உங்க கிட்ட கேக்கலாமா..?" என்றார்.
கிட்டத்தட்ட ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சியையே நடத்திவிட்டார் அந்த மாணவி என்று சொல்லலாம். கொஞ்சம் நீளமாக இருந்தாலும் அது உங்களுக்கும் உபயோகப்படும் என்பதால் அது அப்படியே உங்களுக்காக.
அகல்யா: ‘‘நகம் என்பது நம் உடலின் ஒரு உறுப்பு இல்லை என்கிறார்கள். பிறகு அது ஏன் நம் உடலில் இருக்கிறது? உண்மையில் அது நம் உடலில் என்னதான் செய்கிறது டாக்டர்?”
பதில்: தொடர்ந்து வாசித்து வருவதற்கு வாழ்த்துகள் அகல்யா. நகம் என்பது ஓர்உறுப்பா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள, நாம் முதலில் நம் நகத்தைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.
நமது விரல்களைப் பாதுகாக்க அவற்றின் நுனிகளில் ஒரு கேடயம் போல் இருப்பவை நகங்கள். தலைமுடி போலவே கெரட்டின் என்ற கடினமான புரதத்தால் நகங்கள் ஆனவை. பார்க்க நகம் கெட்டியான ஒற்றைப்பொருள் போல தோன்றினாலும் உண்மையில் அது பல அடுக்குகளால் ஆனது. இதில் நம் கண்ணுக்குத் தெரியும் தட்டையான பகுதி 'nail plate' எனப்படும்.
இந்த நெய்ல் பிளேட் ஒளி ஊருவக்கூடியதாகவும், அதன் கீழ் ஓடும் ரத்த நாளங்களை அது பிரதிபலிக்கக் கூடியதாகவும் இருப்பதால் நாம் எப்போதும் பார்க்கக் கூடிய பிங்க் நிறத்தில் அவை இருக்கின்றன. இந்த வெளிப்புற நகத்தின் கீழ்பாகத்தில் வெண்ணிறமாக, பிறை போலத் தெரிகிறதே அது 'lunula' என அழைக்கப்படுகிறது. நகத்துக்கான வேராகத் திகழும் நகக்கண்ணின் (nail bed) ஒரு பாகம் இந்த லுனுலா.
மொத்த நகமும் இந்த நகக்கண்ணிலிருந்து வெளிவரும் இறந்த செல்களால் ஆனதுதான். அதாவது தோலின் அடியில் புதிய செல்கள் உற்பத்தி ஆகும்போது அவை பழைய செல்களை வெளியே தள்ளுகின்றன. அவற்றில் கெரட்டின் அதிகமுள்ள இறந்த செல்கள் ஒன்று சேர்ந்து வெளிப்புறத்தில் தெரியும் நகமாக மாறுகின்றன. அதனால்தான் நகம் என்பதை உறுப்பு அல்ல என்று சொல்கிறார்கள்.
என்றாலும், அது விரல்களுக்கு பாதுகாப்பாக விளங்குவதுடன், விரல்களின் தொடு உணர்வு, அழுத்த உணர்வு மற்றும் பொருட்களை உறித்தல், பிரித்தல் ஆகியவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. அத்துடன், தலைமுடியைப் போலவே நகங்களும் நரம்புகள் அற்றவை என்பதால் தான் அவற்றை வெட்டும்போது நமக்கு வலிப்பதில்லை.
(தொடரும்)
- கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்; தொடர்புக்கு: savidhasasi@gmail.com