இவரை தெரியுமா? - 6: மாயாஜாலம் அல்ல அறிவியல் என்றவர்

இவரை தெரியுமா? - 6: மாயாஜாலம் அல்ல அறிவியல் என்றவர்
Updated on
1 min read

பிரெஞ்சு புரட்சி, 1794ஆம் ஆண்டு மே மாதம் எட்டாம் தேதி உச்சத்தில் இருந்தது. பாரிஸ் நகரில் 27 அரசு அதிகாரிகளை கில்லெட்டின் இயந்திரத்தின் முன்னால், புரட்சியாளர்கள் மண்டியிடச் செய்திருந்தார்கள்.

மன்னராட்சி காலத்தில் வரி வசூலிக்கும் அதிகாரிகளாய் இருந்த இவர்கள் எல்லோரையும், ஒரே நாளில் கொலை செய்வதற்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். கில்லெட்டின் இயந்திரம் வரிசையாக இரத்தம் குடித்துக் கொண்டிருந்தது.

இப்போது இலவாசியேவின் (Lavoisier) முறை. உடனே அருகிலிருந்த நீதிபதியிடம், “எனது ஆராய்ச்சிகள் பாதியிலேயே நிற்கின்றன. அதை முடிக்கும்வரை காலஅவகாசம் கொடுங்கள்” என்று இறைஞ்சினார். “புதிய குடியரசுக்கு விஞ்ஞானிகளின் உதவியெல்லாம் தேவையில்லை. நீங்கள் இறந்துபோகலாம்” என்று நீதிபதி கைகழுவி விட்டார். அடுத்த கணம், உலகம் கொண்டாடவிருந்த மாபெரும் விஞ்ஞானி இரு துண்டாகத் துடிதுடித்து இறந்தார்.

இரவெல்லாம் ஆய்வு: அவர் தொடங்கி வைத்த பல ஆய்வுகளும் அவரோடு மண்ணுக்குள் மண்ணானது. யார் இந்த இலவாசியே? வேதியியல் உலகில் இவர் செய்த சாதனைகள் என்ன?

1743ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி பாரிஸின் செல்வந்த குடும்பம் ஒன்றில் அந்துவான் இலவாசியே (Antoine Lavoisier) பிறந்தார். அவரின் தந்தை நகரின் புகழ்பெற்ற வக்கீல். தாய் வழி தாத்தா, பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் நீதிபதியாக இருந்தார்.

சிறுவயதிலேயே தாயை இழந்த இலவாசியே, அத்தையின் அரவணைப்பில் பாலகனாக வளர்ந்தார். பிரான்ஸின் புகழ்பெற்ற பள்ளிக்கூடத்தில் தன் தொடக்கக் கல்வியை முடித்துவிட்டு, 21வது வயதில் சட்டம் படித்து வழக்கறிஞர் ஆனார்‌.

தந்தை வழியில் சட்டம் பயின்றாலும் அவருக்கு அறிவியல் மீது அதிக நாட்டம் இருந்தது. இலவாசியே வாழ்ந்த காலத்தில் வேதியியல் குறித்த தெளிவான பார்வை ஏற்படவில்லை. இரசவாதம் எனச் சொல்லப்படும் ஜோதிட, மந்திரக்கார, மாயாஜால வித்தைகளைத்தான் அறிவியல் என நம்பி வந்தார்கள். இவற்றைப் பகுத்தறிவுவாதத்தால் மாற்றி, உண்மையான அறிவியல் ஆராய்ச்சிக்கு வித்திட்டதில் இலவாசியேவின் பங்கு அளப்பரியது.

தொடக்கத்தில் நிலவியல் சார்ந்து படித்தார். இது சம்பந்தப்பட்ட ஆய்வுகளை கட்டுரையாக வெளியிட்டு, மிக இளம் வயதில் ராயல் அறிவியல் கழகத்தின் உறுப்பினராகச் சேர்ந்தார். அறிவியல் நாட்டம் மிகுந்து, ஆராய்ச்சிகள் மேற்கொண்டாலும் அவற்றால் சம்பாத்தியம் ஏற்படுவதாயில்லை.

ஆகவே வரி வசூலிக்கும் அதிகாரியாக பகலில் அலுவலகம் சென்றார். இரவில் கண் விழித்து அறிவியல் ஆய்வுகள் மேற்கொண்டார். 1771ஆம் ஆண்டு மாரி ஆனி பீரெட் பால்சி என்பவரோடு திருமணம் நடந்தது.

மாரியும் இலவாசியேவின் அறிவியல் ஆராய்ச்சியில் வரைந்துகொடுப்பது, முடிவுகளை ஆவணப்படுத்துவது என்று பலவாறு உதவி செய்தார். தன் கணவருக்காக ஆங்கில மொழியைச் சிரமப்பட்டு படித்து,ஆங்கிலேய விஞ்ஞானிகளின் கட்டுரைகளை வாசித்து பொருள் சொல்வார்.

- கட்டுரையாளர்: இயற்பெயர் சதீஸ்குமார். மொழிபெயர்ப்பாளர், ஆய்வு மாணவர், பாரதியார் பல்கலைக்கழகம்; தொடர்புக்கு: iskrathewriter@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in